தனுஷ் ஜோடியாக ‘மாப்பிள்ளை’ படத்தில் நடித்த ஹன்சிகா மோத்வானியின் ஐம்பதாவது படம் ‘மஹா’. விரைவில் தியேட்டரில் வெளியாகவிருக்கும் அந்தப் படத்தின் இசை வெளியீட்டுக்காக மும்பையிலிருந்து சென்னை வந்திருந்த் ஹன்சிகா காமதேனு மின்னிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியிலிருந்து...
தமிழில் கடந்த 10 ஆண்டுகளாக கதாநாயகியாக நடித்து வருகிறீர்கள். பேசாமல் சென்னையிலேயே குடியேறிவிட வேண்டியதுதானே?
சென்னையும் தமிழ்நாடும் என்னைக் கொண்டாடும் தேசம். இங்கே நான் விருந்தாளி மட்டும்தான். விருந்தாளி அவருக்குரிய பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். நான் பிறந்து வளர்ந்த மும்பையை விட்டு வரச் சொல்கிறீர்களா... அது முடியாத காரியம்.
‘மஹா’ படத்தில் உங்களுடன் சிம்பு இணைந்து நடித்திருக்கிறாரே?
சிம்பு போன்ற மாஸ் ஹீரோ, ஒரு ‘ஃபீமேல் சென்ட்ரிக்’ படத்தில் நடித்துக்கொடுத்தது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. சிம்பு நல்ல கதைகளை மதிப்பவர். அவர் நடித்துள்ளதைத் தாண்டி ‘மஹா’வில் பல சிறப்புகள் உள்ளன. இது எனது 50-வது படம். இதுவரை நான் சீரியஸான கேரக்டர் எதுவும் செய்ததில்லை. முதல் முறையாக அப்படியொரு ரோலில் நடித்திருக்கிறேன். ஒரு தாய்க்கும் மகளுக்குமான கதை. மிகவும் துணிச்சலான பெண்ணாக நடித்திருக்கிறேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது. இந்தப் படத்துக்குப் பிறகு ஹன்சிகாவை வெறும் பொம்மை ஹீரோயின் என்று யாரும் சொல்லமாட்டார்கள்; மாறாக, பாராட்டுவார்கள்.
நீங்கள் சிறுமியாக நடிக்க வந்து 19 வருடங்கள் ஆகிறது. 50 படங்கள் என்பதை சாதனையாகப் பார்க்கிறீர்களா?
வெளியிலிருந்து பார்க்கும் பலருக்கும் இது சாதனை போல் தோன்றலாம். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. இதுவொரு தொடக்கம் என்று மட்டுமே நினைக்கிறேன். இப்போது என்னுடைய 60-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த ஆண்டு எனது படங்கள் வரிசையாக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவிருக்கின்றன.
கரோனா பெருந்தொற்றுக் காலம் உங்களுக்கு எதைக் கற்றுக்கொடுத்தது?
நான் ஒரே இடத்தில் அமைதியாக அமர்ந்திருக்கும் பெண் இல்லை. ஆனால், அமைதியாக வீட்டில் இருக்க எனக்கு கோவிட் கற்றுக் கொடுத்தது. நிறைய சிந்திக்கவும் செய்தேன். தொற்றுக் காலம் முடிவுக்கு வந்ததுமே வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயணம் போகவேண்டும் என்று நினைக்கவில்லை. மாறாக, அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்று ஓடிக்கொண்டிருக்கிறேன். ‘ஷாட் ரெடி’, ‘கெட் ரெடி’ என்கிற சத்தங்களையும் எனது செட் வாழ்க்கையையும் கரோனா காலத்தில் ரொம்பவே மிஸ் செய்தேன். இப்போது எனக்கு சினிமாவில் இடைவிடாமல் வேலை செய்வதுதான் பிடித்திருக்கிறது. ஏனென்றால், 2 வருட காலம் வீட்டில் அமைதியாக இரு என்று கோவிட் உட்கார வைத்தது என்னை வெடித்துக் கிளம்ப வைத்திருக்கிறது.
தமிழில் நீங்கள் நடித்த படங்களில் எவையெல்லாம் முழு திருப்தியைக் கொடுத்தன?
இயக்குநர்களின் புரொபைல் பார்த்து, அவர்களை நம்பி சில படங்களில் கதை கேட்காமல் நடித்திருக்கிறேன். ஆனால், பிடிக்காமல் நான் எந்தப் படத்திலும் நடித்ததில்லை. தமிழில் நான் நடித்த பல படங்கள் இப்போதும் என் மனதுக்கு நெருக்கமானவை தான். அவற்றில், ‘எங்கேயும் காதல்’, ’ரோமியோ ஜூலியட்’, ‘வேலாயுதம்’, ’போகன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ ஆகிய படங்களை பார்த்து ரொம்பவே ரசித்திருக்கிறேன்.
சினிமா நடிப்புக்கு அப்பால் ஹன்சிகாவிடம் இருக்கும் தனித் திறமை..?
என்னை ஒரு ஓவியர் என்று அறிமுகப்படுத்திக் கொள்வதில் எப்போதுமே பெருமை உண்டு. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தூரிகையுடன் எனது ஸ்டுடியோவுக்குள் நுழைந்துவிடுவேன். வண்ணங்களோடு 24 மணிநேரம் இருக்கச் சொன்னாலும் இருப்பேன். நான் வரைந்த ஓவியங்களை விரைவில் கண்காட்சியாக வைக்க இருக்கிறேன்.
உங்கள் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாவதில் விருப்பம் உண்டா?
ஓடிடி நம் ரசிகர்களுக்கு ஒரு சாய்ஸ் அவ்வளவுதான்! ஆனால், கொண்டாட்டம் என்பது பெரிய திரையில் பார்க்கும்போது ஏற்படும் இன்பம்தான். பாப்கான் கொறித்துக் கொண்டே, குளிர்பானம் உரிஞ்சிக் கொண்டே படம் பார்த்து, கைதட்டி விசிலடித்து மகிழ்வது திரையரங்கில் மட்டுமே சாத்தியம். நம்முடன் படம் பார்க்கும் சக ரசிகர்கள் நமக்கு யார் என்றே தெரியாது. ஆனால், அவர்கள் 3 மணி நேரத்துக்கு நமக்கு புன்முறுவல் செய்து நண்பர்களாக இருப்பார்கள். இந்த மாயம் தியேட்டர்களைத் தவிர வேறெங்கும் நிகழாது.
வெப் சீரீஸ்களிலும் நடிக்கத் தொடங்கியிருக்கிறீர்களே..?
ஓடிடி உள்ளடக்கங்களில் ரசிகர்களை அதிகம் கவரும் உள்ளடக்கமாக வெப் சீரீஸ்களே உள்ளன. அதனால், ‘எம்.ஒய் 3’ என்கிற வெப் சீரிஸில் நடிக்க ஒப்புக்கொண்டேன். தற்போது நான் நடித்துவரும் வெப் சீரீஸ் ‘ஐயம் நாட் எ ரோபோட்’ தென்கொரிய வெப் சீரீஸின் மறு ஆக்கம். இதுவொரு ரொமாண்டிக் காமெடி சீரீஸ். ஹாட் ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. இதில் இரட்டை வேடங்களில் நடிக்கிறேன். ஒன்று மனிதப் பெண், மற்றொன்று ‘ரோபோட்’. எந்தவொரு கதாநாயகி நடிகைக்கும் இரட்டை வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது ஒரு கனவு. அது, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ ராஜேஷ் சார் இயக்கும் இந்த வெப் சீரீஸ் மூலம் எனக்கு சாத்தியமாகியிருக்கிறது.
‘ஒத்த செருப்பு’ போன்ற ஒரு படத்தில் தெலுங்கில் நடித்திருக்கிறீர்களாமே..?
ஆமாம்! அந்தப் படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும்தான். ‘105 மினிட்ஸ்’ என்பது தலைப்பு. 105 நிமிடங்கள் ஓடும் படம். அதுவொரு க்ரைம் த்ரில்லர். ஒரே ஷாட்டில் எடுத்திருக்கிறார்கள். இதற்காக 20 நாள் ஒத்திகை நடந்தது. அதில் வசனங்கள் குறைவு. முக பாவ நடிப்பில் ஜாமாய்த்திருக்கிறேன்.