'இந்தியன்2' படம் குறித்து சென்சார் போர்டு சொன்னது என்ன? - கமல்ஹாசன் பதில்


சென்னை: ”பொதுவாக எந்தப் படத்தையும் சென்சார் போர்டு பாராட்டுவதில்லை. ஆனால், ‘இந்தியன்2’ படத்தை பாராட்டி இருக்கிறார்கள்” என்று நடிகர் கமல்ஹாசன் பேசியிருக்கிறார்.

ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘இந்தியன்2’. வரும் ஜூலை 12ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கும் நிலையில், இன்று சென்னையில் படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது.

அதில் பேசிய நடிகர் கமல்ஹாசன், “குழந்தைகளிடம் அம்மா பிடிக்குமா, அப்பா பிடிக்குமா என்று கேட்கக் கூடாது. அதுபோலதான் நீங்கள் என்னிடம் ‘இந்தியன்’ படத்தின் எந்த பாகம் பிடிக்கும் என்று கேட்கிறீர்கள். ’இந்தியன்2’ எனக்குப் பிடிக்கும்தான். ஆனால், அதை விட ‘இந்தியன்3’ மீது அதிக ஆசை இருக்கிறது. நீங்கள் கொடுத்த சாம்பார், ரசம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனாலும், என் மனம் அடுத்து பாயாசத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இரண்டு பாகத்திலும் எனக்குப் பிடித்த சம்பவங்கள் நிறைய இருக்கிறது” என்றார்.

மேலும், இப்படத்தின் சென்சார் சான்றிதழ் நேற்று வெளியான நிலையில் புகைப்பிடித்தல், ஊழல் தொடர்பான சில காட்சிகள், அரைகுறை ஆடைகள், தகாத வார்த்தைகள் பேசுதல் போன்ற விஷயங்களை நீக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுபற்றி கமல் பேசியபோது, “வன்முறை, கெட்டவார்த்தை போன்ற விஷயங்களை படத்தோடு விட்டுவிடுங்கள். பொதுவாக சென்சார் போர்டு எந்தப் படத்தையும் பாராட்டுவதில்லை. ஆனால், ‘இந்தியன்2’ படத்தில் சில காட்சிகளைக் குறிப்பிட்டு பாராட்டி இருக்கிறார்கள்” என்று அவர் கூறினார்

x