கதாநாயகனாகும் விஜே ரக்‌ஷன்: பிக்பாஸ் அடுத்த சீசனில் கலந்து கொள்வாரா?


விஜே ரக்‌ஷன் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். பிக்பாஸ் அடுத்த சீசனில் கலந்து கொள்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நிகழ்ச்சி தொகுப்பாளரான ரக்‌ஷன் விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை சுவாரஸ்யமாகவும் கலகலப்பாகவும் தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமடைந்தார். இரண்டு சீசன்களை முடித்துள்ள ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூன்றாவது சீசனையும் தற்போது முடிக்க உள்ளது. இந்த நிலையில், ரக்‌ஷன் தற்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.

யோகேந்திரன் இந்த படத்தை இயக்குகிறார். காதல், நட்பு மற்றும் உறவுகளை மையமாக கொண்டு இந்த படம் உருவாக இருக்கிறது. படத்தில் ‘கலக்க போவது யாரு’ புகழ் தீனா, விஷாகா திமான், பிராங்க்ஸ்டர் ராகுல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மலையாளத்தில் பிரபல இசையமைப்பாளரான சச்சின் படத்திற்கு இசையமைக்கிறார். படப்பிடிப்பை கன்னியாகுமரியில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

ரக்‌ஷன் ஏற்கெனவே, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் துல்கர் சல்மானுக்கு நண்பன் கதாப்பாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றார். இப்போது அடுத்த கட்டமாக கதாநாயகன் ஆகியுள்ளார். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து ரக்‌ஷன், ஷிவாங்கி, ஷ்ருதிகா ஆகியோர் அக்டோபரில் தொடங்க இருக்கும் பிக்பாஸ் ஆறாவது சீசனில் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இப்போது ரக்‌ஷன் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதால் பிக்பாஸ் ஆறாவது சீசனில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என்கிறது சின்னத்திரை வட்டாரம். இதற்கு முந்தைய சீசன்களிலேயே இவர் பிக்பாஸ் சீசனில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

x