எப்போதும் எங்கள் இதயத்தில் இருப்பீர்கள்: திருமண நாளில் நடிகை மீனா உருக்கமான பதிவு


நடிகை மீனாவின் திருமண நாள் இன்று என்பதால் அது குறித்து சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியான பதிவை ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார்.

நடிகை மீனாவுக்கும், வித்யாசாகருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், இந்த வருட ஆரம்பத்தில் நடிகை மீனாவின் குடும்பத்தில் அனைவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தனர். ஆனால், மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தது யாரும் எதிர்பாராதது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் மீனாவுக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் தன் கணவர் மரணம் குறித்து தவறான செய்திகள் யாரும் பரப்ப வேண்டாம் என மீனா சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் அவர்களது 13-வது திருமண நாள் இன்று. வித்யாசாகர் இல்லாத நிலையில் தன்னுடைய திருமண நாள் குறித்து மீனா பதிவு ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

வித்யாசாகர் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள மீனா, அதில் கூறியிருப்பதாவது: நீங்கள் எங்களுடைய அழகான ஆசீர்வாதம். ஆனால், எங்களிடம் இருந்து உங்களை கடவுள் சீக்கிரம் எடுத்து கொண்டு விட்டார். ஆனால், எங்களுடைய இதயத்தில் எப்போதுமே இருப்பீர்கள். என்னுடைய குடும்பமும். நானும் இது போன்ற கடினமான சமயத்தில் எங்களுக்கு ஆறுதல் கொடுத்து எங்களுக்கு அன்பு தந்து பிரார்த்தித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மில்லியன் கணக்கில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுக்கு நீங்கள் நிச்சயமாக தேவை.

நண்பர்கள், குடும்பம் மற்றும் யாரெல்லாம் எங்களுக்கு இந்த சமயத்தில் அக்கறையும், அன்பும் ஆதரவும் கொடுத்தீர்களோ, அவர்களுக்கு எங்களது நன்றி. உங்கள் அன்பை நாங்கள் உணர்கிறோம் என அந்த பதிவில் உருக்கமாக தெரிவித்துள்ளார் மீனா.

x