‘மாதவிடாய் நாட்களில் நடனம்’ - மனம் திறந்த சாய் பல்லவி


’ஷ்யாம் சிங்காராய்’ படத்தை அடுத்து தற்போது ‘கார்கி’ படத்தோடு வருகிறார் நடிகை சாய் பல்லவி. வரும் 15-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படம் குறித்து யூடியூப் தளம் ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டியில் நடனம் பற்றியும் அதில் உள்ள சவால்கள் குறித்தும் அவர் மனம் திறந்துள்ளார்.

“சிறு வயதிலிருந்தே எனக்கு நடனம் மீது அதிக ஆர்வமும் விருப்பமும் உண்டு. அதனால் சிறு வயதில் நடன வகுப்புகளுக்குச் செல்வது போட்டிகளுக்குத் தயாராவது என்று இருந்திருக்கிறேன். அப்போது எடுத்த அந்தப் பயிற்சிதான் இப்போது வரைக்குமே எனக்குக் கைகொடுக்கிறது” என்று அந்தப் பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.

மேலும், “இதுவரை நான் நடித்த படங்களில் ‘ஷ்யாம் சிங்காராய்’ தவிர்த்து மற்ற படங்களின் நடனக் காட்சிகளின்போது எனக்கு மாதவிடாய் நாட்களாகத்தான் இருந்திருக்கிறது. பில்லியன் பார்வைகளைக் கடந்து கொண்டாடப்பட்ட ‘மாரி’ படத்தின் ‘ரெளடி பேபி’ பாடலின்போது என்னுடைய மாதவிடாய் நாட்கள்தான். ஆனால், அந்த நாட்களின் பிரச்சினைகளையும் தாண்டி, அதை விட முக்கியமான விஷயம் நமக்கு இருக்கும்போது இது ஒரு பொருட்டாகவே மனம் ஏற்றுக்கொள்ளாது. முக்கியமான விஷயத்தில்தான் கவனம் செல்லும். அதற்கு ஏற்றாற்போலவே உடலும் தயாராகிக்கொள்ளும்.

பின்பு வேலை முடிந்ததும் ஒட்டு மொத்த சோர்வும் படுத்தி எடுக்கும். அதுபோன்ற நாட்களில் எல்லாம் என் தந்தைதான் எனக்குக் கால் பிடித்துவிட்டு ஆறுதலாக இருப்பார்” என அந்தப் பேட்டியில் பேசியிருக்கிறார் நடிகை சாய் பல்லவி.

x