திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் விக்ரம் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் திடீர் மாரடைப்பு எனச் செய்திகள் பரவிய நிலையில் அதை மறுத்து மருத்துவமனை நிர்வாகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில் நடிகர் விக்ரமுக்கு நெஞ்சில் ஏற்பட்ட அசிரத்தை காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் நலமுடன் இருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அவருக்கு நெஞ்சுவலி எனப் பரவிய செய்திகள் பொய்யானவை எனவும் ஒரு நாள் சிகிச்சைக்குப் பின்பு அவர் வீடு திரும்புவார் எனவும் அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரமும் தன் சமூகவலைதளப் பக்கங்களில் தெளிவுபடுத்தினார். நேற்று மாலை மருத்துவமனையிலிருந்து விக்ரம் வீடு திரும்பினார்.
இந்நிலையில், தன் உடல்நிலை குறித்து அக்கறையுடன் விசாரித்தவர்களுக்கும், அன்பு காட்டிய ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை விக்ரம் வெளியிட்டிருக்கிறார்.
“எல்லோருக்கும் வணக்கம்! இந்தக் காலகட்டத்தில் எனக்கு இத்தனை அன்பும் பரிவும் கிடைத்திருப்பதை எனக்குக் கிடைத்த வரமாகவே பார்க்கிறேன். நீங்கள் எனக்காகச் செய்யும் அத்தனைக்கும், என்னுடன் இருப்பதற்கும் நன்றி. நான் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு ரசிகர்களாகிய நீங்கள்தான் முக்கியக் காரணம். நான் நலமாக இருக்கிறேன்” என அந்தக் காணொலியில் விக்ரம் பேசியிருக்கிறார்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து அடுத்த மாதம் வெளியாக உள்ள ‘கோப்ரா’ படத்தின் இசை வெளியீட்டு விழா, நாளை மாலை சென்னையில் நடைபெற உள்ளது. இதில் விக்ரம் கலந்துகொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.