இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கும் விஜய்!


சமூக வலைதளங்கள் திரைக்கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைப் பெருமளவு குறைத்திருக்கின்றன. குறிப்பாக ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவை தற்போது பிரேக்கிங் தளங்களாகவும், அதிக அளவில் இளைஞர்களை ஈர்க்கும் தளங்களாவும் இருப்பதால் திரைப்பிரபலங்கள் பலர் அவற்றை ஆர்வத்துடன் பயன்படுத்திக்கொள்கின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரை தொடர்ந்து விரைவில் இன்ஸ்டாகிராமில் தனக்கான பக்கத்தைத் தொடங்க இருக்கிறார்.

தான் நடிக்கும் படம் தொடர்பான பதிவுகள், அவ்வப்போது புகைப்படம் என ட்விட்டர் பக்கத்தில் விஜய் வெளியிடும் பதிவுகள் ட்விட்டர்வாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அவரது நெய்வேலி செல்ஃபி மற்றும் க்ரீன் இந்தியா சேலஞ்ச் புகைப்படங்கள் போன்ற பதிவுகள் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி அதிகம் ரீட்வீட் மற்றும் லைக் செய்யப்பட்டதாக ட்விட்டர் (இந்தியா) நிறுவனம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் இன்ஸ்டாகிராமிலும் விரைவில் தன் ரசிகர்களுக்காகக் கணக்கு தொடங்க இருக்கிறார் விஜய்.

நடிகர் விஜய் இப்போது வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ படப்பிடிப்பின் நான்காவது கட்டத்திற்காக ஹைதராபாத்தில் இருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இந்தப் படத்தில் குஷ்பு, பிரகாஷ் ராஜ், ஷ்யாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். பொங்கலுக்கு வெளியாகும் இந்தப் படத்தை அடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

x