குடும்பத்தைக் காப்பதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கும் ஒருவன் அந்தக் குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டு அதன் பிறகு வரும் எதிர்ப்புகளை சமாளித்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் காப்பாற்றி அனைவரையும் ஒன்றிணைப்பதே ‘யானை’.
ராமநாதபுரத்தில் இறால் பண்ணை தொழிலதிபர் பி.வி.ஆர். (ராஜேஷ்). ஊரில் செல்வாக்கான மனிதர். அவருடைய முதல் மனைவியின் மகன்கள் பி.வி.ஆரின் பல்வேறு தொழில் நிறுவனங்களையும் சொத்துகளையும் நிர்வகித்து வருகிறார்கள். ராமேஸ்வரத்தில் உள்ள மீனவர் தலைவரான சமுத்திரம் (வ.ஐ.ச. ஜெயபாலன்) குடும்பத்துக்கும் பி.வி.ஆர் குடும்பத்துக்கும் பகை நிலவுகிறது. இந்தச் சூழலில் சமுத்திரத்தின் மகன் பாண்டியின் (ராமச்சந்திர ராஜு) மரணத்துக்கு பி.வி.ஆரின் மகன்கள் காரணமாகிவிடுகிறார்கள்.
இதற்காக பழிவாங்கத் துடிக்கும் சமுத்திரம் குடும்பத்தின் பகையை முடித்தபிறகுதான் தனக்கான வாழ்க்கையைத் தொடங்குவது என உறுதியேற்றிருக்கிறான் பி.வி.ஆரின் இரண்டாவது மனைவிக்குப் (ராதிகா) பிறந்த ரவி (அருண் விஜய்). ஆனால், அவன் தனது தந்தை மீதும் குடும்பத்தின் மீதும் பாசத்தைப் பொழிந்தாலும் அவனது அண்ணன்கள் அவனுக்கு மாற்றாந்தாய் பெற்ற பிள்ளைக்குரிய இடத்தையே அளிக்கின்றனர்.
அண்ணன்கள் மூவரும் சாதியுணர்வு மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள். இந்நிலையில், ரவியின் மூத்த அண்ணன் ராமச்சந்திரன் (சமுத்திரக்கனி), தனது மகள் (அம்மு அபிராமி) காதலன் ரஹீமுடன் ஓடிப்போனதற்கு ரவியே காரணம் என்று நினைக்கிறான். இதனால் ரவியை வீட்டைவிட்டு துரத்திவிடுகிறான். மகளைக் தேடிக் கண்டுபிடித்து கொன்றுவிடுவதற்கான முயற்சிகளையும் ராமச்சந்திரனும் உடன் பிறந்தோரும் மேற்கொள்கிறார்கள். இதனால் ராமச்சந்திரனின் மகளையும் அவளின் காதலனையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறான் ரவி.
இதற்கிடையில், கிறிஸ்தவப் பெண ஜெபமலர் (ப்ரியா பவானி சங்கர்) உடனான ரவியின் காதலுக்கும் பிரச்சினை வருகிறது. பகையாளிகளின் பழிவாங்கல் வெறியையும ரத்த உறவுகளின் சாதிவெறியையும் அழித்து பி.வி.ஆர் குடும்பத்தில் உள்ள அனைவரது பாதுகாப்பையும் உறுதிசெய்வதோடு உடைந்த குடும்பத்தை ரவி மீண்டும் ஒன்றுசேர்ப்பதுதான் மீதிக் கதை.
’சிங்கம் 3’, ‘சாமி 2’; என முந்தைய படங்களின் அடுத்த பாகங்களை இயக்கிவந்த இயக்குநர் ஹரி கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய கதையைக் கையிலெடுத்திருக்கிறார். இங்கு ‘புதிய’ என்பது இது அவருடைய முந்தைய படங்களின் கதை/கதாபாத்திரங்களின் தொடர்ச்சியல்ல என்பது மட்டுமே. மற்றபடி கதையிலும் திரைக்கதையிலும் அனைத்து விதங்களிலும் ஹரியின் பழைய சாயல் அப்படியே தெரிகிறது. குறிப்பாக, ஆக் ஷனைவிட குடும்ப பாசத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து எடுக்கப்பட்ட ‘தாமிரபரணி’, ‘வேல்’, உள்ளிட்ட படங்களின் சாயலில் உருவாகியுள்ளது ‘யானை’.
ஆனால், முந்தைய படங்களின் சென்டிமென்ட் காட்சிகளில் இருந்த அழுத்தமும் ஆக் ஷன் காட்சிகளில் இருந்த பரபரப்பும் சுவாரசியமும் இந்தப் படத்தில் இல்லை. எனினும் சென்டிமென்ட்டுக்கு முக்கியத்துவம் தந்த ஹரியின் ‘வேங்கை’, ’பூஜை’ போன்ற படங்களைக் காட்டிலும் ‘யானை’ பரவாயில்லை என்று சொல்லலாம். கண்களை அயற்சி அடைய வைக்கும் அதிவேக கேமரா நகர்வு, புயல் வேகத்தில் பறக்கும் பல நூறு டாட்டா சுமோக்கள், அரிவாள் கலாச்சாரம் உள்ளிட்ட ஹரி பட கிளிஷேக்கள் ‘யானை’யில் இல்லை என்பதும் பெரும் ஆறுதல்.
படத்தின் முதல் பாதி, கதைக்கான சூழலை கட்டமைப்பதற்கான செட் அப்களுக்கே அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. காமெடி ட்ராக், நாயக அறிமுகப் பாடல் அரதப் பழைய ஃபார்முலா சங்கதிகள் கடமை உணர்வுடன் சேர்க்கப்பட்டிருக்கின்றன. நாயகனின் காதலை பில்டப் செய்வதற்கான காட்சிகளுக்கும் அதிக நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் முதல் பாதியைவிட இரண்டாம் பாதி கனமான, கவனத்துக்குரிய காட்சிகளை உள்ளடக்கியதாகவும் அமைந்துள்ளது.
பிற ஹரி படங்களைப் போல இந்தப் படத்திலும் குடும்பத்தின் மகத்துவமும் முக்கியத்துவமும் போற்றிப் பாதுகாக்கப் பட்டுள்ளன. பெற்றோரின் சம்மதமின்றி திருமணம் செய்துகொள்வது தவறானதாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது. எனினும் கெளரவம் என்ற பெயரில், பெற்ற குழந்தைகளையே ஆணவக் கொலை செய்யுமளவுக்கு வெறிகொள்வது கடுமையாக எதிர்க்கப்பட்டுள்ளது.
சாதி குறித்த போலி கெளரவத்தைச் சாடும் அழுத்தமான வசனங்கள் பாராட்டுக்குரியவை. சமுத்திரம் குடும்பத்தின் வாயிலாக மீனவர் குலத்தை கொடிய வன்முறை குணம் மிக்கவர்களாகச் சித்தரித்திருந்தாலும் இறுதியில் நிகழும் சில திருப்பங்கள் அந்தத் தவறைச் சரி செய்வதற்கான அக்கறையை வெளிப்படுத்துகின்றன. மதம் கடந்த காதல் குறித்த சில பிரச்சினைக்குரிய வசனங்கள் இருந்தாலும் மதம் கடந்த இரண்டு காதல் ஜோடிகளை நல்ல வகையில் வாழ்வதாக சித்தரித்திருப்பதன் மூலம் மத நல்லிணக்கத்துக்கு ஆதரவான படமாக இதை அடையாளப்படுத்தலாம்.
யோகிபாபு, புகழ் மற்றும் சில பல ஜூனியர் ஆர்டிஸ்ட்களை வைத்து எழுதப்பட்டிருக்கும் ட்ராக் காமெடி பார்வையாளர்கள் மறந்தும் சிரித்துவிடாமல் இருப்பதை உறுதி செய்கின்றன. எனினும் கதையில் முக்கிய கதாபாத்திரமாக வரும் யோகிபாபு கதையின் மையச்சரடின் போக்கில் அவ்வப்போது அடிக்கும் கவுண்டர்களை ரசித்துச் சிரிக்க முடிகிறது.
அருண் விஜய் –ப்ரிய பவானி சங்கர் காதல் காட்சிகள் வழக்கமானதாக இருந்தாலும் அவற்றில் ஒரு சில ரசிக்கத்தக்க தருணங்கள் இடம்பெற்றிருக்கின்றன. நாயகிக்கு நாயகனை காதலிப்பதுடன் அவனுடைய குடும்பத்தில் ஒரு முக்கியமான மாற்றம் நிகழ்வதற்கு காரணமான பங்கை ஆற்றும் முக்கியத்துவமும் அளிக்கப்பட்டிருக்கிறது.
இறுதியில், பழிவாங்குவதற்கு மாற்றாக மன்னித்து திருத்துவதை தீர்வாக முன்வைத்திருப்பது புதுமை இல்லை என்றாலும் வரவேற்புக்குரியது.
அருண் விஜய் சண்டைக் காட்சிகளிலும் ஆக்ரோஷமாக வசனம் பேசும் காட்சிகளிலும் அதகளம் செய்திருக்கிறார். சென்டிமென்ட் காட்சிகளில் சில இடங்களில் தடுமாறுகிறார். ப்ரியா பவானி சங்கர் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகளைக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். ராஜேஷ், ராதிகா உள்ளிட்ட மூத்த நடிகர்கள் மரியாதைக்குரிய நடிப்பைத் தந்திருக்கிறார்கள். சமுத்திரக்கனி வழக்கமான வேடத்திலும் சற்று வேறுபாடு காண்பிக்க முயன்றிருக்கிறார். யோகிபாபு அவ்வப்போது சிரிக்க வைப்பதோடு எமோஷனல் காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், சஞ்சய், தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைத் தந்துள்ளனர். ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலு. சிநேகன் எழுதிய ’எல்லம்மா ஏலா’ பாடல் ரசிக்கவைக்கிறது. சண்டைக் காட்சிகளில் நிறைய சிங்கிள் ஷாட்களை சிறப்பாக படம்பிடித்திருப்பதில் கோபிநாத்தின் ஒளிப்பதிவு வியக்கவைக்கிறது.
கதைச் சட்டகத்தில் தனது வழக்கமான பாதையிலேயே பயணித்திருக்கும் இயக்குநர் ஹரி, திரைக்கதையில் ஓரளவு சுவாரசியத்தையும் அரசியல் சார்ந்த பிரச்சினைகள் தாண்டி சமூகத்துக்குத் தேவையான சில நல்ல விஷயங்களையும் சேர்த்திருப்பதால் நிராகரிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கிறது இந்த ‘யானை’.