திரை விமர்சனம்: மாமனிதன்


தன் பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வியைக் கொடுப்பதற்கான முயற்சியில் ஏமாற்றப்பட்டு அதனால் ஊராரின் அவப்பெயருக்கு ஆளாகும் மனிதன் உண்மையில் மாமனிதன் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்வதே ‘மாமனிதன்’ படத்தின் கதை.

ராதாகிருஷ்ணன் (விஜய் சேதுபதி) பண்ணைப்புரத்தில் ஆட்டோ ஓட்டுநர். மனைவி (காயத்ரி), மகன், மகளுடன் அளவான வருமானத்துடன் நிம்மதியாக வாழ்கிறான். பள்ளிக் கல்வியைக்கூட பெறாத ராதாகிருஷ்ணன், தனது பிள்ளைகள் வாழ்வில் வெற்றிபெற ஆங்கிலத்தில் சிறப்பாகத் தேர்ச்சி பெற வேண்டும் என்று நம்புகிறான். அதனால் கான்வென்ட் பள்ளியில் அவர்களைச் சேர்க்க நினைத்து நில புரோக்கர் மாதவன் (ஷாஜியுடன்) கூட்டு சேர்கிறான். அப்பழுக்கற்ற நேர்மையாலும் தன்னால் இயன்றளவு மற்றவர்களுக்கு உதவுபவனாகவும் இருக்கும் ராதாகிருஷ்ணனை நம்பி ஊர் மக்கள் அனைவரும் நிலம் வாங்க பணம் செலுத்துகிறார்கள். ஆனால் அந்தப் பணத்துடன் மாதவன் தப்பி ஓடிவிடுகிறான்.

ஊர் மக்களின் கோபத்திலிருந்தும் சட்ட நடவடிக்கையிலிருந்தும் தப்பிப்பதற்காக யாருக்கும் தெரியாமல் மாதவனைத் தேடி அவனுடைய சொந்த ஊரான ஆலப்புழைக்குச் செல்கிறான் ராதாகிருஷ்ணன். கேரளத்தில் மாதவன் கிடைத்தானா? ஊர் மக்களின் கோபத்திலிருந்து ராதாகிருஷ்ணனும் அவனுடைய குடும்பமும் தப்பித்தார்களா? ஏமாற்றப்பட்ட ராதாகிருஷ்ணனுக்கு ஏற்பட்ட அவப்பெயர் விலகியதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை அளிக்கிறது மீதிப் படம்.

‘தர்மதுரை’ வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சீனு ராமசாமியும் விஜய் சேதுபதியும் இணைந்திருக்கும் படம் இது. அந்தப் படத்துக்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். முதல் முறையாக இசைஞானி இளையராஜாவும் அவருடைய மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்கள். இந்தக் காரணங்களால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம், கரோனா பெருந்தொற்று காரணமாக நீண்ட தாமதத்துக்குப் பிறகு ஒருவழியாக வெளியாகியிருக்கிறது.

மதவாதத்தாலும் மதம் சார்ந்த பிரிவினைவாதத்தாலும் நாட்டின் அமைதியும் மதச் சிறுபான்மையினரின் நிம்மதியும் பேராபத்தை எதிர்கொண்டிருக்கும் சூழலில், நாயகனின் இந்துக் குடும்பம், அவருடைய இஸ்லாமிய நண்பரின் குடும்பம், அவனுக்கு அடைக்கலம் கொடுக்கும் கிறிஸ்தவ குடும்பம் ஆகிய கதாபாத்திரச் சித்தரிப்புகளின் மூலம் மூன்று பிரதான மதங்களைச் சேர்ந்தோரும் இயல்பாகவும் இணக்கமாகவும் வாழ்வதைப் பிரதிபலித்திருக்கிறது இந்தப் படம். எல்லா மதத்தைச் சேர்ந்த எளிய மனிதர்களும் எப்படி இயல்பான அன்புமிக்கவர்களாகவும் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாகவும் இருக்கிறார்கள் என்பதை ‘மாமனிதன்’ படம் மிக அழகாகச் சித்தரித்திருக்கிறது.

இருப்பதை வைத்து நிம்மதியாக வாழ்ந்துவரும் நடுத்தர குடும்பத் தலைவர்கள் பறப்பதற்கு ஆசைப்பட்டு பெருந்தொழில்களில் கால் வைத்து மோசம்போய் செய்யாத குற்றத்துக்காக தண்டிக்கப்படும் கதைகள் தமிழ் சினிமாவில் நிறைய வந்துள்ளன. அதில் முக்கியமானது ‘மகாநதி’. சுவாரசியம் என்னவென்றால் அந்தப் படத்திலும் நாயகனான கமல்ஹாசனின் பெயர் கிருஷ்ணன். அந்தக் கிருஷ்ணனைப் போலவே இந்த (ராதா)கிருஷ்ணனும் ஏமாற்றப்பட்டாலும் அதற்குப் பிறகு அவரைப் போல் இவர் எதிர்கொள்ளும் அனைவரும் தீயவர்கள் அல்ல. உண்மையில் ஏமாற்றப்பட்டு தலைமறைவாக வாழும் சூழலில்தான் வாழ்வில் தன்னைப் போலவே அன்பும் நேர்மையும் மிக்க மனிதர்களைச் சந்திக்கிறார்.

சிறுவயதிலிருந்தே ராதாகிருஷ்ணனுடன் பழகும் இஸ்லாமிய நண்பர் (குரு சோமசுந்தரம்) தொடக்கத்திலிருந்தே நல்லவராக காண்பிக்கப்பட்டாலும் அவருடைய அசலான மேன்மை ராதாகிருஷ்ணன் ஏமாற்றப்பட்ட பிறகே துலக்கமாக வெளிப்படுகிறது. அதேபோல் ராதாகிருஷ்ணனின் மனைவியும் குழந்தைகளும் அவரிடமிருந்து பிரிய நேர்ந்த பிறகு தமது சொந்த உழைப்பால் முன்னேறி நல்ல நிலையை அடைகிறார்கள். ராதாகிருஷ்ணனைத் தேடும் காவல் துறை ஆய்வாளர்கூட நல்லவராகவே இருக்கிறார். இப்படி இந்த உலகில் இருக்கும் நல்ல மனிதர்களைப் பற்றியும் நேர்மறையான விஷயங்களையும் சினிமாத்தனம் இல்லாத இயல்புடன் சித்தரித்திருக்கிறார் சீனு ராமசாமி.

இன்னொரு பாராட்டத்தக்க அம்சம் இந்தப் படத்தில் பெண் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு. ராதாகிருஷ்ணனின் மனைவி, மாதவனின் தாய், கேரளத்தில் தேநீர்க் கடை வைத்திருக்கும் பெண் என அனைவரும் மதிப்புக்குரிய ஆளுமைகளாக வெளிப்படுகிறார்கள்.

ஆனால், இதுபோன்ற நல்ல விஷயங்களை உணர்ந்து பாராட்ட முடிவதைத் தாண்டி படத்தில் ஒன்றும் இல்லை. இரண்டு மணி நேர படமாக நீட்டிக்கப்படும் அளவுக்குக் கதையில் அடர்த்தி இல்லை. திரைக்கதையிலும் போதுமான அளவு திருப்பங்களும் சுவாரசிய முடிச்சுகளும் இல்லை. இதனால் பல காட்சிகள் தேவையில்லாமல் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தேவைக்கதிகமாக நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் தோன்றுகிறது. இறுதியில் காசியில் நடக்கும் திருப்பங்கள் கதையுடன் பொருந்தவில்லை. ரியல் எஸ்டேட் மோசடியில் மக்கள் இழந்த பணம் என்ன ஆனது என்கிற கேள்விக்கும் விடையில்லை. படம் அறிவிக்கப்பட்டதற்கும் வெளியானதற்கும் இடையிலான நீண்ட காலம் கடந்திருப்பதை படத்தின் உருவாக்கத்தில் பல விதங்களில் உணர முடிகிறது.

’விக்ரம்’ படத்தில் கொடூர வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதி இந்தப் படத்தில் அப்பழுக்கற்ற நல்லவராக அழகான குடும்பத் தலைவராக நேரெதிர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுபோன்ற பல படங்களில் அவர் நடித்திருக்கிறார் என்றாலும் கேரளத்துக்குத் தப்பிச் செல்வதற்கு முன் தன் நண்பரைச் சந்திக்கும் காட்சியில் ‘அடடா எவ்வளவு சிறந்த நடிகர் இவர்!’ என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. அதிகாரம் செலுத்தும் அண்ணனிடம் ஆவேசப்படுவது, கணவன் அகலக்கால் வைப்பதில் உள்ள ஆபத்தை உணர்ந்து அதை எதிர்ப்பது, தனித்துவிடப்பட்ட நிலையில் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தும் ஊராரின் ஏச்சைக் கேட்டும் மனம் வெதும்புவது, சிக்கல்களைக் கடந்து தன்னம்பிக்கையுடன் தலைநிமிர்வது என தனது நடிப்புத் திறனை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் காயத்ரி.

குரு சோமசுந்தரம் வழக்கம்போல் சிறப்பாக நடித்துள்ளார். ஆனால், அவர் இஸ்லாமியர் என்பதற்காக ஒவ்வொரு காட்சியிலும் ‘இன்ஷா அல்லா’ என்றோ ‘மாஷா அல்லா’ என்றோ சொல்லவைத்திருப்பது வலிந்து திணிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. மோசடி செய்பவராக ஷாஜி, அவருடைய தனித்துவிடப்பட்ட அன்னையாக கேபிஏசி லலிதா, கேரளத்தில் டீக்கடை வைத்திருப்பவராக ஜுவெல் மேரி, அவருடைய மகளாக அனிகா சுரேந்திரன், விஜய் சேதுபதியின் குழந்தைகளாக நடித்திருக்கும் சிறுவர்கள் என துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பலர் கவனம் ஈர்க்கிறார்கள்.


இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் பெரிதாகக் கவரவில்லை. பின்னணி இசை சில இடங்களில் மிக வழக்கமானதாக இருந்தாலும் படத்தின் முக்கியமான காட்சிகளில் ’ராஜ’முத்திரையை உணர்ந்து ரசிக்க முடிகிறது.

தேனி மாவட்ட கிராமத்து மண்வாசத்தையும் ஆலப்புழையின் படகுகள் பயணிக்கும் ஆறுகளின் சலசலப்பையும் ஜில்லிட்டு உணரவைக்கிறது சுகுமாரின் ஒளிப்பதிவு. குறைகளைத் தாண்டி ’மாமனிதன்’ விதைக்கும் நன்னம்பிக்கையும் நேர்மறை எண்ணங்களும் மனதில் பதியவே செய்கின்றன. இருப்பினும் அழுத்தமான கதை, வலுவான திரைக்கதையுடன் வந்திருந்தால் அவை இன்னும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

x