‘ஜமா’ படத்துக்காக 20 நாள் தெருக்கூத்து பயிற்சி


பாரி இளவழகன், அம்மு அபிராமி

‘கூழாங்கல்’ படத்தைத் தயாரித்த சாய் தேவானந்த் , அடுத்து தயாரிக்கும் படம், ‘ஜமா’. இதை அறிமுக இயக்குநர் பாரிஇளவழகன் இயக்கி, நாயகனாக நடித்துள்ளார். இளையராஜா இசை அமைக்கிறார். அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ணா தயாள், கே.வி.என்.மணிமேகலை, வசந்த் மாரிமுத்து, சிவமாறன் உட்பட பலர் நடித்துள்ளனர். கோபால் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படம் பற்றி பாரி இளவழகன் கூறியதாவது:

தெருக்கூத்துப் பின்னணியில் உருவாகியுள்ள படம் இது. நான்திருவண்ணாமலையை சேர்ந்தவன். என் முன்னோர்கள் தெருக்கூத்து நடத்தியவர்கள். அதனால் இந்தக் கதையை தேர்வு செய்தேன்.தெருக்கூத்தில் பெண் வேடம் போடுபவர்களுக்கு மரியாதை இருக்காது. உடல் ரீதியாகவும் அவர்கள் நளினத்துடன் நடந்து கொள்வதால் உடன் நடிப்பவர்களே, அவர்களை மதிக்க மாட்டார்கள். இதன் பின்னணியில் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இதில் நடிப்பவர்களுக்காக 20 நாள் தெருக்கூத்துப் பயிற்சி அளித்தோம். எங்கள் மாமா, தாங்கல் சேகர் இந்தப் பயிற்சியை அளித்தார். அதனால் படத்தில் நடித்தவர்களுக்கு அடவு பிடிப்பதில் இருந்து தெருக்கூத்துப் பற்றி அனைத்தும் தெரியும். இளையராஜா வித்தியாசமான இசையை தந்திருக்கிறார். படத்தில் 4 பாடல்கள். சிறப்பாக இருக்கிறது. தெருக்கூத்து என்பதால் லைவ் சவுண்ட் செய்திருக்கிறோம். உலகளவில் அந்தந்த மண்சார்ந்த, பண்பாட்டை, கலாச்சாரத்தைப் பேசும் படங்களுக்கு வரவேற்பு இருக்கிறது. தெருக்கூத்தைப் பற்றிய படம் என்றாலும் போரடிக்காத கமர்சியல் படமாக இது இருக்கும். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இவ்வாறு பாரி இளவழகன் கூறினார்.