காவலர் உடையில் கோயில் திருவிழாவில் நடனம் ஆடிய நடிகர் சூரி!


திருவிழாவில் நடனமாடிய நடிகர் சூரி

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ‘விடுதலை’ படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் சூரி, அப்பகுதியில் நடைபெற்ற ஊர் திருவிழாவில் கலந்துகொண்டு நடனமாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘அசுரன்’ படத்தை தொடர்ந்து, இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் படத்திற்கு 'விடுதலை' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், படத்தின் நான்காவது கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமமான சிறுமலையில் நடந்து வருகிறது. அச்சமயம், சிறுமலை கிராமத்தில் உள்ள கோயில் வைகாசி மாத திருவிழா நடைபெற்றது. இதனைக் கேள்விப்பட்ட நடிகர் சூரி படப்பிடிப்பில் இருந்து நேராக கோயில் திருவிழாவில் காவலர் உடையுடன் கலந்து கொண்டார்.

நடிகர் சூரி

விழாவின் இறுதி நாளான நேற்று அம்மன் பூஞ்சோலை செல்லுதல் எனும் மஞ்சள் தண்ணீர் திருவிழா நடைபெற்றது. அப்போது, சிறுமலை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தாரை தப்பட்டைகள் முழங்க அம்மன் ஊர்வலத்தில் நடனம் ஆடினர். இதனைப் பார்த்து உற்சாகம் அடைந்த நடிகர் சூரி, கிராம மக்களோடு இணைந்து காவலர் உடையில் உற்சாக நடனம் ஆடினார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

x