‘விக்ரம்’ வில்லனாக சத்யராஜ்: அதே வருடத்தில் 6 படங்களில் ஹீரோ!


கமல், ரஜினியின் காலத்தில், எண்பதுகளில், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு, மோகன், முரளி என்று பல நாயகர்களும் வெள்ளிவிழாப் படங்களைக் கொடுத்தார்கள். கமல் நடித்த ‘சட்டம் என் கையில்’ படத்தில் அறிமுகமான சத்யராஜ், வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தார். ‘நூறாவது நாள்’, ‘24 மணி நேரம்’ என வில்லன் கதாபாத்திரத்தில் தனி ஸ்டைல் காட்டினார்.

'தகடு தகடு’ என்று சொன்ன ‘காக்கி சட்டை’ மிகப்பெரிய வெற்றியையும் சத்யராஜுக்குப் பெரும் புகழையும் கொடுத்தது. சின்னச்சின்ன கேரக்டர்களில், வில்லனின் அடியாட்களில் முக்கியமான அடியாள் என்றெல்லாம் நடித்தவருக்கு, மெயின் வில்லன் கேரக்டர்கள் ஆரம்பகாலத்தில் அப்ளாஸ் அள்ளக் காரணமாக அமைந்தன.

1986-ல், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தைத் தொடங்கிய கமலஹாசன், மே மாதம் 29-ம் தேதி ‘விக்ரம்’ படத்தை வெளியிட்டார். அதற்கு முன்னதாக, ஹாசன் பிரதர்ஸ் எனும் பெயரில் ‘ராஜபார்வை’யைத் தயாரித்திருந்தார். அதேபோல், கமலஹாசன், கமல்ஹாசன் ஆனதும் ‘விக்ரம்’ படத்திலிருந்துதான்! இந்தப் படத்தில் சுகிர்தராஜ் எனும் கேரக்டரில் வில்லன் ரோல் செய்து அசத்தியிருந்தார் சத்யராஜ். கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு, ஒரு கண்ணில் ப்ளெய்ன் க்ளாஸ், மற்றொரு கண்ணில் கூலிங்க்ளாஸ் என்று ஸ்டைலிஷாக இருந்தார் சத்யராஜ்.

விக்ரம், அம்பிகா, லிஸி, அம்ஜத்கான், டிம்பிள் கபாடியா, ஜனகராஜ், மனோரமா, சத்யராஜ், அக்னிபுத்ரா ராக்கெட், சலாமிய தேசம், எலிக்கோயில் என இன்றைக்கும் மறக்காதிருக்கிறார்கள் ரசிகர்கள்.

கமலுக்கு வில்லனாக ‘விக்ரம்’ படத்தில் நடித்த இதே வருடத்தில் ரஜினிக்கு வில்லனாகவும் தந்தையாகவும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தில் சத்யராஜ் நடித்தார். இந்தப் படம் ஜனவரி 10-ம் தேதி வெளியானது. ‘விக்ரம்’ மே மாதம் வெளியானது. நடுவே, பாலு ஆனந்த் இயக்கத்தில், ‘ரசிகன் ஒரு ரசிகை’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார் சத்யராஜ். பிப்ரவரி 21-ம் தேதி வெளியானது இந்தப் படம்.

’விக்ரம்’ வெளியீட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக (மே 22) மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த ‘முதல் வசந்தம்’ படம் வெளியானது. அதில் அவரும் மலேசியா வாசுதேவனும் செய்யும் அலப்பறை, அப்போது ஏகத்துக்கும் ஹிட்டடித்தது. மீண்டும் மணிவண்ணன் இயக்கத்தில், ‘விடிஞ்சா கல்யாணம்’ படத்திலும் கலைஞர் கதை, வசனத்தில், மணிவண்ணன் இயக்கத்தில் பிரபுவுடன் இணைந்து ‘பாலைவன ரோஜாக்கள்’ படத்திலும் நடித்தார் சத்யராஜ். நவம்பர் 1-ம் தேதி ‘பாலைவன ரோஜாக்கள்’ வெளியானது.

சத்யராஜின் திரையுலக வாழ்வில், மிகப் பெரிய மாற்றத்தையும் ஏற்றத்தையும் தந்த பாரதிராஜாவின் ‘கடலோரக் கவிதைகள்’ இந்த வருடத்தில், ஜூலை 5-ம் தேதி வெளியானது. ‘ரசிகன் ஒரு ரசிகை’ சுமாரான வெற்றியைச் சந்தித்தது. மற்ற படங்கள் அனைத்துமே மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தன.

ஹீரோவாக, 1986-ம் ஆண்டு 5 படங்களில் நடித்த சத்யராஜ், கமலுக்கு ‘விக்ரம்’ படத்திலும் ரஜினிக்கு ‘மிஸ்டர் பாரத்’ படத்திலும் இதே வருடத்தில் வில்லனாக நடித்தார் என்பது ஆச்சரியம் தான்!

இங்கே ஒரு கொசுறு தகவல். 1986-ல் ‘விக்ரம்’ படத்தில் சத்யராஜை வில்லனாக நடிக்க வைத்த கமல், அடுத்த ஆண்டில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ படத்தில் நாயகனாக நடிக்கச் செய்தார். இந்தப் படத்தில், கமல் நடிக்கவில்லை. ராஜ்கமல் நிறுவனத்தில் வேறொரு நடிகர் ஹீரோவாக முதன்முதலாக நடித்தது சத்யராஜ் தான்!

’விக்ரம்’ படம் வெளியாகி 36 ஆண்டுகளாகிவிட்டன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் நடித்த ‘விக்ரம்’ படமும் வெளியாகிவிட்டது. ஆனாலும் பழைய ‘விக்ரம்’ படத்தையும் ‘சுகிர்தராஜ்’ சத்யராஜையும் இன்னும் மறக்கவில்லை ரசிகர்கள்!

x