உலக சினிமா விழாவில் ’குக் வித் கோமாளி’ பவித்ரா லட்சுமி!


பல்வேறு நாடுகளில் படைக்கப்படும் அதிசிறந்த திரைப்படங்களை தமிழகத்தில் வாழும் உலக சினிமா காதலர்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் பணியை செய்துவருவதில் இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் திரைப்படச் சங்கத்துக்கு தனி இடம் உண்டு.

சென்னை சர்வதேசப் படவிழாவை கடந்த பல ஆண்டுகளாக இச்சங்கம் நடத்திவருகிறது. அந்த வகையில் இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் திரைப்படச் சங்கம், புது டெல்லியில் உள்ள மெக்சிகோ தூதரகம் மற்றும் சென்னையில் உள்ள மெக்சிகோ தூதரகத்துடன் இணைந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலையன்ஸ் பிரான்சிஸ் மையத்தில் நடத்தும் மெக்சிகன் திரை விழா நேற்று (10 மே) மாலை 6 மணிக்குத் தொடங்கியது.

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமடைந்து ஹீரோயினாக மாறியுள்ள நடிகை பவித்ரா லட்சுமி மெக்சிகன் திரை விழாவின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சென்னையில் உள்ள மெக்சிகோ தூதரகத்தைச் சேர்ந்த ராம்குமார் வரதராஜன், இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் திரைப்படச் சங்கத்தின் துணை தலைவர் ராம்கிருஷ்ணன், பிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் தென்னிந்திய திரைப்பட்ட வர்த்தக சபையின் செயலாளர் ரவி கொட்டரகரா, திரைப்பட நடிகரும் இயக்குநருமான ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மெக்சிகன் திரை விழாவை தொடங்கிவைத்து உரையாற்றினர். இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் திரைப்படச் சங்கத்தின் பொதுச் செயலாளர் தங்கராஜ் மற்றும் தலைவர் சிவன் கண்ணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க மேலும் பலர் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து ‘பேனமெரிக்கன் மஷினரி’ திரைப்படம் திரையிடப்பட்டது.

x