மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் குடும்பத்துக்கு உதவுவது ஏன்? என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’டான்’ படம் 13-ம் தேதி வெளியாகிறது. இதில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, பால சரவணன், முனிஷ்காந்த் உட்பட பலர் நடித்துள்ளனர். சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். படம் பற்றி பேசிய சிவகார்த்திகேயனிடம், பாடல் எழுதி வாங்கும் சம்பளத்தை நா.முத்துக்குமார், குடும்பத்துக்கு கொடுப்பது ஏன் என்பது பற்றி கேட்கப்பட்டது.
அப்போது அவர் கூறுகையில், ``மறைந்த பாடலாசிரியர், நா.முத்துக்குமாரின் பெரிய ரசிகன் நான். அவர் சிறந்த கவிஞர். கல்லூரி காலங்களில் அவர் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான பாடல்களைத்தான் எப்போதும் கேட்பேன். அந்தக் காலகட்டத்தில் என் உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொண்டது அவர் பாடல்கள்தான். அவரை இரண்டு முறைதான் சந்தித்துப் பேசியிருக்கிறேன்.
அவர் மறைந்ததும் அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது அவர் உடலின் அருகில் அவர் குழந்தைகளைப் பார்த்ததும் எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. நான் சிறந்த பாடலாசிரியன் இல்லை. அவருக்கு அஞ்சலியாக இருக்கட்டும் என்று, நான் எழுதும் பாடல்களுக்கு கிடைக்கும் சன்மானத்தை அவர் குடும்பத்துக்கு கொடுத்து வருகிறேன். தொடர்ந்து அதை செய்வேன்'' என்றார்.