’பான் இந்தியா’வுக்குப் பின்னால் இருப்பது இந்தி ஆதிக்கமா?


சினிமா வட்டாரத்தில் சமீபமாக அதிகம் வலம் வரும் பதம், ‘பான் இந்தியா’. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழி திரைப்படங்களை வட இந்தியாவிலும் வெற்றிகரமாக ஓடவைக்கும் வணிக நோக்கத்தில் ஒரு படத்தின் கதை அம்சம், நடிகர்கள் தேர்வு உள்ளிட்டவற்றில் சில மாற்றங்களைச் செய்து அவற்றுக்கு ‘பான் இந்தியா’ முத்திரை குத்துவதுதான் இப்போதைய ஃபேஷன். அதேசமயம், பாலிவுட் திரைப்படங்கள் தென்னிந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டாலும், அல்லது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி பதிப்புகளில் வெளிவந்தாலும் அவை ‘பான் இந்தியா படம்’ என்ற ஒட்டு இணைக்கப்பட்டு விளம்பரம் செய்யப்படுவதில்லை.

தென்னிந்தியப் படங்களை வட இந்தியாவில் ஓடச் செய்ய வேண்டும் என்கிற வணிக நோக்கத்தைத் தாண்டி வட இந்தியாவின் குறிப்பாக, இந்தி மொழி ஆதிக்கம் இந்த சொற்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பதுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள்.

அண்மையில் வெளியான ’கேஜிஎஃப் 2’ திரைப்படம் உலக அளவில் ரூ.850 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாகவும், இந்தி டப்பிங்கில் வெளியான பதிப்பில் மட்டும் ரூ. 336 கோடி வசூல் சாதனை படைத்ததாகவும் அண்மையில் அதிகாரபூர்வ தகவல் வெளியானது. இந்நிலையில், ’கேஜிஎஃப் 2’ படத்தின் மாபெரும் வெற்றியை ஒட்டி ‘நான் ஈ’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்த பிரபல கன்னட திரைப்பட நடிகர் கிச்சா சுதீப் ஒரு கருத்தை வெளிப்படையாகப் போட்டு உடைத்தார்.

அந்த நிகழ்ச்சியில் கிச்சா சுதீப் பேசுகையில், “இனியும் இந்தி தேசிய மொழி கிடையாது. நாங்கள் தென்னிந்தியாவிலிருந்து வருவதால் எங்களுக்கு ’பான் இந்தியா’ என்று பெயர் வைக்கிறார்கள். ஏன் இந்தி சினிமாவை ‘பான் இந்தியா’ என்று அழைப்பதில்லை? எந்த சினிமாவுக்கு ரசிகர்களிடம் இன்றைக்குக் கூடுதல் வரவேற்புள்ளது சொல்லுங்கள்? ’கேஜிஎஃப் 2’, ’புஷ்பா’ போன்ற தென்னிந்தியப் படங்கள்தான் நாடு முழுவதும் அபார வெற்றி அடைந்துள்ளன. இதைப்போல இந்தி படம் எதாவதொன்றை சொல்ல முடியுமா?” என்று சவால் விட்டார்.

எங்கும் இந்தி, எதிலும் இந்தி என்று மத்திய பாஜக அரசு இந்தி திணிப்பை அவ்வப்போது கையிலெடுப்பது வழக்கமாகவே உள்ளது. ஏப்ரல் மாதத் தொடக்கத்தில், “ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி மொழி தேசிய அளவில் ஏற்கப்பட வேண்டும்; இந்தியாவின் அதிகாரபூர்வ அலுவல் மொழி இந்தியாக மாற்றப்படும்” என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். இதை எதிர்த்து தமிழ் ஆதரவுக் குரலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எழுப்பிய சர்ச்சையே இன்னும் அடங்கியபாடில்லை.

அப்படியிருக்க சுதீப்பின் ‘பான் இந்தியா’ அடையாள மறுப்பை ஒட்டி இந்தி மொழி எதிர்ப்பு விவகாரம் மீண்டும் சூடுபிடித்து விட்டது. இம்முறை முதல் எதிர்வினை ஏப்ரல் 27-ம் தேதி வடக்கிலிருந்து தொடங்கியது. பொங்கி எழுந்த பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சுதீப்பை டேக் செய்து, ‘முன்பும் சரி, எக்காலத்திலும் சரி நமது தேசிய மொழியாக இந்தியே நீடிக்கும். எனது சகோதரரே, இந்தி உங்களது தேசிய மொழி இல்லையென்றால் எதற்காக உங்களுடைய தாய் மொழியில் ரிலீஸ் செய்த படத்தை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்களாம்?’ என்று இந்தியில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு கனிவோடு பதிலளித்த சுதீப், ’நான் சொல்ல வந்த கருத்தை இடத்துக்குப் பொருத்தமற்று அஜய் தேவ்கன் புரிந்து கொண்டதாகத் தோன்றுகிறது. அவரை நேரில் சந்திக்கும் போது இதை தெளிவாக எடுத்துரைப்பேன். நான் எல்லா மொழிகளின் மீது அன்பும் மரியாதையும் கொண்டிருப்பவன்’ என ட்வீட் செய்திருந்தார். கூடவே, ஒரு கேள்வியையும் எழுப்பியிருந்தார். ’எனக்கு இந்தி தெரிந்ததால் அஜய் தேவ்கனின் இந்தி மொழி பதிவைப் புரிந்து கொண்டேன். ஒருவேளை, நான் கன்னடத்தில் பதிலளித்திருந்தால் அது அஜய் தேவ்கனுக்கு புரிந்திருக்குமா?’ என்பதுதான் சுதீப்பின் அந்த சுளீர் கேள்வி.

‘நாங்களும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இல்லையா சார்?’ என்றும் வினவியிருந்தார் சுதீப். அவரது இந்த பதிவை வாசித்துவிட்டு ஒருவழியாக அஜேய் தேவகனும் சமாதானமானார். இருவருக்கும் இடையிலான ட்விட்டர் போர் முடிவுக்கு வந்தது.

ஆனால், இந்தியை தேசிய மொழி என்று அஜய் தேவ்கன் குறிப்பிட்டதற்கு கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி, சித்தராமையா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். “இந்தி மொழி நமது தேசிய மொழி கிடையாது. அதிகம் பேர் பேசிவிட்டால் மட்டும் இந்தி தேசிய மொழியாகிவிட முடியாது. ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே வரி, ஒரே அரசாங்கம் என்ற பாஜகவின் ஊதுகுழலாக அஜய் தேவ்கன் பேசியிருக்கிறார்” என்று குமாரசாமி சாடினார். மறுபுறம் சித்தராமையாவும், இதே கருத்தை வலியுறுத்தி ட்வீட் செய்திருந்தார். நாட்டின் மொழியியல் பன்முகத்தன்மையை மதிப்பது ஒவ்வொரு இந்தியரின் கடமை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இதன் விளைவாக #StopHindiImposition, #HindiIsNotNationalLanguage ஆகிய ஹேஷ்டேக் ட்விட்டர் வைரலானது.

இதற்கிடையில், இயக்குநர் ராம் கோபால் வர்மா, நடிகர் சோனு சூட் போன்றோர் சமாதான புறாவை பறக்கவிடும் தொனியில், தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர். இதில் ராம் கோபால் வர்மா, ‘வடக்கு, தெற்கு என்று பாராமல் ஒரே இந்தியா என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்’ என்று எழுதினார். சோனு சூட், ‘இந்தியாவின் ஒரே மொழி பொழுதுபோக்கு’ என்றார்.

கடைசியாக களமிறங்கிய சர்ச்சை ராணி கங்கனா ரனாவத், “சம்ஸ்கிருதம் நமது தேசிய மொழியாக இருக்க வேண்டும். ஏனென்றால் கன்னடம், தமிழ், குஜராத்தி, இந்தி ஆகிய மொழிகளைக் காட்டிலும் சம்ஸ்கிருதம்தான் மூத்த மொழி. இந்த மொழிகளெல்லாம் சம்ஸ்கிருதத்திலிருந்து பிறந்தவையே. பிறகு ஏன் சம்ஸ்கிருதம் தேசிய மொழி ஆக்கப்படவில்லை?” என்று மூன்றாம் உலகப்போருக்கான குண்டை வீசியிருக்கிறார்.

மொத்தத்தில் எல்லோரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது இந்திய அரசமைப்பின்படி இந்திய நாட்டிற்கு என்று தனியாகத் தேசிய மொழி கிடையாது. தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் சம அங்கீகாரம் வழங்க வேண்டும் என்கிற நீண்டநாள் குரலுக்கு இனியேனும் பதில் கிடைக்குமா?

x