‘இந்தியன் 2’ ஒவ்வொருவரையும் யோசிக்க வைக்கும்! - இயக்குநர் ஷங்கர் நம்பிக்கை


கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள படம், ‘இந்தியன் 2’. இதில், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். லைகா, ரெட் ஜெயன்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா, அனிருத், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், லைகா நிறுவனத்தின் தமிழ்க்குமரன், ரெட்ஜெயன்ட் நிறுவனத்தின் செண்பகமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் கமல்ஹாசன் பேசும்போது, “ஒரு சினிமாவை செய்துவிட்டு இரண்டாம் முறையாக அதை செய்யும்போது, அதேடைரக்டர் அதை இயக்குவது என்பது எனக்குத் தெரிந்து 2 பேருக்கு நடந்திருக்கிறது. ஒருவர் செசில் பி. டிமில், இன்னொருவர் ஹிட்ச்காக். செசில் பி.டிமில், ‘த டென் கமாண்ட்மென்ட்ஸ்’ படத்தைக் கருப்புவெள்ளையிலும் பிறகு அதையே கலரிலும் எடுத்தார். ஹிட்ச்காக் ‘த 39 ஸ்டெப்ஸ்’ படத்தைக் கருப்பு வெள்ளையிலும் மீண்டும் அதையே கலரிலும் எடுத்தார். அப்படியொரு வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. அது ஷங்கருக்கு கிடைத்திருக்கிறது. அவர் மூலம் எனக்கும் கிடைத்துள்ளது. ‘இந்தியன்’ படம் டப்பிங் பணியின்போது 2-ம் பாகம் எடுக்கலாம் என்றேன். 2-ம் பாகம் எடுப்பதற்கு முக்கியமான கருவை இன்றும் கொடுத்துக் கொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி. லஞ்சம் அதிகமானதால்தான் இந்தியன் தாத்தாவின் இரண்டாம் வருகைக்கான அர்த்தமே இருக்கிறது” என்றார்.

இயக்குநர் ஷங்கர் பேசும்போது, “என் படங்கள் எல்லாமே, இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்பதுபோல்தான் இருக்கும். ‘இந்தியன் 2’ படமும் அப்படித்தான். இந்தியன் தாத்தா இந்த காலகட்டத்தில் வந்தால் எப்படியிருக்கும் என்கிற கற்பனைதான் இந்தப் படம். ‘இந்தியன்’ படம் தமிழ்நாட்டில் நடப்பது போல இருந்தது. ‘இந்தியன் 2’ கதை மற்ற மாநிலங்களுக்கும் விரிகிறது. இந்தப் படம், பார்க்கிற ஒவ்வொருவரையும் யோசிக்க வைக்கும் என்று நம்புகிறேன்.

‘இந்தியன் 2’ இவ்வளவு சிறப்பாக வர, கமல் சார்தான் காரணம். முதல் பாகத்தில் கூட 40 நாட்கள்தான் அவருக்கு அந்த பிராஸ்தடிக் மேக்கப் போட்டோம். இதில் 70 நாட்கள். அப்படி மேக்கப்போட்டு நடிப்பது சாதாரண விஷயமில்லை. படப்பிடிப்புக்கு முதலில் வந்து கடைசியாகச் செல்வது கமல் சார்தான். ஏனென்றால் மேக்கப்பை கலைப்பதற்கு ஒரு மணி நேரம் ஆகும். அவர் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு காட்சிக்காக 4 நாட்கள் கயிற்றில் தொங்கியபடி நடித்தார்” என்றார்.