`பயமா இருக்கா, இனி பயங்கரமா இருக்கும்'- காவி துணியை குத்திக் கிழிக்கும் விஜய்


சமீப ஆண்டுகளாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களில் வரும் காட்சிகள் அல்லது திரைப்பட டீசர் அல்லது பாடல் வெளியிட்டு விழாவில் விஜய்யின் பேச்சுகள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான `மெர்சல்' திரைப்படத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டங்களை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இதற்கு அப்போதைய பாஜக தமிழக மாநில தலைவராக இருந்த தமிழசை சவுந்தரராஜன் நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்தார். அதுபோல் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, நடிகர் விஜய் முழுப்பெயரை கூறி விமர்சனம் செய்தார். பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் படம் வெளியாகி மெகா ஹிட் ஆனது. அதுபோல் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான `சர்க்கார்' திரைப்படத்தில் வெளிநாடுவாழ் இந்தியராக விஜய் நடித்திருப்பார். அந்த திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், யாரை எங்கு வைக்க வேண்டுமோ, அவர்களை அங்கு வைக்க வேண்டும் என அரசியல் பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த திரைப்படத்தில் கள்ளஓட்டு குறித்த காட்சிகள், நாயகனுக்கு இணையாக வரும் வரலட்சுமி சரத்குமாரின் பாத்திரப் பெயரான கோமலவள்ளி போன்றவை பெரும் சர்ச்சை கிளம்பியது. இதற்கு அடுத்த ஆண்டுகளில் வெளியான பிகில், தெறி, மாஸ்டர் போன்ற படங்களில் அரசியல் மற்றும் சர்ச்சைக்குள்ளாகும் காட்சிகள் இடம் எதுவும் பெறவில்லை.

இச்சூழலில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி இளசுகள் முதல் முதியவர்கள் வரை அசைப்போடச் செய்தது. இத்திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. வெளியான சில மணி நேரத்தில் கோடிக்கணக்கான ரசிகர்கள் அதனை பார்வையிட்டுள்ளனர்.

விஜய் திரைப்படத்தில் இடம் பெறும் அதிரடிக் காட்சிகள் இத்திரைப்படத்திலும் நிச்சயம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை திரைப்படத்தின் டீசர் ஏற்படுத்தியுள்ளது. இதில் வரும் காட்சி ஒன்றில் ஒருவரை விஜய் கத்தியால் குத்தும் காட்சியும், அதன்பின் யோகிபாபுவிடம் பேசும் விஜய் பயமா இருக்கா... இனி பயங்கரமா இருக்கும்... என்ற காட்சிகள் விஜய் ரசிகர்கள் ஹார்ட் பீட்டை எகிறச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.

இதெல்லாம் ரசிகர்களுக்கு விஜய் படம் வழக்கமாக போடும் தீனி. ஆனால், காவி நிற துணியை கத்தியால் விஜய் குத்திக் கிழிப்பது போன்ற காட்சி ஒன்று டீசரில் இடம் பிடித்துள்ளது. இதை ‘கப்பென்று’ பிடித்த இணைய விமர்சகர்கள் காவியை குத்திக் கிழிக்கும் விஜய் என திரைப்பட கட்சியை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் வரும் நாட்களில் பீஸ்ட் திரைப்படத்தில் வரும் காட்சிகள் இணையதளத்தில் பேசு பொருளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. விஜய் பேசிய வசனம் போல் இனி பயங்கரமா தான் இருக்கும் டீசரில் இடம் பெற்றுள்ள காட்சியை மையமாக வைத்து கிளம்புள்ளது சர்ச்சைகள்.

x