சினிமாவில் தொடர்ந்து தாக்குப்பிடிப்பது கஷ்டம்: விஜய் சேதுபதி


நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகும் படம், ‘பீனிக்ஸ்-வீழான்’. வரலட்சுமி, சம்பத் உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்டன்ட் இயக்குநர் ‘அனல்’ அரசு இயக்கியுள்ளார். இந்தப் படம் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகிறார். ஆக்‌ஷன் - ஸ்போர்ட்ஸ் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ். இசையமைக்கிறார். இதன் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில் பங்கேற்ற விஜய் சேதுபதி கூறும்போது, “இந்தப் படத்தின் கதையை சொல்லிவிட்டு, ‘அனல்’ அரசு மாஸ்டர் உங்கள் மகன் நடிக்க வேண்டும் என்றார். அவனிடமே பேசிவிடுங்கள் என்று சொல்லிவிட்டேன். சினிமாவில் தொடர்ந்து ‘சர்வைவல்’ ஆவது கஷ்டமானது. இதுபற்றி என் மகனிடம் பலமுறை கூறியிருக்கிறேன். அதிகம் பேசியிருக்கிறோம். அந்த அழுத்தம் எவ்வளவு பாரமாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். அதையும் சொல்லியிருக்கிறேன். ஆனாலும் அவனுக்கு இதுதான் பிடித்திருக்கிறது. ‘அனல்’ அரசு மாஸ்டர் மூலம் அறிமுகமாவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தின் டீஸர் பார்த்து மகிழ்ந்தேன்” என்றார். இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

x