’லதா மங்கேஷ்கரின் வெற்றிடம் எப்போதும் நிலைத்திருக்கும்’: ஏ.ஆர்.ரகுமான் உருக்கம்


லதா மங்கேஷ்கருடன் ஏ.ஆர்.ரகுமான்

“லதா மங்கேஷ்கருக்காக சில பாடல்களைப் பதிவு செய்திருப்பதும் அவருடன் பாடியிருப்பதும் எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்” என்று இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படும் பாடகி லதா மங்கேஷ்கர் (92), இன்று காலை காலமானார். கரோனா மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த மாதம் மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் உடல் நிலை நேற்று மோசமானதை அடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், இன்று காலை காலமானார். அவர் மறைவுக்கு குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

“மறைந்த லதா மங்கேஷ்கர் பாடகி மற்றும் ஐகான் மட்டுமல்ல, அவர் இந்தியாவின் ஆன்மாவாக இருந்தார். அந்த வெற்றிடம் எப்போதும் நிலைத்திருக்கும். அவருடனான என் அனுபவம், சிறு வயதில் மறைந்த என் தந்தையிடம் இருந்து தொடங்குகிறது. அவருடைய அறையில் லதாஜியின் புகைப்படம் இருக்கும். காலையில் எழுந்ததும் அந்தப் புகைப்படத்தை பார்த்துவிட்டு, அந்த உத்வேகத்தில்தான் ரெக்கார்டிங்குக்கு அவர் செல்வார். லதாஜிக்காக சில பாடல்களை நான் பதிவு செய்திருப்பதும் அவருடன் பாடியிருப்பதும் எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.

நான் இசை அமைப்பாளராக என்னை கற்பனை செய்துகொள்வதால், நான் பாடும் பாடல்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். நான் அவருக்காக இசை அமைத்த சில பாடல்களின் போது, மாலை 4 மணிக்கு ஒத்திகை முடிந்ததும் அவர் தனது உதவியாளருடன் சென்று மெதுவாக, ஒவ்வொரு பாடல் வரியையையும் தெளிவாகப் பாடத் தொடங்குவார். அந்த சம்பவம் என் வாழ்க்கையை மாற்றியது. அப்போதிருந்து எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டேன். ஒவ்வொரு பாடல் வரிகளையும் அதன்பின் உள்ள நோக்கத்தையும் படிக்கத் தொடங்கினேன்.

ஏ.ஆர்.ரகுமான்

ஒருநாள் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அந்தக் காலத்தில் இசை அமைப்பாளர் நெளஷத், பாடல் ஒத்திகைக்காக 11 நாட்கள் வரச் சொல்லுவார் என்றார். ஒவ்வொரு பாடலையும் எவ்வளவு ஆழமாக, அதிக நேரம் செலவழித்து, ஆர்வத்தோடு உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்” என்று கூறியுள்ளார்.

ட்விட்டரில் லதா மங்கேஷ்கர் அருகில் அமர்ந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஏ.ஆர்.ரகுமான், அன்பு, மரியாதை, பிரார்த்தனை என்று குறிப்பிட்டுள்ளார்.

x