ஆன்லைன் வகுப்பு மூலம் ஏற்படும் கண் பாதிப்பை தவிர்ப்பது எப்படி?


கண் மருத்துவர் பெ. ரங்கநாதன்

கரோனா தொற்றுப் பரவல் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. எனினும், மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் மூலமும் வகுப்புகள் நடத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் ஆன்லைன் வகுப்புகள் வசதியாக இருப்பதால் பெரும்பாலான மாணவ, மாணவியர் ஆன்லைன் வகுப்புகளையே அதிகம் விரும்புகின்றனர். இதற்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது செல்போன்கள்.

செல்போன்கள் சிறிய அளவில் இருப்பதால் அவற்றை அருகில் வைத்து வகுப்புகளை கவனிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் ஆன்லைன் மூலம் நீண்ட நேரம் வகுப்புகளை கவனிப்பதால், மாணவர்களின் கண் பார்வையில் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக கண் மருத்துவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதில் இருந்து மாணவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள், எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகள் குறித்து நாமக்கல்லைச் சேர்ந்த அரசு கண் மருத்துவர் பெ. ரங்கநாதன் அளித்த விளக்கம்:

“செல்போன் ஆன்லைன் வகுப்புக்கான சாதனம் அல்ல. அது குழந்தைகளின் கண்ணில் பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகள் ஆன்லைனில் தொடர்ந்து படிக்கும்போது அவர்களுக்கு கண் பாதிப்பான கண் வறட்சி நோய், கண் பார்வை குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆன்லைன் வகுப்பு படிக்கும் குழந்தைகள் கண்டிப்பாக செல்போன் பயன்படுத்திப் படிப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளை கம்ப்யூட்டர் அல்லது தொலைக்காட்சி பெட்டியைப் பயன்படுத்திதான் பார்க்க வேண்டும். ஆன்லைன் மூலமாக நமது செல்போனை, தொலைக்காட்சியில் இணைத்து வகுப்புகளை கவனிக்கலாம்.

ஆன்லைனில் படிக்கும் குழந்தைகள் ஒரு மணி நேரம் பெற்றோரின் உதவியுடன் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் வெளியில் விளையாட (Outdoor Games) வேண்டும். பள்ளிகள் நேரடி ஆன்லைன் வகுப்புகளுக்குப் பதிலாக பதிவு செய்யப்பட்ட வீடியோ மூலம் பாடங்களைக் கொடுத்து தொலைக்காட்சிப் பெட்டி மூலம் பார்க்கச் செய்யலாம். அப்போது அதைப் பெற்றோர்களும் பார்க்க இயலும்.

பதிவு செய்யப்பட்ட வீடியோவை குழந்தைகள் பார்க்கும் போது 45 நிமிடத்துக்கு ஒருமுறை 30 முதல் 60 நிமிடம் வரை ஓய்வு தேவை. முக்கியமாக 20-20-20 விதி என்பது முக்கியம். அதாவது 20 நிமிடத்துக்கு ஒருமுறை, 20 அடி தூரத்தில் 20 விநாடிகள் பார்த்துப் பழக வேண்டும். ஆன்லைன் வகுப்பு உள்ள குழந்தைகள் 6 மாதங்களுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

வீட்டில் 20 அடி தூரத்தில் உங்கள் குழந்தைகளை அமரச்செய்து செய்தி தொலைக்காட்சியில் கீழே ஓடும் செய்திகளை வாசிக்கச் சொல்லுங்கள். அதை வாசிக்கச் சிரமப்பட்டால், கண் மருத்துவரை அணுகவும். குழந்தைகளுக்கு கீரை காய்கறிகள், மீன், பால், முட்டை, பப்பாளி, மஞ்சள் பூசணி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட், தரமான கடலை மிட்டாய் அல்லது கடலைப் பருப்பு, பாதாம் பருப்பு போன்ற கண்ணுக்கு ஆரோக்கியமாக உணவுகளை வழங்க வேண்டும்” என்றார்.

x