கரோனா பரவல் காரணமாக தியேட்டர்களில் 50 சதவிகித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அரசு அறிவித்திருப்பதால், மெகா பட்ஜெட் படங்களான வலிமை, ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம் போன்றவை பொங்கல் ரேஸில் இருந்து விலகி இருக்கின்றன. இந்த சூழலில் பொங்கலை குறிவைத்து 8 படங்கள் களமிறங்க உள்ளன. இவற்றில் சசிகுமார் நடித்திருக்கும் ’கொம்பு வச்ச சிங்கம்டா’ படமும் ஒன்று. இதன் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரனிடம் பேசினோம்.
’கொம்பு வச்ச சிங்கம்டா’ என்ன மாதிரியான கதை?
கிராமங்கள்ல சாதாரண மனிதனை, ’உன்ன மாதிரி முடியுமா? நீ எவ்வளவு பெரிய ஆளு, நீ வேற மாதிரிடா’ன்னு கொம்பு சீவி விடற வேலைகள் வழக்கமா நடக்கும். அதை உண்மைன்னு நம்பி பல பேர் தெனாவட்டா அலைஞ்சுட்டு இருப்பாங்க. அப்படி கொம்பு சீவி விடறதால ஏற்படும் ஒரு பிரச்னை, எங்க கொண்டு போயி விடுதுங்கறதுதான், ’கொம்பு வச்ச சிங்கம்டா’.
உண்மைச் சம்பவக் கதைன்னு சொன்னாங்களே?
1993-94 காலகட்டத்துல, மதுரையை சுத்தி சுமார் 15 கிராமங்கள் மத்தியில தொடர் கொலை சம்பவங்கள் நடந்தது. நட்புக்குள்ள நடந்த இந்தச் சம்பவங்கள் அப்போ பரபரப்பா பேசப்பட்டது. அதை மையமா வச்சு, திரைக்கதை அமைச்சிருக்கேன். ரத்தமும் சதையுமான கதையா இந்தப் படம் இருக்கும். நட்பின் மேன்மையை சொல்றதாகவும் இருக்கும்.
இது சசிகுமாரோட உங்களுக்கு 2வது படம்..
நாங்க இணைஞ்ச ’சுந்தரபாண்டியன்’ படம் பெண்கள் மத்தியில அவரை அதிகமா ரீச் பண்ண வச்சது. ‘சுப்ரமணியபுரம்’, ’நாடோடிகள்’ படங்கள்ல கோபக்கார இளைஞரா நடிச்சிருந்த சசிகுமார், ’சுந்தரபாண்டியன்’ல எல்லாருக்கும் பிடிச்சவரா நடிச்சிருந்தார். அந்த கேரக்டரோட இன்னொரு வெர்ஷனா, இந்தப் படத்துல அவர் இருப்பார். எல்லா குடும்பத்துக்கும் பிடிச்சவரா அவர் நடிச்சிருக்கார். நானும் சசிகுமாரும் மீண்டும் சேரும்போது ரசிகர்கள்கிட்ட எதிர்பார்ப்பு இருக்கும்.
ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணணும்னு நினைச்சதும் முதல்ல ஒரு கதை சொன்னேன், சசிகுமார் சார் கேட்டுட்டு, ’அது வேண்டாம், நம்மட்ட இருந்து ரசிகர்கள் வேற எதிர்பார்ப்பாங்க’ன்னு சொன்னார். அதுக்குப் பிறகு மூனு மாசம் கழிச்சு, சொன்ன கதைதான் ’கொம்புவச்ச சிங்கம்டா’. சூப்பரா இருக்கு, பண்ணுவோம்னு சொன்னார். அப்படி உருவானதுதான் இந்தப் படம்.
ஷூட்டிங் எப்பவோ முடிஞ்சாச்சு. ரிலீஸ் ஏன் தாமதம்?
படத்தை சொன்னபடி, சொன்ன நேரத்துல முடிச்சாச்சு. எந்தப் பிரச்னையும் இல்லை. ரிலீஸ் தள்ளிப் போனதுக்கு கோவிட்தான் காரணம். சரியான நேரத்துல, நல்ல தேதியில கொண்டு வரணும்னு காத்திருந்தோம். இப்போதான் அமைஞ்சது. ஹீரோயினா மடோனா செபாஸ்டியன் நடிச்சிருக்காங்க. மறைந்த மகேந்திரன் சார் முக்கியமான வேடத்துல நடிச்சிருக்கார். தயாரிப்பாளர் இந்தர்குமாரும் படத்துல நடிச்சிருக்கார்.
அடுத்து ’முந்தானை முடிச்சு’ ரீமேக்லயும் சசிகுமாரை இயக்க இருக்கீங்க..?
ஆமா. பாக்யராஜ் சார் ஸ்கிரிப்ட். இப்ப உள்ள டிரெண்டுக்கு ஏற்ப சின்ன சின்ன மாற்றங்கள் பண்ணிக் கொடுத்திருக்கார். சசிகுமார் கேரக்டரை மட்டும் நான் இன்னும் மெருகேத்தறேன். அந்த படத்துல முருங்கைக்காய் மேட்டர் ரொம்ப ஃபேமஸ். படத்தோட வெற்றிக்கு அப்ப, அந்த விஷயமும் காரணம். அதை விட்டுறவும் முடியாது. அந்தத் தெரிஞ்ச விஷயத்தை எப்படி சொன்னா ரசிகர்கள் ஏத்துப்பாங்களோ, அப்படிச் சொல்ல முயற்சி பண்றோம். சசிகுமார் சார் கால்ஷீட் கொடுத்ததும் ஷூட்டிங் போக வேண்டியதான்.