கொச்சி: இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் மம்மூட்டியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடுதல் தகவலாக இப்படத்தில் நயன்தாரா நடிப்பது குறிப்பிடத்தக்கது.
‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘ஜோசுவா’ படங்களுக்குப் பிறகு ‘துருவ நட்சத்திரம்’ படத்தை எப்படியாவது திரையரங்குகளில் வெளியிட்டுவிட வேண்டும் எனப் போராடி வருகிறார் கவுதம் மேனன். இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக மம்மூட்டி நடிக்கும் படத்தை, கவுதம் மேனன் மலையாளத்தில் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
கவுதம் மேனன் மலையாளத்தில் இயக்குநராக அறிமுகமாகும் படம் இது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை. இதில் மம்மூட்டி ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக ‘ராப்பக்கல்’,‘புதிய நிர்ணயம்’, ‘பாஸ்கர் த ராஸ்கல்’ ஆகிய படங்களில் மம்மூட்டியும், நயன்தாராவும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.