பயாஸ்கோப் -19 : சர்வதேச திரைப்பட விழாவின் சிறந்த படங்கள் - 2


படத்தில் ஒரு காட்சி...

உலகின் தலைசிறந்த திரைப்பட இயக்குநர்களை வரிசைப்படுத்தினால் நிச்சயம் முதல் ஐந்து இடங்களுக்குள் ஸ்பானிய இயக்குநர் பெட்ரோ அல்மோதோவர் இருப்பார். காரணம், பெண்களையும் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளையும் மையப்படுத்தும் படங்களை இயக்கி திரை ரசிகர்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்தவர் அல்மோதோவர்.

‘வால்வர்’, ‘டாக் டு ஹர்’, ‘பெய்ன் அண்ட் க்ளோரி’, ‘ஜுலியட்டா’ உள்ளிட்ட இவருடைய பல திரைப்படங்கள் உலக அரங்கில் கவனம் பெற்றுள்ளன. ஆஸ்கர் உள்ளிட்ட பல விருதுகளையும் அள்ளிக் குவித்தவர் ஆல்மதோவர். ‘Auteur’ (படைப்பில் தனக்கான தனித்துவத்தை உருவாக்கிவர்கள்) என்ற ஃபிரெஞ்சு சொல்லுக்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த ஸ்பானிய திரைமேதை. இத்தகைய புகழின் உச்சியில் இருக்கும் பெட்ரோ அல்மோதவர், 2021-ம் ஆண்டில் இயக்கிய திரைப்படம்தான் 'பேரலல் மதர்ஸ்' இத்திரைப்படம் அவருடைய முந்தைய சாதனைகளை முறியடிக்கும் வகையில் அமைந்துள்ளது இன்னும் சிறப்பு.

பொதுவாக இயக்குநர்களுக்கும், அவர்களின் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கும் எப்போதும் ஓர்மை இருக்கும். அதுவே அவர்களை தொடர்ந்து ஒன்றாக பணியாற்ற வைக்கும். பெட்ரோ அல்மோதோவருக்கும் நடிகை பெனிலோப் குரூஸுக்கும் இடையே அப்படியான ஒரு மாயஜால புரிதல் உண்டு. அதனால் தான் இந்தக் கூட்டணி கால் நூற்றாண்டைக் கடந்தும் திரைப்படங்களில் கலக்கி வருகிறது. அந்த வகையில் இதோ, இவர்களின் எட்டாவது படமான ‘பேரலல் மதர்ஸ்’ படமும் பேசவைக்கிறது.

இந்தப் படத்தில் அரசியல் கலந்த குடும்பக் கதையைச் சொல்லி இருக்கிறார் இயக்குநர். இரண்டு பெண்கள் மற்றும் அவர்களது குழந்தைகளை மையப்படுத்தி கதை நகர்ந்தாலும் ஸ்பெயினின் சிக்கலான வரலாற்றையும் பதிவு செய்கிறது இப்படம். உண்மையில் இப்படத்தில், அல்மோதோவரின் வழமையான கதைசொல்லல் முறையான ‘மெலோட்ராமா’ ஆங்காங்கே தென்படுகிறது. எனினும் முற்றிலும் வித்தியாசமான கதைக்களம் மற்றும் கதை நிகழ்வுகளால் இப்படம் நம்பகத்தன்மையுடனும் பார்வையாளர்களை ஒன்றச் செய்துவிடும். குறிப்பாக, ஜானிஸ் மற்றும் அனாவின் வாழ்வியலையும், உறுதியான இரண்டு பெண்களுக்கு இடையே நிகழும் உணர்வுப் போராட்டத்தையும் நேர்த்தியாக படம்பிடித்துள்ளார் இயக்குநர்.

மாட்ரிட்டில் ஒரு முன்னணி பத்திரிகையின் மிகச் சிறந்த புகைப்படக் கலைஞர் ஜானிஸ் (பெனிலுப் க்ரூஸ்). நாற்பது வயது நங்கையான ஜானிஸ், நடுத்தர வயது தடயவியல் தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ஆர்டுரோவுடன் (இஸ்ரேல் எலிஜால்டே) காதலில் விழுகிறாள். இருவரும் நெருக்கமாக பழகியதில் ஜானிஸ் கருவுறுகிறாள். “இப்போது குழந்தை வேண்டாம்” என்று வலுவான ஒரு காரணத்துடன் ஆர்டுரோ மறுக்கிறார். ஆனால், பிடிவாதமாக குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதாகச் சொல்லும் ஜானிஸ், இருவரும் பிரிந்துவிடுவதே நல்லது என்ற முடிவெடுக்கிறாள்.

நிறைமாதத்தில் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அட்மிட் ஆகிறாள் ஜானிஸ். அதே அறையில் இன்னொரு பெண்ணும் மகப்பேறை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறாள். அந்த இளம் பெண் அனாவுக்கு (மிலேனா ஸ்மிட்) 17 வயதுதான் ஆகிறது. ஜானிஸ் எந்தளவுக்கு மகிழ்ச்சியுடன் தன் குழந்தையின் வரவை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறாளோ அதற்கு முற்றிலும் மாறான மனநிலையில் இளம் வயதில் சந்தர்ப்பவசமாக கருவுற்றதை வெறுத்து மிகவும் பயந்த மனநிலையில் அனா இருக்கிறாள். அவளை ஜானிஸ் சமாதானப்படுத்துகிறாள். “பிள்ளை முகம் பார்த்தால் எல்லாம் சரியாகிவிடும்” என்றும் அனாவிற்கு ஆறுதல் சொல்கிறாள். ஆத்மார்த்தமான உரையாடல்களில் தொடங்கி, இரண்டு பெண்களும் தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் வரை அவர்களிடையே மெல்லியதாக ஒரு நட்பு உருவாகிறது. இந்நிலையில் இருவருமே அழகான பெண் குழந்தைகளுக்குத் தாயாகிறார்கள்.

குழந்தையைப் பார்க்க மருத்துவமனைக்கு வருகிறாள் ஜானிஸின் தோழியும் அவள் பணிபுரியும் பத்திரிகையின் நிறுவனருமான எலெனா (ரோஸி டி பால்மா). அனாவின் அம்மா தெரேசா (ஐடானா சான்செஸ்-கிஜான்) ஒரு வளரும் நடிகை. தன்னை பற்றி மட்டுமே சிந்திக்க தெரிந்தவள். வேறு வழியின்றி, விவாகரத்து பெற்று பிரிந்துவந்த கணவனின் வேண்டுகோளுக்கு இணங்கி அவரிடம் வளர்ந்து வந்த மகள் அனாவை பார்க்க வருகிறாள்.

இந்நிலையில், இரண்டு குழந்தைகளுக்கும் உடலியலாக ஏதோ பிரச்சினை என்று சொல்லி மருத்துவர்கள் தனியாக பிரித்து எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். சில மணி நேரத்தில் குழந்தை கிடைக்கப்பெற்றதும் அவரவர் உலகுக்கு திரும்புகிறார்கள். ஜானிஸ் ஆசை ஆசையாக மகளுக்கு சிஸிலி என்று பெயர் வைக்கிறாள். சந்தோஷத்தில் மிதந்து பறக்கிறாள். இன்னொரு பக்கம், இளம் பெண்ணான அனாவுக்கு குழந்தையைப் பார்த்ததும், இவளுக்காக நாம் வாழவேண்டும் என்று ஒரு பிடிப்பு ஏற்படுகிறது. அவளது அம்மா தெரேசாவோ நடிக்க சான்ஸ் கிடைத்ததும், பிரசவித்த மகளை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிடுகிறாள். இப்படியான சூழலில் அனாவின் குழந்தை எதிர்ப்பாராத விதமாக இறந்து போகிறது.

சில மாதங்களுக்குப் பிறகு தன் வீட்டின் அருகே உள்ள காபி கடையில் அனா வேலை செய்வதை ஏதேச்சையாக பார்த்த ஜானஸ், அவளை தன் வீட்டுக்கு அழைத்து வருகிறாள். அவளுக்கு விருப்பம் இருந்தால் வீட்டையும் குழந்தையையும் பராமரிக்கும் வேலையை செய்ய முடியுமா என்று தயக்கத்துடன் கேட்கிறாள் ஜானஸ். மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்கிறாள் அனா.

இதற்கிடையே, தனது கொள்ளுத் தாத்தா மற்றும் அவருடன் சேர்த்து புதைக்கப்பட்ட போர் வீரர்களின் உடல்களைத் தோண்டி எடுத்து, உரிய மரியாதையுடன் அவர்களை மீள் அடக்கம் செய்ய விரும்புகிறாள் ஜானஸ். அவளுக்கு உறுதுணையாக அந்த கிராமமே இயங்கி வருகிறது. அந்த புலனாய்வு விஷயமாகத்தான் முதன்முதலாக ஆர்டுரோவை சந்தித்திருப்பாள் ஜானஸ். அவளை தற்காலிகமாக பிரிந்திருந்தாலும், தங்களுக்குப் பிறந்த குழந்தையைப் பார்க்க ஆவலுடன் வருகிறார் ஆர்டுரோ. ஆனால், குழந்தையைப் பார்த்த அவருக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது.

தனது சந்தேகத்தை நேரடியாக ஜானஸிடம் கேட்டுவிடும் ஆர்டுரோ, “இது என்னுடைய குழந்தையில்லை. எனக்கு முன்பு வேறு யாருடனாவது உறவில் இருந்திருக்கிறாயா?” என்கிறார். இதைக் கேட்டு மனம் உடைந்துவ்டும் ஜானஸ், தனக்கு அப்படி யாருடனும் எந்த உறவும் இல்லை என மன்றாடுகிறாள். இருந்த போதும், பெற்ற தகப்பனுக்கே சந்தேகம் வந்துவிட்டதால் அதைப் போக்க மருத்துவ பரிசோதனைக்கு தன்னையும் குழந்தையையும் உட்படுத்திக் கொள்கிறாள். ஆனால், சோதனை முடிவு அவருக்கு பேரதிர்ச்சியைக் கொட்டுகிறது. அந்த அதிர்ச்சியிலிருந்து அவள் எப்படி மீண்டாள், மீண்டும் காதலனுடன் ஜானஸ் கைகோத்தாளா என்பதை எல்லாம் மீதிக் கதையில் சொல்கிறார் இயக்குநர்.

அனாவின் குழந்தை இறந்தது எப்படி, தனது குழந்தை குறித்த மருத்துவ உண்மையை தெரிந்து கொண்ட ஜானஸ், அதை எப்படி கையாள்கிறாள், சர்வாதிகாரர்களின் சூழ்ச்சியால் கொல்லப்பட்டு 40 ஆண்டு காலம் புதைகுழியில் கிடந்த தனது முன்னோர்களின் உடல்களின் எச்சத்தை ஜானஸ் எவ்வாறு மீட்டெடுத்து புதிய கல்லறைக்கு மாற்றுகிறாள் என்பதை எல்லாம் சுவாரஸ்யம் குறையாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். தாய்மை, நட்பு, தன்பாலின ஈர்ப்பு, பொறாமை போன்ற மனித உணர்வுகளை தன் கதாபாத்திரங்கள் மூலம் சித்தரித்து அன்பு ஒன்றே எத்தகைய சூழலிலும் மனிதர்களை காப்பாற்றும் வல்லமை பெற்றது என்பதையும் நீதிபோதனையாக இல்லாமல் மிக இயல்பாகச் சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

பெட்ரோ ஆல்மோதோவர் படங்களில் எப்போதும் பிரதானமாக இருப்பது அவர் பயன்படுத்தும் வண்ணங்கள். ‘mes en scene’ எனப்படும் உத்தியை மிக அழகாக பயன்படுத்தும் திரைக் கலைஞர் அவர். அதாவது, ஒரு காட்சியை திரையில் மெருகூட்டத் தேவையான அம்சங்களை உருவாக்குவதில் அவர் வல்லுனர். அந்த வகையில் இந்தப் படத்திலும் சூழல், இசை, ஒளிப்பதிவு என அனைத்தையும் முழுக் கட்டுப்பாட்டில் வைத்து, கதைக்கான அச்சு அசல் உலகை மிக நுட்பமாக கட்டமைத்துள்ளார். இப்படத்தில் அழகிய மாயஜால வித்தையைச் செய்து, படத்தின் ஒவ்வொரு காட்சியின் முழுமையையும் ரசிகர்களை உணரச் செய்துவிடுகிறார்.

மனதைக் கொள்ளை கொண்டுபோகும் விதமாக படத்தில் இசையும் மிக முக்கிய பாத்திரம் பெறுகிறது. அந்தளவுக்கு இசையமைப்பாளர் ஆல்பர்டோ இக்லேசியாஸ் நேர்த்தி காட்டி இருக்கிறார். தொடங்கும் போது சாதாரணமாக நகர்ந்தாலும் இறுதிக் காட்சிகளில் மனதைத் தொட்டுவிடுகிறது படம்.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பெண்களும் அவர்கள் எதிர்நோக்கும் வாழ்வியல் சிக்கல்களும் ஒன்றுதான். முக்கியமாக, தாய்மை அடைந்த பின் அவர்களின் வாழ்க்கை மாறும் விதத்தை இப்படம் வேறொரு கோணத்தில் பதிவு செய்கிறது. விளையாட்டுப் பெண்ணாக இருக்கும் இளம் தாய், ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தபின் எவ்வாறு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் உருமாற்றம் பெறுகிறாள் என்பதை தெள்ளத் தெளிவாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர்.

ஒருவர் எத்தகைய தவறுகளைச் செய்திருந்தாலும் அவரை மன்னிப்பதன் மூலமே, அமைதியான வாழ்க்கையையும், அதன் வசீகரத்தையும் மீட்டுருவாக்கம் செய்யமுடியும் என்பதை தெளிந்த நீரோடை போல் அதே சமயம் அழுத்தமாகச் சொல்கிறது பேரலல் மதர்ஸ்!

x