இளமையும் இனிமையுமான இளையராஜா!


இசைஞானி இளையராஜா

இசைஞானி இளையராஜா தனது இசைப் பணியில் மிகத் தீவிரமாக இயங்குபவர். அவரது இசைக்கூடம் ஒரு தவக்கூடத்துக்கு இணையான அமைதியில் மூழ்கியிருக்கும். அவரது இசையில் வெளிப்படும் துல்லியமும் நுட்பமும் மேதைமையும் தனது பணியில் அவர் காட்டும் தீவிர ஒழுங்கின் கலை வெளிப்பாடுகள்.

புகழ்பெற்ற புல்லாங்குழல் கலைஞர் அஷ்வினி கெளசிக், சமீபத்தில் இளையராஜாவின் இசையிலான ஒலிப்பதிவில் புல்லாங்குழல் வாசித்ததைப் பற்றித் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார். “இளையராஜாவுடன் பணி செய்த நேரம் முழுவதும் அன்றைய இசைப்பதிவு குறித்த பேச்சைத் தவிர வேறு எதையும் அவர் பேசவில்லை. அது எங்கள் வேலையில் முழுமையான கவனம் செலுத்த உதவியது” என்று அதில் அஷ்வினி குறிப்பிட்டார்.

அந்த அளவுக்குத் தன் பணி நேரம் முழுவதும் இசைமயமாக இருக்கும் இளையராஜா, தனது அபாரமான இசைஞானத்தால் மட்டுமல்ல கறார்த்தன்மையாலும் கண்டிப்பான குணத்தாலும் மொத்தச் சூழலையும் தன் வசப்படுத்திவைத்திருப்பார். ஒலிப்பதிவுக் கூடங்களில் மட்டுமல்ல, மேடை இசைக் கச்சேரிகளிலும் அவரது கறார்த்தன்மையைக் கவனிக்க முடியும். இளையராஜாவின் நெருங்கிய நண்பரான எஸ்பிபி-யே அவ்வப்போது இம்ப்ரோவைஸ் செய்து மேடையில் பாடினால், ராஜா செல்லமாக முறைப்பார். ஒரு நோட்ஸ் தவறி வாசித்தாலும் சம்பந்தப்பட்ட இசைக் கலைஞரை மீண்டும் இசைக்கச் செய்வார். ஜேசுதாஸ் போன்ற பெருங்கலைஞர்களே டைமிங் தவறிப் பாடினால், மீண்டும் பாட வேண்டியிருக்கும்.

மேடை இசைக் கச்சேரியில் எஸ்பிபியும் இளையராஜாவும்...

அதே இளையராஜா நெகிழ்வான தருணங்களில் குழந்தைமையின் குறும்புகளுடன் அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்திவிடுவார். மேடைகளில் எஸ்பிபி, மனோ தொடங்கி தனது பிரதான இசைக் கலைஞர்களான பிரபாகர், நெப்போலியன் என அனைவரிடமும் சிரித்துப் பேசி கலகலக்க வைப்பார். பொது நிகழ்ச்சிகளில் ரசிகர்களிடமும் அதே நகைச்சுவை உணர்வைப் பகிர்ந்துகொள்வார்.

அதே உற்சாகம், இன்று அவரிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் ஒவ்வொரு புத்தாண்டும் தொடங்கும் கணத்தில் ஒலிக்கும், ‘இளமை இதோ இதோ’ பாடலை, மிகவும் மகிழ்வான உணர்வுடன் அவர் பாடும் காணொலி இன்று சமூகவலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. காருக்குள் அமர்ந்தபடி அதைப் பதிவுசெய்து தன் ரசிகர்களுக்குப் பரிசளித்திருக்கிறார் ராஜா.

ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கமல்ஹாசன், அம்பிகா உள்ளிட்டோர் நடித்த ‘சகலகலாவல்லவன்’ (1982) படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடல், தொடர்ந்து 40-வது ஆண்டாக புத்தாண்டுப் பாடலாக ஒலிக்கவிருக்கிறது.

புத்தாண்டு பிறக்கும் தருணத்துக்கான ரகளையான கவுன்ட்வுனாக அதிரத் தொடங்கும் இசை, எஸ்பிபி-யின் ‘ஹாய் எவ்ரிபடி... விஷ் யூ ஹேப்பி நியூ இயர்’ எனும் உற்சாக வாழ்த்துடன் பாடல் தொடங்கும். ஆர்க்கெஸ்ட்ரேஷனுக்குப் பெயர் பெற்ற இளையராஜா ஆர்ப்பாட்டமும் துள்ளலும் மிக்க டிஸ்கோ பாணியில் அந்தப் பாடலை உருவாக்கியிருப்பார்.

அந்தப் பாடலை மிகப் பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்த மிகுந்த பிரயத்தனம் எடுத்துக்கொண்டதாக இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பதிவுசெய்திருக்கிறார். புகழ்பெற்ற மலையாளத் திரைப்படமான ‘அங்கமாலி டயரீஸ்’ போன்ற படங்களிலும் அந்தப் பாடல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இன்று அந்தப் பாடலை இளையராஜாவே பாடிப் பதிவிட்டிருப்பதால், புத்தாண்டுக் கொண்டாட்ட மனநிலை, தமிழ்த் திரையிசை ரசிகர்கள் மத்தியில் காலையிலிருந்தே களைகட்டிவிட்டது. இளையராஜா இசையின் இனிமையுடன் தொடங்கப்பட்டும் புதிய ஆண்டு!

x