இங்க நான் தான் கிங்கு - ஒரு நிமிட விமர்சனம் 


திருமணம் முடிக்க சொந்த வீடு வேண்டும் என்பதால் ரூ.25 லட்சத்துக்கு வீடு கட்டுகிறார் சந்தானம். அவர் எதிர்பார்த்தபடி ஜமீன் குடும்பத்தில் வரன் அமைகிறது. திருமணமும் நடக்கிறது. ஆனால் அதில் ஒரு சிக்கல். மறுபுறம் சென்னையில் குண்டு வைக்க திட்டமிடும் தீவிரவாத கும்பலைச் சேர்ந்த ஒருவர் சந்தானம் மற்றும் அவரது குடும்பத்தால் கொல்லப்படுகிறார். யார் அவர்? சந்தானத்துக்கு இருக்கும் மற்ற பிரச்சினைகள் என்ன என்பது படத்தின் மீதிக்கதை.

சந்தானம் தனது நடிப்பால் மொத்தப் படத்தையும் தாங்குகிறார். ஆனால் உருவகேலியை மட்டும் விடவில்லை. அறிமுக நடிகை பிரியாலயாவுக்கு இது முதல் படம் என்ற நினைவு வராத அளவுக்கு நடிப்பில் தேர்கிறார். தம்பி ராமையா, பால சரவணனின் டைமிங் காமெடி கைக்கொடுக்கிறது. விவேக் பிரசன்னா, முனிஷ் காந்த், லொள்ளுசபா மாறன், மனோபாலா, சேஷூ, கூல் சுரேஷ் என கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.

இமான் இசையில் ‘மாயோனே’ பாடல் ரிபீட் மோடில் கேட்கலாம் போன்ற உணர்வை தருகிறது. மற்ற பாடல்கள் ஈர்க்கவில்லை. பின்னணி இசையில் ஒரு இடத்தில் புதுமை படைத்துள்ளார். முதல் பாதியில் படம் சில இடங்களில் காமெடியாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் திருப்பங்களால் நகரும் திரைக்கதையில் ஆங்காங்கே சில காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

அதேபோல படத்தில் வரும் சில புதுமையான விஷயங்கள் தியேட்டரை ஆர்பரிக்க வைக்கிறது. இவை தவிர்த்து பார்த்து பழகிய காட்சிகள், காமெடி என்ற பெயரில் நிகழும் துன்புறுத்தல்கள், சுவாரஸ்யமில்லாத இரண்டாம் பாதி, நீண்...ட க்ளைமாக்ஸ் என சுமாராக முடிகிறது படம்.