தமிழ் சினிமாவில் பெண்களின் பங்கு அதிகரித்திருப்பது ஆரோக்கியமான விஷயம்!


தமிழ் சினிமாவில் ‘முகவரி’ திரைப்படம் மூலம் நடன வடிவமைப்பாளராக முகவரி கிடைக்கப்பெற்றவர், நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழி சினிமாக்களில் நடன வடிவமைப்பாளராக இருக்கும் பிருந்தா மாஸ்டர், சினிமா இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். ஆம், துல்கர் சல்மான், அதிதி ராவ், காஜல் அகர்வால் நடிப்பில் ‘ஹே சினாமிகா’ படத்தைப் பெரும் சவால்களுக்கு இடையே இயக்கி முடித்திருக்கிறார் பிருந்தா. பிப்ரவரி மாதம் படத்தை வெளியிடும் முனைப்பில், பின்னணி வேலைகளில் மும்மரமாக இருந்தவரைக் காமதேனு இதழுக்காக சந்தித்தோம்.

சினிமாவில் நடன வடிவமைப்பாளராக இருக்கும் உங்களுக்கு, இயக்குநர் ஆகலாம் என்ற எண்ணம் துளிர்த்தது எப்போது?

நடன வடிவமைப்பாளராக இருந்தாலும் நடனம் சொல்லிக்கொடுப்பது மட்டும் என் வேலையல்ல. கதையுடன் நகரும் பாடல்களை வடிவமைக்கும் போதும், மாண்டேஜ் பாடல்கள் எடுக்கும்போதும் நான்தான் அந்தக் காட்சிகளை இயக்குவேன். ஆக, இயக்குநர் வேலை எனக்கு ஒன்றும் புதிதல்ல. பலர் என்னிடம், “நீங்கள் படம் இயக்குகிறீர்களா... நாங்கள் தயாரிக்கிறோம்” என்று முன்பே கேட்டிருக்கிறார்கள். அப்படி வந்த பல வாய்ப்புகளை நான் மறுத்திருக்கிறேன்.

அப்படி என்னிடம் கேட்டவர்களில் குளோபல் ஒன் நிறுவனத்திலிருந்து ரமேஷும் ஒருவர். அவரிடம், இதைப்பற்றி பிறகு யோசிக்கலாம் என்று கூறிவிட்டேன். 3 வருடம் கழித்து மீண்டும் அவர் என்னைத் தொடர்புகொண்டு, “நீங்கள் கண்டிப்பாகத் திரைப்படம் இயக்கவேண்டும்” என்று வற்புறுத்திச் சொன்னார். அப்படி ஆரம்பித்ததுதான் ‘ஹே சினாமிகா’. பிறகு, எங்களுடன் மதன் கார்க்கி, ஜியோ நிறுவனம் ஆகியோர் இணைந்தனர்.

எழுத்தாளர் ஒருவரின் கதையைத் திரைப்படமாக எடுப்பது அருகி வரும் இக்காலத்தில், முதல் முயற்சியிலேயே மதன் கார்க்கியின் கதையைத் திரைப்படமாக எடுக்கவுள்ளீர்களே..?

தமிழ் சினிமாவில்தான் இது வித்தியாசமாகப் பார்க்கப்படுகிறது. மலையாள சினிமாவில் இது சகஜமான ஒன்று. நானும் மதன் கார்க்கியும் பேசும்போது அவர் இந்தக் கதையைச் சொன்னார், திரைக்கதை அருமையாக இருந்தது. அவரே வசனங்களையும் எழுதினார். எனக்கு இந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. ஆரம்பத்தில் இந்தக் கதை இரண்டு ஹீரோ, ஒரு கதாநாயகி என்று இருந்தது. ஆனால், நம் ஊரில் இரண்டு ஹீரோ ஒரு பெண்ணை மையம் கொண்டு கதை இருந்தால் அதை மக்கள் ஏற்றுக்கொள்வார்களோ என்று ஒரு தயக்கம் இருந்தது. பிறகு, இரண்டு ஹீரோயின் ஒரு ஹீரோ என்று கதையை மாற்றினோம்.

துல்கர் சல்மானுடன் பணிபுரிந்த அனுபவம்?

இந்தக் கதைக்கு துல்கர் சல்மான் சரியாக இருப்பார் என்று முடிவு செய்து அவரிடம் கேட்டேன். நடன வடிவமைப்பாளராக என்னை துல்கருக்கு தெரிந்திருந்தாலும், புதுமுக இயக்குநராக நம்மை நம்பி சம்மதிப்பாரா என்ற தயக்கம் எனக்குள் இருந்தது. “முதலில் கதையைக் கேட்கிறேன் மாஸ்டர்” என்று கூறினார். கதை கேட்ட அடுத்தநாளே சம்மதித்துவிட்டார்.

படப்பிடிப்பு தளத்தில் காட்சி எப்படி வந்துள்ளது என்று மானிட்டர்கூட பார்க்கமாட்டார். நம் மீது இவ்வளவு நம்பிக்கை வைக்கிறாரே என்று அதுவே என் பொறுப்புணர்வைக் கூட்டியது. கரோனா கட்டுப்பாடுகளுக்கிடையே கடந்த நவம்பரில்தான் ஷூட்டிங் ஆரம்பித்தோம். புதுச்சேரியில் ஷூட்டிங் ஆரம்பித்தபோது புயல் உருவாகி ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. மழையிலேயேதான் ஷூட்டிங்கை நடத்திமுடித்தோம். துல்கர், காஜல் அகர்வால், அதிதி என்று அனைவரும் அதிக ஒத்துழைப்பு கொடுத்ததால்தான் குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடிக்க முடிந்தது.

படத்தில் சினாமிகா யார்? காஜல் அகர்வாலா... அதிதி ராவா?

இருவரும்தான். துல்கர் இத்திரைப்படத்தில் ஒரு ஆர்.ஜேவாக நடித்திருக்கிறார். அவருடைய மனைவியாக நடித்திருக்கும் அதிதி ராவுடன் அவரது வாழ்க்கை எப்படி இருக்கிறது. காஜல் இவர்கள் வாழ்க்கையில் என்ன பங்காற்றுகிறார் என்பதை மையம் கொண்டே படம் நகரும். ஒரு ஆனந்தமான திரையனுபவத்தை இத்திரைப்படம் தரும். உணர்வுரீதியான ஒரு திருப்தியை இப்படம் ஏற்படுத்தும்.

பெண் இயக்குநர், பெண் ஒளிப்பதிவாளர், 2 கதாநாயகிகள் என்று பெண்கள் கூட்டணியில் திரைப்படம் உருவாகியுள்ளதே... சமீபத்தில் தமிழ் சினிமாவில் பெண்களின் பங்கு அதிகமாகியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

என்னுடைய ஒளிப்பதிவாளரான ப்ரீத்தா ஜெயராமனுக்கு நான் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லியே ஆகவேண்டும். கொட்டும் மழையிலும் சிறப்பாகப் பணியாற்றி விரைவாக ஷூட்டிங் முடிக்க அவர்களின் பங்கு அதிகம். படம் எடுக்கும் போதே சரியான ஒளி, வண்ணம் என்று கச்சிதமாகக் கொடுத்துவிடுவார்கள். தனியாக ‘டி.ஐ’ செய்யவேண்டிய அவசியமே இல்லாத அளவுக்கு அவர்களது ஒளிப்பதிவு இருக்கும்.

சமீபத்தில் பெண்களின் பங்கு தமிழ் சினிமாவில் அதிகரித்திருப்பது ஆரோக்கியமான விஷயம். சினிமாவில் பெண்களால் என்ன செய்யமுடியும் என்று ஒரு சந்தேகப்பார்வை இருப்பது நிஜம். சுதா கொங்கரா தமிழ் சினிமாவில் சூர்யாவை வைத்து ‘சூரரைப் போற்று’ திரைப்படம் போல் ஒரு வணிக ரீதியான வெற்றித் திரைப்படம் கொடுத்தது, அடுத்து வரும் எங்களைப் போன்றோருக்கு ஒரு பெரும் நம்பிக்கையையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

எழுத்தாளர்களின் கதைகளை திரைப்படமாக்குவதை அடுத்தடுத்த படங்களிலும் தொடரவுள்ளீர்களா?

இதுவரை அடுத்த படத்தைப் பற்றி யோசிக்கவில்லை. எழுத்தாளர்களின் கதையா, சொந்தக்கதையா என்பதை விட என் மனதுக்குப் பிடித்த கதையா என்பதே முக்கியம். எனக்குப் பிடித்த கதையாக இருந்தால் அதைத் திரைப்படமாக எடுக்கத் தயார்.

x