தமிழக முதல்வரும், காவல் துறையும் திரையுலகைக் காக்க வேண்டும்


‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படக் குழுவினர்

திரைக்கு வந்த முதல்நாளே புதிய படங்களை சட்டவிரோதமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் கும்பல் மீது நடவடிக்கை எடுத்து, கலைஞர்களின் அவலத்தைப் போக்க தமிழக முதல்வரும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நடிகர் சரவணன் உள்ளிட்ட திரைத் துறை கலைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஸ்ரீ வாரி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் நடிகர் கௌதம் கார்த்திக், சேரன், சரவணன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வெளியான திரைப்படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’, நேற்று(டிச.24) தமிழகம் முழுதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

இத்திரைப்படம் வெளியான முதல்நாளே டெலிகிராம், டொரன்ட்டோ உள்ளிட்ட பல இணையதளங்களில் இப்படம் வெளியிடப்பட்டு, பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக, சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ரங்கநாதன், நடிகர் சரவணன் உள்ளிட்ட திரைப்படக் குழுவினர் புகார் அளித்தனர்.

பின்னர் நடிகர் சரவணன் உள்ளிட்ட கலைஞர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஸ்ரீ வாரி தயாரிப்பில், நந்தா பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற குடும்பத் திரைப்படம் நேற்று திரையிடப்பட்ட நிலையில், நேற்றே டெலிகிராம் உள்ளிட்ட பல்வேறு இணையதளங்களில் படம் வெளியானதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தோம். இதுகுறித்து இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம்.

ஒரு திரைப்படம் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரின் உழைப்பில் தயாராகி வெளியாகும் நிலையில், அவர்களது உழைப்பைத் திருடி சமூக விரோதிகள் பணம் சம்பாத்தித்து வருகின்றனர். தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய செயல் வேதனையளிக்கிறது. எங்கள் படத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகத்தினர் நலனுக்காகவும் இந்த இணையதள பிரச்சினையை ஒழிக்க வேண்டியது அவசியம்.

தமிழக முதல்வரும், காவல் துறையும் திரையுலகத்தினரின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த இணையதளங்களை ஒழிக்க நடவடிக்கை எடுத்து திரையுலகத்தை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தனர்.

x