இந்த வருடம் வெளியான சூப்பர் ஹீரோ திரைப்படங்களில், மார்வல் ஸ்டுடியோஸின் ஷாங்-சி வித்தியாசமான சூப்பர் ஹீரோ திரைப்படமாக அமைந்தது. ஆசியாவைச் சேர்ந்த நடிகர் ஒருவர் சூப்பர் ஹீரோவாக நடித்தது ஒரு வரலாற்று நிகழ்வு என்றே சொல்லலாம். உலகளவில் காமிக்ஸ் ரசிகர்கள் ஷாங்-சி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு அளித்தனர். தற்போது, இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய டெஸ்டின் டேனியல் கிரீட்டனே இரண்டாவது பாகத்தையும் இயக்கவுள்ளார்.
சமீபத்தில் அவரிடம் எடுக்கப்பட்ட பேட்டியில், இரண்டாவது பாகத்தில் யாரை புதிதாக நடிக்க வைத்தால் சிறப்பாக இருக்கும் என்று கேட்கப்பட்டது (நாயகன் வேடத்துக்கு அல்ல). இந்த கேள்விக்கு, ஜாக்கி சான் நடித்தால் அது என்னுடைய வாழ்நாள் கனவு நிறைவேறியது போலாகும் என்று பதிலளித்துள்ளார் கிரீட்டன். ஷாங் - சி படத்தில் இடம் பெற்ற மார்ஷியல் ஆர்ட் சண்டைக் காட்சிகள் பெரும் பாராட்டுகளைப் பெற்றது. இரண்டாம் பாகத்திலும் அதுபோலவே சண்டைக்காட்சிகள் இருக்கக்கூடும் என்பதால் ஜாக்கி சார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று மார்வல் ரசிகர்களும் இக்கருத்தை ஆமோதித்திருக்கின்றனர்.
சில ஆண்டுகளாக ஹாலிவுட் படம் எதிலும் நடிக்காமல் இருக்கும் ஜாக்கி சான், சமீபத்தில் அளித்த பேட்டியில் “அமெரிக்காவை விட்டு ஒருபோதும் விலகப் போவதில்லை. நல்ல கதைக்காகக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். அந்த நல்ல கதை ஷாங் - சி இரண்டாம் பாகமாக அவருக்குத் தோன்றினால் மார்வல் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம் காத்திருக்கிறது