தமிழ்த் திரையுலகில், படத் தலைப்புகள் தொடர்பான சர்ச்சைகள் அவ்வப்போது எழுவது உண்டு. அந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்திருக்கிறது, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படம். இந்தத் தலைப்பில் ஜெயகாந்தன் எழுதிய நாவலும், அந்நாவலைத் திரைவடிவமாக்கி பீம்சிங் இயக்கிய திரைப்படமும் தமிழ் இலக்கியப் பரப்பிலும் சமூகத்திலும் சலனத்தை ஏற்படுத்தியவை.
அதே தலைப்பில் விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக்செல்வன், நாசர், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படம், வெளியீட்டுக்குத் தயாராகிவருகிறது. சமீபத்தில் சென்னையில் நடந்த இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டார். படத்தின் ட்ரெய்லரையும் வெளியிட்டார்.
இந்தச் சூழலில், இப்படத்தின் தலைப்பு குறித்து ஜெயகாந்தனின் வாரிசுகளிடமிருந்து எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இதுகுறித்து, ஜெயகாந்தனின் மகள்கள் காதம்பரி, தீபலட்சுமி, மகன் ஜெயசிம்மன் மூவரும் எழுதியிருக்கும் கடிதம் ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் வெளியாகியிருக்கிறது.
அதில், “எழுத்தாளர் ஜெயகாந்தனையும், அவரது எழுத்துக்களையும் உண்மையாக மதிப்பவர்களும், நேசிப்பவர்களும், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எனும் தலைப்பை வேறொரு கதைக்கோ, சினிமாவுக்கோ தலைப்பாக மீண்டும் பயன்படுத்த மாட்டார்கள் என நம்புகிறோம்” என்றும், “காப்புரிமை என்பது பொருள் ஈட்டுவதற்காகக் கொடுக்கப்பட்ட உரிமை அல்ல. சொல்லப்போனால் அது இரண்டாம்பட்சமானது. காப்புரிமை என்பது படைப்பாளியின் படைப்புகளையோ அதன் தலைப்புகளையோ வேறொருவர் எடுத்துத் திரித்து வெளியிடுவதைத் தடுத்துக் காப்பது. ஜெயகாந்தனின் மக்களான எங்களிடம் அந்த உரிமை இருக்கும்வரை இம்மாதிரியான செயல்களைச் சுட்டிக்காட்டி அவை நடைபெறாவண்ணம் தடுப்பதும் எங்கள் கடமையாகிறது” என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கமல் முன்னிலையில் வெளிவரவிருக்கும் படம் என்பதால், படத்தின் தலைப்பை மாற்ற கமல் தரப்பிலிருந்து முயற்சி எடுக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்திருக்கிறார்கள்.
சக்ரி டொலெட்டி இயக்கத்தில் கமல், மோகன்லால் நடிப்பில் வெளியான ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தின் தலைப்பும், ஜெயகாந்தன் இயக்கத்தில் 1965-ல் வெளியான திரைப்படத்திலிருந்து பெறப்பட்டதுதான். அந்தச் சமயத்தில், தலைப்புக்காக ஜெயகாந்தனின் அனுமதியைக் கமல் பெற்றதாகக் குறிப்பிட்டிருக்கும் ஜெயகாந்தனின் வாரிசுகள், கமலின் படம் வெளியான பின்னர் இணையத்தில் ஜெயகாந்தனின் படம் குறித்த தடயங்கள் மறைக்கப்பட்டுவிட்டதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
“அப்பாவின் நல்ல நண்பர் என்பது மட்டுமல்லாது உலக நாயகன் என்று புகழப்படுகிற சிறந்த கலைஞர் என்ற முறையிலும் நீங்கள் எங்களது இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு” என்றும் கமலிடம் கோரியிருக்கிறார்கள். இந்தப் பதிவுகளுக்குப் பல்வேறு எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து, ஜெயகாந்தனின் மகள் தீபலட்சுமியிடம் கேட்டபோது, “கமல்ஹாசனிடம் நேரடியாகத் தகவலைக் கொண்டுசெல்லும் அளவுக்கு எங்களுக்குத் தொடர்புகள் இல்லை. எனவேதான், சமூக வலைதளத்தில் இதுகுறித்து எழுதினோம். இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியானபோதே எங்கள் நண்பர்கள் அதுகுறித்து எழுதியிருந்தார்கள். படத்தைக் கமல் அறிமுகம் செய்திருந்தார். அப்போதும் அவரிடம் இதுகுறித்து எங்களால் எதையும் தெரிவிக்க முடியவில்லை. திரைப்படத் தலைப்புகளை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி உண்டு என எங்களுக்குத் தெரியும். எனினும், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எனும் தலைப்பு அப்படியானது அல்ல. அது எங்கள் தந்தை ஜெயகாந்தன் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் அது. ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்று சொன்னாலே ஜெயகாந்தன் என்று சொல்லும் அளவுக்கு, இலக்கியப் பரிச்சயம் இல்லாதவர்களையும் சென்றடைந்த தலைப்பு இது. அதே கதையை மீண்டும் படமாக எடுத்தால்கூட அது பெரிய பிரச்சினை அல்ல. ஆனால், இத்தனை முக்கியத்துவம் கொண்ட படத்தின் தலைப்பை, அந்தக் கதைக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத ஒரு படத்துக்காகப் பயன்படுத்துவதைத்தான் நாங்கள் கேள்விக்குட்படுத்துகிறோம்” என்றார்.
இவ்விஷயத்தில், கமலிடம் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதால் தீர்வு கிட்டும் என எப்படி எதிர்பார்க்கிறீர்கள் எனக் கேட்டபோது, “ஒரு முக்கியமான ஆளுமை ஒரு விஷயத்தை முன்னெடுக்கும்போது அவரிடம்தானே அதுகுறித்து கேட்க முடியும்? கமல்தான் இந்தப் படம் தொடர்பான விஷயங்களை முன்னெடுக்கிறார். அவரைத் தாண்டி யாரையும் பார்க்க முடியாது அல்லவா? அவர் சொன்னால் அந்தப் படக்குழுவினர் நிச்சயம் கேட்பார்கள். அதனால்தான் சமூக வலைதளத்தில் இந்தக் கடிதத்தை அவருக்கு எழுதியிருக்கிறோம். இது நியாயமான கோரிக்கை. நிச்சயம் ஏற்கப்படும் என நம்புகிறோம்” என்றார் தீபலட்சுமி.
இதுகுறித்து, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தின் இயக்குநர் விஷால் வெங்கட்டைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “ஜெயகாந்தனின் வாரிசுகள் எழுதிய பதிவு இப்போதுதான் எங்கள் கவனத்துக்கு வந்தது. இவ்விஷயத்தில் என்ன செய்வது என உடனே ஒரு முடிவுக்கு வர முடியாது” என்றார்.