சென்னையைச் சேர்ந்த நடிகர் மகா காந்தி என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சைதாப்பேட்டை 9-வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில் “கடந்த மாதம் 2-ம் தேதி, மருத்துவப் பரிசோதனைக்காக மைசூர் செல்ல பெங்களூர் விமான நிலையத்தில் காத்திருந்தபோது, நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாகச் சந்தித்ததாகவும், திரைத் துறையில் அவரது சாதனைகளைப் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தபோது, அதை ஏற்க மறுத்து, விஜய் சேதுபதி பொதுவெளியில், தம்மை இழிவாகப் பேசியதாகவும், பிறகு விமான நிலையத்தை விட்டு வெளியேறிய தம் மீது, விஜய் சேதுபதியின் மேலாளர் ஜான்சன், காதில் அறைந்ததாகவும் இதனால் தனது செவித்திறன் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். உண்மை இவ்வாறிருக்க, கடந்த மாதம் 3-ம் தேதி, விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக அவரது தரப்பில், அவதூறு பரப்புவதாகவும்” குறிப்பிட்டிருந்தார்.
மேலும், திரைத் துறையில் உள்ள சக நடிகரைப் பாராட்டச் சென்ற தம்மைத் தாக்கி, அதை உண்மைக்குப் புறம்பான செய்தியாக மாற்றியதற்காக, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்திருந்தார்.
தற்போது இம்மனுவின் மீதான விசாரணைக்காக நடிகர் விஜய் சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் ஜன.4-ம் தேதி ஆஜராக, சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக விஜய் சேதுபதி, மேலாளர் ஜான்சன் இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.