அனுமதி இல்லாமல் படப்பிடிப்பா? - ‘விருமன்’ கிளப்பும் சர்ச்சை


முத்தையா இயக்கத்தில் கார்த்தி, ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கும் ‘விருமன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, தேனி சுற்றுவட்டாரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த மாத இறுதியில் வைகை அணையில் நீர்மட்டம் 69.40 அடியாக இருந்தபோது ‘விருமன்’ படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

பொதுவாக, இதுபோன்ற அபாயகரமான நேரங்களில் பொதுமக்களுக்கு அணையில் அனுமதி கிடையாது. ஆனால், ‘விருமன்’ படப்பிடிப்பு மட்டும் நடந்துள்ளது.

சுமார் 2,355 கன அடி அளவுக்கு நீர் வெளியேற்றப்படுகிற நேரத்தில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தது குறித்து சர்ச்சை கிளம்பியுள்ளது. மாவட்ட நிர்வாகம் எவ்வித அனுமதியும் அளிக்கவில்லை என இதற்குப் பதில் கிடைத்துள்ளது. தேனி மாவட்ட பிஆர்ஓ அனுமதி அளித்திருக்கலாம் என்று அனுமானமாகச் சொல்கிறது இன்னொரு தரப்பு. இதுவரை படக்குழு சார்பாக எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

சமூக வலைதளங்களில் இதுகுறித்து விவாதிக்கும்போது, “சூர்யாவின் தம்பி கார்த்தி நடிக்கும் விருமன்” என்றே குறிப்பிடப்படுகிறது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் ‘விருமன்’ திரைப்படத்தைத் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்புக்கு அனுமதி வாங்குவது தயாரிப்பாளரின் வேலை என்பதால், சூர்யா இந்த விவகாரத்தில் விமர்சிக்கப்பட்டுவருகிறார்.

சூர்யாவின் நீட் எதிர்ப்பு மனநிலை, ‘ஜெய் பீம்’ திரைப்படம் போன்றவற்றில் மாற்றுக்கருத்து கொண்ட சிலர்தான் தேவையில்லாமல் இதைப் பிரச்சினையாக்குவதாக, சூர்யாவின் ஆதரவாளர்கள் குறிப்பிடுகின்றனர். சர்ச்சைகள் பல கிளம்பினாலும் ‘விருமன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.

x