‘தங்க மீன்கள்’ திரைப்படத்தில் ஆசிரியை, கரும்பலகையில் டபிள்யூ எழுதச் சொல்லும்போது கைகள் நடுங்க எம் என்று எழுதும் செல்லம்மா கதாபாத்திரத்தை யாரால் மறக்கமுடியும்? இந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததற்காகச் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்ற சாதனா, மீண்டும் ராம் இயக்கத்தில் பேரன்பு திரைப்படத்தில் ‘பாப்பா’ கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். அடுத்த 3 ஆண்டுகள் எந்தப் படத்திலும் நடிக்காமலிருந்த சாதனா, தற்போது தமிழ் சினிமா வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த 1958-ம் ஆண்டு வெளிவந்த ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்திலுள்ள ‘கண்ணும் கண்ணும் கலந்து’ பாடலை மறு உருவாக்கம் செய்து, வைஜெயந்தி மாலா மற்றும் பத்மினி என இரு கதாபாத்திரத்திலும் நடித்து, நடனமாடி வெளியிட்டுள்ளார். ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த முயற்சி பற்றிப் பேசுகையில், நேர்த்தியான பரத அபிநயங்கள் போலவே வருகின்றன சாதனாவின் பதில்கள்.
அடுத்தடுத்து 2 முக்கியமான திரைப்படங்களில் நடித்த நீங்கள், அதற்குப் பிறகு சினிமாவில் ஆர்வம் காட்டாதது ஏன்?
‘தங்க மீன்கள்’ செல்லம்மா கதாபாத்திரமும், ‘பேரன்பு’ பாப்பா கதாபாத்திரமும் மிக ஆழமான உணர்வுகளை உள்ளடக்கியவை. தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கும் கதாபாத்திரங்களாக ராம் சார் வடிவமைத்திருந்தார். அந்த வகையான கதாபாத்திரங்களே என் மனம் அடுத்தடுத்து எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டது. ஆழமான கதாபாத்திரங்களில் நடித்துவிட்டு ஹீரோவின் தங்கையாக, துணை கதாபாத்திரங்களாக நடிக்க என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. நல்ல கதாபாத்திரங்களுக்குக் காத்திருந்தே நேரம் ஓடிவிட்டது. தாமதம் ஆனாலும் இப்பொழுது சவாலான ‘கண்ணும் கண்ணும்’ பாடலை மறு உருவாக்கம் செய்வதன் மூலமாக மீண்டும் வருவது மகிழ்ச்சியே. ஏனென்றால், மக்களுக்கு என்னை ஒரு நடிகையாகத் தெரியும். இந்தப் பாடல் மூலம் நான் ஒரு நல்ல நாட்டியக் கலைஞர் என்பதையும் நிரூபிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
பல தேசிய விருதுகள் வாங்கிய மம்மூட்டியுடன் சவாலான கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்கும்போது, மம்மூட்டி மற்றும் ராமிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொண்டவை என்ன?
மம்மூட்டி சாரிடமிருந்து இயல்பான நடிப்பை எப்படி வெளிப்படுத்துவது என்பதைக் கற்றுக்கொண்டேன். ஷூட்டிங்கில் அவர் சாதாரணமாக கேமரா முன் வந்து நின்றுவிட்டுப் போவதுபோல் தெரியும். டப்பிங் பேசும்போதும், திரையரங்கில் படமாகப் பார்க்கும் போதும்தான் முகத்தில் எவ்வளவு நுட்பமான நடிப்பை இயல்பாக அவர் வெளிப்படுத்தியிருப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஒரு கதாபாத்திரமாக நடிக்கும்போது மம்மூட்டி அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். நாம் நடிக்கும்போது அக்கதாபாத்திரத்துக்கு எப்படி உயிரூட்டுவது என்பதை அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன். அதேபோல் ராம் அங்கிள் ஒரு படத்தை எடுக்க முடிவு செய்தால் மூன்று வருடம், நான்கு வருடம் நேரம் எடுத்துக்கொண்டு கடினமாக உழைப்பார். தன் கலை மீது அவர் கொண்டுள்ள முனைப்புதான் எனக்குக் கடின உழைப்பைக் கற்றுக்கொடுத்தது.
யூடியூபில் நீங்கள் பதிவேற்றும் உங்கள் நடன வீடியோக்களில் ஒரு தேர்ந்த பரதக் கலைஞரின் நளினத்தை உணர முடிகிறது. எத்தனை ஆண்டுகளாகப் பரதநாட்டிய பயிற்சி எடுத்துவருகிறீர்கள்?
இந்தப் பெருமை எல்லாம் என் அம்மாவைத்தான் போய்ச் சேரும். என் அம்மா லக்ஷ்மி வெங்கடேஷ் ஒரு சிறந்த பரதநாட்டியக் கலைஞர். துபாயில் பரதநாட்டிய பள்ளி நடத்திவருகிறார். நான் நடப்பதற்கு முன்பே பரதம் ஆட வேண்டும் என்று ஆசைப்பட்டார் என் அம்மா. 3 வயதிலிருந்தே நான் நடனப் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன். பரதம் என் நடிப்புக்கு நிறைய உதவியாக இருந்தது.
‘தங்க மீன்கள்’ படத்தில் நடிக்கும்போது எனக்கு 7 வயதுதான். அந்த வயதிலேயே அந்தக் கதாபாத்திரத்தின் உணர்ச்சியை புரிந்துகொண்டு நடிக்கப் பரதம் படித்தது உதவியா இருந்தது. அதேபோல்தான் ‘பேரன்பு’ திரைப்படத்தில் பாப்பா கதாபாத்திரத்தில் நடிக்கும்போது வாய் ஒரு மாதிரி வைக்க, கை ஒரு மாதிரி வைக்க, உடலை இஷ்டப்படி வளைத்து, குறுக்கி நடிக்க என அனைத்துக்கும் நான் கற்ற பரதம்தான் கைகொடுத்தது. பரதம் என்றாலே, அது ஒரு மதரீதியான நடனம் என்று ஒரு பொதுப்பார்வை இருக்கு. பரதம் ஏன் சமூக பிரச்சினையைப் பற்றிப் பேசக்கூடாது? பாலியல் வன்கொடுமை, வறுமை, பெண்ணியம் போன்ற விஷயங்களைப்பற்றிப் பேசும் கலைவடிவமாகப் பரதம் ஆகவேண்டும் என்ற ஆசையில்தான் தொடர்ந்து உழைத்துவருகிறேன்.
‘கண்ணும் கண்ணும் கலந்து’ பாடலை ரீமேக் பண்ணும் யோசனை எப்படி வந்தது?
மறைந்த இயக்குநர் விசு எங்கள் குடும்ப நண்பர். நான் சின்ன வயதிலிருந்து நடனமாடுவதைப் பார்த்துவிட்டு அவர்தான் இந்த யோசனையைக் கொடுத்தார். இதை அவர் 2018-ல் கூறினார். கண்ணும் கண்ணும் கலந்தால் பாடல் 2021-ல் நடந்தால் எப்படி இருக்கும் எப்படி இருக்கும் என்ற சின்ன கற்பனையுடன், கருப்பு-வெள்ளை திரையில் நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கினோம். நானே வைஜெயந்தி மாலா, பத்மினி என இரட்டை வேடத்தில் நடித்தேன். விசு சாரின் ஆன்மா இந்த பாடலைப் பார்த்து சந்தோஷப்பட்டிருக்கும் என்ற சிறு நம்பிக்கையும் எனக்கு உண்டு.
பழைய கண்ணும் கண்ணும் கலந்து பாடலின் இசையை மேம்படுத்தியுள்ளீர்களே?
பழைய பாடலில் லீலா-ஜிக்கி பாடியதுபோல் யாராலும் பாட முடியாது. நவீன காலத்துத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ராஜேஷ் வைத்தியா இசையைத் தரம் உயர்த்தியுள்ளார். இசையை மேம்படுத்தியுள்ளோமே தவிர மாற்றங்கள் எதுவும் செய்யவில்லை.
வைஜெயந்தி மாலா தற்போது 85 வயதிலும் நடனக் கலையில் ஆர்வமாக இருந்துவருகிறார். அவர் உங்களுடைய ரீமேக் பாடலைப் பார்த்தாரா?
அவரிடம் இந்த பாடலைப் போட்டுக்காட்ட முயற்சித்து வருகிறோம். கோவிட் சூழ்நிலையால் அவரை சந்திக்க முடியவில்லை. விரைவில் அவரைச் சந்தித்து இந்தப் பாடலைக் காட்டவுள்ளோம். பார்த்தால், கண்டிப்பா ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கு.
அடுத்து என்ன படங்களில் நடிக்கவுள்ளீர்கள்?
அதற்குப் பிறகு எந்தப் படங்களிலும் நான் நடிக்கவில்லை. எனக்கு அதில் கவலையும் இல்லை. பல பட வாய்ப்புகள் வந்தது. ஆனால், என் மனது எதிர்பார்க்கும்படியான கதாபாத்திரங்கள் வேறு. அப்படிக் கதாபாத்திரங்கள் கிடைக்கும் வரை காத்திருக்க நான் தயார்.