நிலத்தை அடமானம் வெச்சு பணம் குடுத்துருக்காங்க!


அமலாபால் - ஸ்ரீ அஸ்வினி

“கதை கேட்கும்போது கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன்” என்று 'குக் வித் கோமாளி' புகழ் அஸ்வின் பேசியது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அஷ்வின் இப்படிப் பேசியிருப்பது படைப்பாளிகளை அவமானப்படுத்துவதாக, உதவி இயக்குநர் ஸ்ரீ அஷ்வினி மிகுந்த வருத்தத்துடன் தன் முகநூலில் பதிவிட்டிருந்தார்.

அஸ்வின் ஒரே நிகழ்ச்சியில் பிரபலமடைந்ததற்கு அவருக்கு இருக்கும் பெண் ரசிகர்கள் கொடுக்கும் லைக்ஸ்தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் பரவலாகப்பேசப்பட்டு வரும் நிலையில், உதவி இயக்குநர் ஸ்ரீ அஷ்வினி அழுத்தம் திருத்தமாக தன் கருத்தைப் பதிவு செய்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

“அஷ்வின் பேச்சுக்கு ஏன் இவ்வளவு எமோஷனல் ஆகி சாடியிருக்கீங்க?” என்று அவரிடமே கேட்டோம்.

“ஒரு கலைஞனா மேடையில பேசுறதுக்கு அஸ்வினுக்கு எல்லா உரிமையும் இருக்கு. 40 கதை கேட்டுட்டு அவருக்கு பிடிக்கலைன்னு சொன்னதில் கூட தப்பில்ல. 40 இல்ல 100 கதை கேட்டுட்டு, எதுவுமே பிடிக்கலைன்னுகூட அவர் சொல்லலாம். ஆனா நக்கலா சிரிச்சிக்கிட்டு, ‘கதை கேட்டுட்டே தூங்கிட்டேன்’னு சொன்னதுதான் அபத்தம். 40 இயக்குநர்கள அவர் உதாசீனப்படுத்தியிருக்காரு.

அமலாபாலுடன்...

ஒரு நடிகர சாதிக்க வைக்குறது இயக்குநர்தான். இயக்குநர்கள ‘கேப்டன் ஆப் தி ஷிப்’ன்னு சொல்வாங்க. தயாரிப்பாளர்கள் ஒரு படைப்பை வெளிய கொண்டுவர பணரீதியா தான் உதவுவாங்க. அஸ்வின் சொன்ன அந்த 40 டைரக்டர்கள், 4000 கலைஞர்கள், டெக்னிஷியன்ஸை உருவாக்கி வேலை கொடுப்பாங்க. ஒரு வாய்ப்பும் கிடைக்காம பல வருஷமா புரொடக்‌ஷன் கம்பனிகள தேடி படி ஏறி இறங்கிட்டு இருக்கோம். எங்களுக்குத் தான் தெரியும் அந்த வலி. அந்த வலியில் தான் எனது ஆதங்கத்தைப் பதிவிட்டேன்” என்றார்.

தொடர்ந்து அவரிடம் பேசியதிலிருந்து...

“நீங்கள் திரைத் துறையை தேர்வு செய்ய என்ன காரணம்?”

“பள்ளிப் பருவத்திலிருந்தே சினிமா மேல எனக்கு தீராக் காதல் உண்டு. ’நானும் படம் எடுக்கப் போறேன்’னு விளையாட்டா சொன்னப்ப என் அண்ணன், ‘அதெல்லாம் உன்னால முடியாது’ன்னு சொன்னார். என்னால முடியாதுன்னு சொன்னதால கண்டிப்பா அதை செய்துகாட்டணும்னு ஒரு வைராக்கியம் எனக்குள்ள ஏற்பட்டுச்சு. அதுதான் இப்போ வரைக்கும் துவண்டு போகாம என்னைத் தொடர்ந்து இயங்க வெச்சிட்டு இருக்கு.

ஆரம்பத்துல எனக்கு சினிமா கான்டாக்ட்ஸ் சுத்தமா கிடையாது. நான் ஸ்கூல் முடிச்ச சமயத்துல ஒரு நியூஸ் பேப்பர்ல ஏதோ ஒரு படத்துக்கான ஆடிஷன் விளம்பரத்தப் பார்த்து, கன்னியாகுமரியில இருந்து வீட்டுக்குத் தெரியாம ரயில் ஏறி சென்னைக்கு வந்துட்டேன்.

சென்னைல எங்க போறதுன்னு தெரியாம நின்னேன். இன்னொரு, பக்கம் என் வீட்ல என்னைக் காணோம்னு தேட ஆரம்பிச்சுட்டாங்க. என் ஊர்க்காரங்க, நான் ஏதோ பையன்கூட ஓடிப்போய்ட்டேன்னு சொல்லிட்டாங்க. சென்னைல யாரப் பாக்குறது, என்ன செய்றதுன்னு தெரியாததால திரும்பி வீட்டுக்கே வந்துட்டேன். என் அப்பா அடி வெளுத்துட்டாரு.

அப்புறம் கொஞ்சநாள் சமுதாய சீர்திருத்த நாடகங்கள்ல நடிச்சேன். நானே கதை எழுதி மேடை நாடகங்கள்லயும் நடிச்சேன். ‘ஈத்தாமொழி நண்பர்கள் கலைக்குழு’வில் தான் நடிப்புக் கத்துக்கிட்டேன். அப்புறம் சின்னச் சின்ன சினிமா வாய்ப்புகள் தேடி வந்துச்சு. மருதூர்குறிச்சிங்கிற ஒரு குக்கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து, சீரியல், சினிமான்னு நடிச்சது என்ன பொறுத்தவரைக்கும் ரொம்பப் பெரிய விஷயம்.

அண்ணாதுரை படத்தில்...

‘இப்படை வெல்லும்’, ‘அண்ணாதுரை’, ‘நாச்சியார்’னு 10 படங்களுக்கு மேல் முக்கிய பாத்திரத்தில் நடிச்சிருக்கேன். ‘அழகு’ சீரியல்ல போலீஸ் ரோல் பண்ணேன். எனக்கு பெரிய ரீச் கொடுத்தது அந்த சீரியல்தான். எனக்கு நடிப்பை விட இயக்குநர் ஆவதுதான் கனவு, லட்சியம் எல்லாமே. ஆனா சர்வைவ் பண்ண கையில காசு வேணும். அதனால சின்னச் சின்ன ரோல் பண்ணிட்டு இருக்கேன். ‘காஞ்சனா 3’, ‘அதோ அந்தப் பறவை’ உள்ளிட்ட 6 படங்களுக்கு உதவி இயக்குநராகவும் இருந்திருக்கேன்.

பிரச்சினை என்னன்னா... என்னை நடிகரா தான் பாக்குறாங்க. ஒரு டெக்னிஷியனா பார்க்கமாட்றாங்க. ஸ்கிரிப்டோட போய் நின்னு, படம் பண்ணணும்னு வாய்ப்புக் கேட்டா, ‘உனக்கு இதெல்லாம் எதுக்குமா... நல்லா நடிக்கிற, அதுல கவனம் செலுத்து’ன்னு சொல்றாங்க. நடிப்புக்கு முழுக்குப் போட்டுட்டு டைரக்‌ஷன்ல கவனம் செலுத்தலாம்னு முடிவு எடுத்தப்போ தான் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க வாய்ப்புக் கெடச்சது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறதா இருந்த ரோல் அது. கிட்டத்தட்ட 500 பேருக்கும் மேல் ஆடிஷன் பண்ணி இறுதியா என்னை தேர்வு பண்ணாங்க.

சில பெரிய ஹீரோக்கள் ஷூட்டிங் ஸ்பாட்ல என்னைப் பார்த்து, நான் கறுப்பா இருக்கறதால இவங்க இந்த ரோலுக்கு வேணாம்னு, என்னை உதாசீனப்படுத்தி இருக்காங்க. அப்படியிருக்க ஷங்கர் சார் முக்கியமான ரோலுக்கு என்னை தேர்வு பண்ணியிருக்காரேன்னு எனக்குப் பெருமையா இருந்துச்சு.

ஷூட்டிங் நடந்துட்டு இருந்தப்போ கமல் சார் என்னைக் கூப்பிட்டு, ‘நீங்கதான் அந்த ரோல்ல நடிக்கிறீங்களா? சூப்பர் ரோல் அது, உங்களுக்கு நல்ல பேர் வாங்கி கொடுக்கும்’ன்னு சொன்னார். மறக்க முடியாத தருணம் அது. ஆனா என் கெட்ட நேரம் படப்பிடிப்பு பாதியில் தடைப்பட்டிருச்சு. சீக்கிரமே படப்பிடிப்பு தொடங்கலாம்னு செய்திகள் வருது. சீக்கிரமே தொடங்கும்னு நம்புறேன்’’

ராஜ்கிரணுடன்...

“நல்ல கதைகள் உங்கள் வசம் இருந்தும் நீங்க இயக்குநர் ஆவதில் ஏன் இவ்வளவு தாமதம்?’’

“நான் தயாரிப்பாளர்கள் கிட்டக் கதை சொல்லப் போனா, ‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, கரோனா சூழலால நிறைய படங்கள் பெண்டிங்ல இருக்கு’ன்னு சொல்லிடுறாங்க. இந்த நிலையில என்னோட கதை ஒண்ணு திருடு போயிருச்சு. மலையாளத்துல வந்த ‘ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் வெர்சன் 5.25’ படத்தோட கதை தான் அது. 2017-லேயே இந்தக் கதையை நான் ராஜ்கிரண் சார்கிட்ட சொன்னேன். கதை அவருக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு.

நான் செவிலியரா வேலை செஞ்ச காலத்துல ஒரு முதியவர பார்த்துக்கிட்ட அனுபவத்த வெச்சு அந்தக் கதையை எழுதினேன். ராஜ்கிரண் சார், கதையக் கேட்டுட்டு கண்கலங்கிட்டாரு. ‘ரொம்பவே எக்ஸ்ட்ராடினரி’ன்னு பாராட்டினார். தயாரிப்பு நிறுவனம் ஒண்ணு என்னோட கதையை ஓகே பண்ணி ராஜ்கிரண் சாருக்கு சம்பளமெல்லாம் பைனல் பண்ணி முடிச்சு எனக்கு ஆபீஸ்கூட போட்டுக்குடுத்தாங்க.

அப்ப தான் ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ன்னு ஒரு பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டாங்க. எங்க தயாரிப்பாளர் அதைப் பார்த்துட்டு அப்படியே நம்ம கதை மாதிரியே இருக்குன்னு படவேலைகள நிறுத்தச் சொல்லிட்டாரு. படம் வெளியானதும் பார்த்தா, நான் என்னுடைய சினாப்ஸிஸ்ல என்ன வெச்சிருந்தேனோ அது அப்படியே இருக்கு. என்னோட கதைய பல தயாரிப்பாளர்கள் கிட்ட சொல்லியிருக்கேன், சினாப்ஸிஸ் அனுப்பியிருக்கேன். என்ன நடந்துச்சோ தெரியல. அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கிட்ட போன் போட்டுக் கேட்டேன். சரியான ரெஸ்ப்பான்ஸ் வரல. அதுக்கு மேல என்னால போராடமுடியல. போராடி இருந்தாலும் யாரும் ஆதரவு தந்திருக்க மாட்டாங்க. அதனால அதை அப்படியே விட்டுட்டேன்.

இப்போ அந்தக் கதையைத் திருத்தி சயின்ஸ் பிக்‌ஷனா மாத்தியிருக்கேன். இதுவும் ராஜ்கிரண் சாருக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. ‘இந்தக் கதையை நான் வைரமா பட்டை தீட்டுறேன்; நீ கவலைப்படாதே’ன்னு சொல்லிருக்காரு. சீக்கிரமே நான் என்னோட திறமையை நிரூபிப்பேன்.

ஸ்ரீ அஸ்வினி

இந்த நேரத்துல என்னோட அடுத்த பிளானையும் சொல்றேன். எழுத்தாளர் பாரதிநாதனின் `ஆண்டோ எனும் மாயை' சிறுகதைத் தொகுப்புல இருக்கற ‘மாட்டுக்கறி’ சிறுகதையை நானே படமா எடுக்கப் போறேன். இந்தக் கதையையும் பல தயாரிப்பாளர்கிட்ட சொன்னேன். யாருக்கும் முதல் போட இஷ்டமில்லை. அதனால லோ பட்ஜெட்ல நானே இந்தப் படத்தை என்னோட ஊர் மக்கள வெச்சு எடுக்கப் போறேன்.

இரண்டு சமூகங்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை இந்தப் படம் ரொம்ப அழகா பேசும். என் திறமை மீது நம்பிக்கை வைத்து என் கணவரும், அவருடைய குடும்பத்தினரும் அவங்களோட விவசாய நிலத்தை அடமானம் வெச்சு பணம் குடுத்துருக்காங்க. அந்த நம்பிக்கை வீண் போகாத அளவுக்கு என்னோட படம் பேசப்படும் படமா நிச்சயம் அமையும்.

x