‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’, ‘நோட்டா’, ‘ஜாம்பி’ போன்ற படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். பின்பு, தமிழ் பிக் பாஸ் 2-ம் சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாபலிபுரத்திலிருந்து சென்னை திரும்பி வரும் வழியில், கிழக்கு கடற்கரைச் சாலையில் நண்பர்களுடன் அவர் ஓட்டி வந்த கார், சாலை தடுப்புச்சுவரில் மோதி தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி மரணமடைந்தார். யாஷிகா படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நான்கு மாத தீவிர சிகிச்சைக்குப் பின் மீண்டும் வெளி உலகுக்கு வரத் தொடங்கி உள்ளார் யாஷிகா. இந்நிலையில் விபத்து நடந்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டுள்ளார் யாஷிகா. அங்கு, தன்னைக் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்குக் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த இடத்தில்தான் என் தோழியை இழந்தேன். அதனால் இந்த இடத்தை எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால், இந்தப் பகுதி மக்கள் என்னை காரில் இருந்து வெளியே இழுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது இப்போதும் நினைவிருக்கிறது. அவர்களுக்கு நன்றி சொல்லவே வந்தேன். இதுபோன்ற நல்ல மனிதர்கள் உலகில் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.