கீர்த்தி சுரேஷ் குறித்து ஆபாசமாகப் பேசியவர் மீது போலீஸில் புகார்


கீர்த்தி சுரேஷ்

மலையாளம், தமிழ், தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் மோகன்லாலுடன் இவர் இணைந்து நடித்த ‘மரைக்காயர்:அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ என்ற திரைப்படம் 5 இந்திய மொழிகளில் சர்வதேச அளவில் வெளியானது.

இந்நிலையில், ஒருவர் ஆபாச வார்த்தைகளால் கீர்த்தி சுரேஷை திட்டும் வீடியோ ஒன்று, கேரளாவில் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இந்த வீடியோ நடிகர் சங்கத் தலைவர் மோகன்லாலின் கவனத்துக்குச் சென்றது. உடனடியாக அவர் அதைக் கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் குமாருக்கு அனுப்பி, இதுகுறித்து போலீஸில் புகாரளிக்குமாறு அறிவுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து, கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் குமார், திருவனந்தபுரம் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து சுரேஷ் குமார் கூறும்போது, “என் மகள் கீர்த்தி சுரேஷ் நடித்த மரைக்காயர் திரைப்படத்தைத் தோல்வியடையச் செய்வதற்காக ஏராளமானோர் சமூக வலைதளங்களில் அந்தப் படம் குறித்து மோசமான கருத்துகளைப் பரப்பிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாகத்தான் அந்தப் படத்தில் சிறப்பாக நடித்த என் மகள் கீர்த்தி சுரேஷ் குறித்து ஆபாசமாகத் திட்டி வீடியோ வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து நான் காவல் துறையில் புகாரளித்துள்ளேன். குற்றவாளியை விரைவில் கைது செய்வதாக போலீஸார் உறுதியளித்துள்ளனர்” என்றார்.

x