சல்மான் கான் தற்போது ‘டைகர் 3’ திரைப்படத்தில் மும்முரமாக நடித்துவருகிறார். விரைவில் இத்திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து ‘ஆங்க் மிச்சோலி’ என்ற திரைப்படத்திலும் நடித்துவரும் சல்மான் கான், அடுத்ததாக பரஹாத் சம்ஜி என்பவர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் இன்னொரு கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.
வெங்கடேஷ், பாலிவுட்டில் முதன்முதலில் ‘சின்னத்தம்பி’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான ‘அனாரி’ திரைப்படத்தில் 1993-ம் ஆண்டு நடித்து அறிமுகமானார். அதன்பின் 1995-ம் ஆண்டு ‘எமலீலா’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்கான ‘டத்தீர்வாலா’ என்கிற படத்தில் நடித்தார் (தமிழில் இத்திரைப்படம் கார்த்தி நடிப்பில் ‘லக்கி மேன்’ என்ற தலைப்பில் வெளியானது).
இந்த 2 படங்களுடன் பாலிவுட்டிலிருந்து விடைபெற்றுக் கொண்டார் வெங்கடேஷ். இந்நிலையில், 26 வருடங்கள் கழித்து மீண்டும் பாலிவுட்டில் நடிக்கவிருக்கிறார் வெங்கடேஷ்.
மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டணியுடன் இத்திரைப்படத்தை உருவாக்க இருப்பதாகக் கூறியுள்ளார் தயாரிப்பாளர் சாஜித் நாடியத்வாலா. சல்மான் கானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார் என்றும் வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்க பிரபல தென்னிந்திய நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.