தமிழ் சினிமாவில் வந்த பல போலீஸ் சினிமாக்களில் வரலாற்றில் நிலைத்து நிற்கும் வெகு சில திரைப்படங்களில் ‛மாநகர காவல்’ திரைப்படத்திற்கு என்றும் இடமுண்டு. விஜயகாந்த் நடிப்பில் வெளியான இந்த வெற்றிப் படத்தைத் தந்த இயக்குநர் எம்.தியாகராஜன், சென்னை மாநகர தெருக்களில் வறுமையில், அநாதையாக அலைந்து திரிந்தவர், இன்று(டிச.,8) ஏவிஎம் நிறுவனத்திற்கு எதிரில் தெருவில் இறந்து கிடந்தார். அவரது உடலைச் சென்னை மாநகர காவல் துறையினர் எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாநகர காவல் என்ற பெயரில் படம் எடுத்த இயக்குநரை திரையுலகினர் கைவிட்ட நிலையில் மாநகர காவல் துறையே கடைசியில் உதவி செய்தது தற்செயலாக நடந்துள்ளது.
மாநகரக் காவல் திரைப்படம் மட்டுமல்லாமல், பிரபு நடித்த ‛வெற்றி மேல் வெற்றி', ‛பொண்ணு பார்க்க போறேன்', ஆகிய படங்களை இயக்கியவர் எம்.தியாகராஜன்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் தியாகராஜன். டிப்ளமோ இன் ஃபிலிம் டெக்னாலஜி (DFT) படித்த இவர், ஆரம்பக்காலத்தில் சொந்த ஊர் அருகே விபத்தில் அடிபட்டு கோமா நிலைக்குச் சென்று பின் அதிலிருந்து மீண்டு, திரைப்படங்களை இயக்கினார். சினிமாவில் வெற்றி மேல் வெற்றி, மாநகர காவல் என இரண்டு திரைப்படங்களை இயக்கினாலும் அதற்கு மேல் அவருக்கு சினிமாவில் புது வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
வடபழனியில் அழுக்கான உடை, கையில் செய்தித்தாளோடும் அம்மா உணவகத்தின் ஆதரவிலும் வாழ்ந்துவந்தார் தியாகராஜன். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார்.
இவரின் மறைவு குறித்து இணை இயக்குநர் நீலன் கனிஷ்கா என்பவர் சமூகவலைத்தளத்தில், ‛‛சினிமாவில் வெற்றி மேல் வெற்றி அடையாமல் ஏவிஎம் முன்பாகவே உயிரிழந்து, மாநகர காவல் துணையோடு அன்னாரின் இறுதி நாள் இப்படியாக முடிந்தது காலத்தின் கோலமின்றி வேறென்ன..?
நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ...!!!” என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.