இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. படத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார். மேகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய் போன்றோர் நடிக்கும் இத்திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கியமான கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடிக்கவிருக்கிறார். கடந்த இரண்டு தினங்களாகக் கோலிவுட் வட்டாரத்தில் இத்தகவல் பேசப்பட்டுவந்தாலும் தற்போது நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து இத்தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் மில்டன் தற்போது தன்னுடைய ‘கடுகு’ திரைப்படத்தைக் கன்னடத்தில் சிவராஜ் குமாரை வைத்து ‘பைராகி’ என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். 2014-ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ‘சலீம்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் உருவாகிவருவதாகக் கூறப்படுகிறது
இத்திரைப்படத்தில் சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து முடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக விஜயகாந்த் மற்றும் சரத்குமார் இணைந்து ‘கேப்டன் பிரபாகரன்’, ‘புலன் விசாரணை’, ‘சந்தன காற்று’, புது பாடகன்’, ‘தாய் மொழி’ போன்ற படங்களில் நடித்துள்ளனர். தற்போது பல வருடங்கள் கழித்து இருவரும் ஒரே திரைப்படத்தில் இணைந்து தோன்றவுள்ளனர். இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று கூறப்படுகிறது.