கவனம் ஈர்க்கும் ‘கமனம்’ பாடல்கள்!


இளையராஜாவின் இசை சாம்ராஜ்யம் கால எல்லைகளைக் கடந்து, பிரதேச எல்லைகளைத் தாண்டி இன்றும் தொடர்கிறது என்பதற்கு உதாரணமாக வெளியாகியிருக்கிறது ‘கமனம்’ தெலுங்குப் படத்தின் இசை ஆல்பம்.

தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தை சுஜனா ராவ் இயக்கியிருக்கிறார். க்ரியா பிலிம் கார்ப் மற்றும் களி புரொடக்‌ஷன்ஸ் சார்பாக ரமேஷ் கருத்தூரி, வெங்கி புஷாபது, ஞான சேகர் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஸ்ரேயா சரண், நித்யா மேனன், சாருஹாசன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

‘ஆதித்யா மியூசிக்’ இசை நிறுவனம் இப்படத்தின் தெலுங்குப் பாடல்களை யூடியூபில் நேற்று வெளியிட்டிருக்கிறது. இதில், புகழ்பெற்ற பாலிவுட் பாடகர்கள் ஷான், கைலாஷ் கெர் ஆகியோருடன் ஜிதின் ராஜ், அபூர்வா ஆகியோரும் பாடியிருக்கின்றனர். சமீப காலங்களில் இளையராஜாவின் மேடைக் கச்சேரிகளில் அற்புதமாகப் பாடி ரசிகர்களைக் கவர்ந்த விபாவரியும் இந்தப் படத்தில் பாடியிருக்கிறார். தெலுங்கு வெர்ஷனின் அத்தனைப் பாடல்களையும் கிருஷ்ண காந்த் எழுதியிருக்கிறார்.

ஆல்பத்தில் முதலில் இடம்பெறும், ‘சித்ராலா ஜகமிதி லேரா’ பாடலே இந்தப் படத்தில் இளையராஜா காட்டும் ஈடுபாட்டைக் காட்டுகிறது. இந்தப் பாடலை உற்சாகம் தெறிக்கப் பாடியிருக்கிறார் ஷான். ஜிதின் ராஜும் விபாவரியும் பாடிய ‘எந்த எந்த சூஸினா’ டூயட் பாடல் இனிமையான இசைக்கோவையுடன் இளையராஜாவின் முத்திரையுடன் ஒலிக்கிறது.

‘வைஷ்ணவ ஜன தோ’ பாடலை அபூர்வாவின் குரலில் கேட்பது பரமசுகம். சூபி பாணியில் கைலாஷ் கெர் பாடிய ‘ ஏ... குதா' பாடல் இளையராஜா ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தரும் என்பது உறுதி.

x