‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பிரபலமடைந்தவர் அஷ்வின். அவர் கதாநாயகனாக நடிக்கும் ‘என்ன சொல்லப் போகிறாய்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா 2 நாட்களுக்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது.
விழா மேடையில் அஸ்வின் பேசும்போது, “என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. நான் கதை கேட்கும்போது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். இதுவரை 40 கதைகளைக் கேட்டுத் தூக்கியிருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை ‘என்ன சொல்லப் போகிறாய்’ மட்டும்தான்” என்றார்.
தன்னிடம் கதை சொன்ன அந்த 40 இயக்குநர்களைக் கிண்டலடிக்கும் விதத்தில், அஸ்வினின் இந்தப் பேச்சு உதவி இயக்குநர்கள் மற்றும் இயக்குநர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சில இயக்குநர்கள் அஸ்வினைக் கண்டித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், விழா மேடையில், ‘‘என்ன சொல்லப் போகிறாய் என்னுடைய முதல் திரைப்படம்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இது முழுக்க முழுக்க பொய்யான தகவலாகும். கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி, இயக்குநர் அருண்காந்த் இயக்கத்தில் அஸ்வின் நடிப்பில் ‘இந்த நிலை மாறும்’ என்ற திரைப்படம் வெளியானது. கரோனா பொது முடக்கம் ஆரம்பமாவதற்கு முன்பு இத்திரைப்படம் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ‘என்ன சொல்லப் போகிறாய்’ திரைப்படம்தான் என்னுடைய முதல் படம் என்று அஸ்வின் பொய் சொல்லியிருப்பது அவருக்கு எதிரான கடுமையான விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.