உலக அளவில் திரைப்படத் துறையில் பணிபுரிவோர் அனைவருக்கும் ஆஸ்கர் விருது வாங்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். திரைத் துறை விருதுகளில் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது ஆஸ்கர் விருது. ஹாலிவுட் திரைப்படங்களை மையமாக வைத்து ஆஸ்கர் விழா நடத்தப்பட்டாலும், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்று ஒரு திரைப்படத்தைத் தேர்ந்தெடுத்து அதற்கு ஆஸ்கர் விருது கொடுப்பது வாடிக்கையாகத் தொடர்ந்து வருகிறது.
2020-ம் ஆண்டு நடந்த 92-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ‘பாராசைட்’ திரைப்படமே, சிறந்த திரைப்படத்துக்கான விருதையும் பெற்று, வரலாற்றில் ஆஸ்கர் விருது பெற்ற ஆங்கிலம் அல்லாத முதல் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது.
தற்போது நடக்கவிருக்கும் 94-வது ஆஸ்கர் விருது விழாவுக்கு வெளிநாட்டுப் படங்களிடையிலான போட்டிப் பட்டியலில், இந்தியா சார்பில் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் உருவான தமிழ்ப்படமான ‘கூழாங்கல்’ திரைப்படம் போட்டியிடுகிறது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை ஆஸ்கர் விருதுகளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
103 நாடுகளில் தயாரான திரைப்படங்கள் இந்த விருதுக்காகப் போட்டியிடுகின்றன. இந்தப் போட்டியில் முதன்முறையாக சோமாலியா நாட்டிலிருந்து ஒரு படம் இடம் பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் இருந்து 15 திரைப்படங்கள் மட்டுமே இறுதிப்போட்டிக்குத் தேர்வு செய்யப்படும். அதற்கான அறிவிப்பு வருகின்றன டிச.21-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
‘கூழாங்கல்’ திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இணைந்து தயாரித்துள்ளனர். தங்களது திரைப்படம் ஆஸ்கர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறித்து விக்னேஷ் சிவன் ட்விட்டரில், "பட்டியலில் எங்கள் திரைப்படத்தைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. கனவு போலவும், நம்பமுடியாமலும், பாக்கியமாகவும் உணர்கிறேன்” எனத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் விக்னேஷ் சிவன்.