நேற்று மாலையிலிருந்து சமூக வலைதளங்களில் இயக்குநர் செல்வராகவனைப் பற்றிய மீம்கள் நிரம்பி வழிகின்றன.
“என்ன ஆச்சு செல்வாவுக்கு?”, “ஒரு ஜீனியஸுக்கு இந்த நிலைமையா?” என்ற கேள்விகளை, சிலர் கேலியாகவும், சிலர் கவலையுடனும் எழுப்பிவருகின்றனர். விஷயம் தெரியாதவர்கள் இதைப் பார்த்தால், செல்வராகவனுக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என்றே நினைப்பார்கள். அடுத்ததாக, மோகன் ஜி இயக்கவுள்ள திரைப்படத்தில் செல்வராகவன்தான் ஹீரோ என்ற அறிவிப்பு நேற்று வெளியானதே, ரசிகர்களின் இந்த மனக்குமுறலுக்குக் காரணம்.
சர்ச்சையான திரைப்படங்களுக்குப் பேர் போனவர் மோகன் ஜி. அவரது படங்கள் குறித்த வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இந்தச் சூழலில், இதற்கு முன்பு அவர் எடுத்த ‘ருத்ர தாண்டவம்’ திரைப்படத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்தார்.இந்த அறிவிப்பு வந்தபோதும் ரசிகர்களிடையே இதேபோன்ற அதிர்ச்சி கலந்த எதிர்வினையே ஏற்பட்டது.
பிம்பங்கள் ஏற்படுத்தும் சிக்கல்
ரசிகர்களின் இந்த அதிர்ச்சிக்கு 2 காரணங்கள் உண்டு. முதல் காரணம், மிக அனுபவம் வாய்ந்த, திரைமொழியில் அழகியலையும், ஆழத்தையும் நேர்த்தியாகக் காட்சிப்படுத்தக்கூடிய இயக்குநர்களான கௌதம் வாசுதேவ் மேனனும், செல்வராகவனும் வளர்ந்துவரும் இயக்குநரான மோகன் ஜியின் திரைப்படத்தில் நடிப்பதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘திரௌபதி’ திரைப்படத்தில் தொழில்நுட்ப ரீதியாகப் பல குறைகள் இருந்தன. அதற்கடுத்து வந்த ‘ருத்ர தாண்டவம்’ திரைப்படத்தில் ஓரளவுக்கு மேம்பட்டிருந்தார் மோகன் ஜி.
இரண்டாவது காரணம், பொதுவாகவே நமது சமூகத்தில் கதை சொல்பவன் நியாயமானவன், நேர்மையானவன் என்ற நம்பிக்கையிருக்கிறது. நம் மனதைத் தொடும் அற்புதமான கதைகள் திரைப்படங்களாக நமக்குக் கூறிய இயக்குநர்களான கௌதம் வாசுதேவ் மேனன் மீதும் செல்வராகவன் மீதும் அப்படியான ஒரு பிம்பத்தைப் பொதுவான ரசிகர்கள் கட்டமைத்து வைத்திருந்தனர். அருமையான திரைப்படங்கள் எடுப்பவர்கள் என்பதனாலேயே அவர்கள் புரட்சிகர சிந்தனை கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள் என்று ரசிகர்கள் கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பது தற்போது சமூக வலைதளங்களில் வரும் மீம்களை பார்க்கும்போது புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சினிமா என்பது மிகப் பெரும் வியாபாரம். இங்கே எல்லாமும் ஒரு கணக்கின் அடிப்படையில்தான். இவரை வைத்து எடுத்தால் படம் ஓடுமா, இவர் படத்தில் நடித்தால் நமக்குப் பிரபலம் கிடைத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருமா, போட்ட பணத்தை எடுத்துவிட முடியுமா என்பன போன்ற கணக்குகளின் அடிப்படையிலேயே தமிழ் சினிமா உருவாக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, சரியான படவாய்ப்புகள் இல்லாதபோது பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் நடித்து கம்பேக் கொடுத்த கார்த்தி ,அடுத்த படமே முத்தையாவின் இயக்கத்தில் உருவான ‘கொம்பன்’ திரைப்படத்தில் நடித்தார். தற்போது ‘ஜெய் பீம்’ திரைப்படத்தைத் தயாரித்த சூர்யா, அடுத்ததாக தன் தம்பி கார்த்தி மீண்டும் முத்தையாவின் இயக்கத்தில் நடிக்க ‘விருமன்’ திரைப்படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
‘அண்ணாமலை’ திரைப்படத்தில் ராதா ரவி சொல்லும் “கூட்டிக் கழிச்சு பாரு...கணக்கு சரியா வரும்” என்ற வசனம் உங்கள் நினைவுக்கு வந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல.
அவரவர் தனிப்பட்ட விருப்பம்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த ‘என்ஜிகே’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெறவில்லை. வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த அளவு வியாபாரம் ஆகவில்லை. அதற்குப் பிறகு எந்தத் திரைப்படத்தையும் இயக்காமலிருந்த செல்வராகவன், அவரது இயக்கத்தில் உருவாகி நெடுநாட்கள் வெளியாகாமல் முடங்கியிருந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தை வெளியிட்டபோதும், அது பெரிதாகப் பேசப்படவில்லை. ஒரு இயக்குநராக அடுத்தடுத்து 2 தோல்விகளை எதிர்கொண்ட செல்வராகவன் ‘சாணிக் காயிதம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார். அவர் நடிப்பில் முதல் படம் வெளியாவதற்கு முன்பே, அடுத்ததாக ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில், மோகன் ஜி திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவருடைய தனிப்பட்ட பொருளாதாரச் சூழல், அவர் மன விருப்பம் ஆகியவையே இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கக்கூடும். அது அவருடைய தனிப்பட்ட உரிமை.
ஆனால், பொதுவாகத் தமிழ் சினிமாவில் பெரும் இயக்குநர்கள் அறிமுக இயக்குநர்கள் திரைப்படத்தில் நடிப்பது ஒன்றும் புதிதல்ல. உதாரணத்துக்கு கே.எஸ். ரவிக்குமார், பார்த்திபன் போன்றோர் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். இதில் சிக்கல் என்னவென்றால், சினிமா இயக்குவது என்பது ஒரு கலை சார்ந்த தொழில். அந்தக் கலையை நேசித்து அதில் ஆழ்ந்த அனுபவம் கொண்ட இயக்குநர்களுக்கு அறிமுக மற்றும் அனுபவமில்லாத இயக்குநர்களின் திரைப்படங்களில் நடிப்பதென்பது மிகக் கடினமான ஒரு அனுபவமாகத்தான் இருக்கும். தன் கண் முன்னே, ஓவியம் என்ற பெயரில் கிறுக்கல்களை ஒருவர் உருவாக்குவதைப் பார்க்கும் அனுபவம் வாய்ந்த ஓவியனின் மனநிலையில் எப்படி இருக்குமோ அதே நிலைதான் இப்படிப் படத்தில் நடிக்கும் மூத்த இயக்குநர்களுக்கும். மனக்குமுறல்களை வெளியே அவர்களால் சொல்லவும் முடியாது.
எப்போது விமர்சனங்கள் அவசியம்?
ஒரு படத்தில் நடிப்பதற்குச் சம்மதம் தெரிவித்ததும் செல்வராகவன் இயக்கிய முந்தைய படங்களும் கேலிக்கு உள்ளாக்குவது ஆரோக்கியமான விஷயம் அல்ல. எந்தப் படத்தில் நடிப்பது நடிக்கக்கூடாது என்று முடிவெடுப்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். படம் வந்த பிறகு அவரது நடிப்பில் குறையிருந்தாலோ அல்லது அந்த திரைக்கதையில் சமூகத்துக்கு எதிரான கருத்துகள் இருந்தாலோ அப்போது அவர்களை விமர்சிப்பதென்பது, ஆரோக்கியமான சினிமாவுக்கு வழிவகுக்கும்.
ரசிகர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். திரைப்படங்களை எடுத்துவிடுவதாலும், புரட்சிகரமான திரைப்படங்களில் நடித்துவிடுவதாலும் இயக்குநர்களும் நடிகர்களும் தனிப்பட்ட வாழ்விலும் புரட்சிகரக் கருத்துகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பார்கள் என்று நாமே கற்பனை செய்துகொள்வது அநாவசியமான ஏமாற்றங்களைத் தான் தரும்.
கலை, அழகியல், கருத்து செறிவாக்கம் போன்ற எல்லாவற்றையும்விட தமிழ் சினிமாவில் மிக முக்கிய அம்சம் ‘பணம்’. அதை வைத்து இங்கே போடப்படும் கணக்கில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் என்றைக்கும் தாவலாம் என்பதை மறவாதீர்கள்!