‘பாகுபலி’ திரைப்படத்தின் பெரும் வெற்றியை அடுத்து, தொடர்ந்து பெரிய பொருட்செலவில் எடுக்கப்படும் பான் இந்தியா திரைப்படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார் பிரபாஸ். தற்போது அவர் நடித்துவரும் ‘ராதே ஷ்யாம்’ திரைப்படத்தை அடுத்து ‘சலார்’, ‘ஆதிபுரூஷ்’ திரைப்படங்களில் நடித்துவரும் பிரபாஸ், அடுத்தபடியாக ‘மகாநடி’ திரைப்படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.
ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாகத் தயாராகும் இத்திரைப்படத்தில், தீபிகா படுகோண் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மேலும், அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டு அமிதாப்பச்சன் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், தற்போது 2-ம் கட்ட படப்பிடிப்பு இன்று முதல் ஐதராபாத்திலுள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தொடங்குகிறது. இதில், பிரபாஸ், தீபிகா படுகோண் இருவரும் கலந்து கொள்கிறார்கள். தற்காலிகமாக ‘புராஜக்ட் கே’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், சயினஸ் பிக்ஷன் திரைப்படமாக உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.