அண்மையில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் வசூல் ரீதியாகச் சாதனை படைத்தாலும், “இதெல்லாம் ஹாலிவுட்டிலிருந்து சுட்ட கதை” என்று சிலர் விமர்சிப்பதை சமூக வலைதளங்களில் பார்க்கமுடிகிறது. ‘மாநாடு’ படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, இப்படத்திலேயே பல ஹாலிவுட் டைம் லூப் திரைப்படங்களின் பெயர்களை சிம்புவே சொல்வதுபோல் காட்சிப்படுத்தி இருந்தாலும், அதை இலகுவாக எடுத்துக்கொள்ளத் தமிழ் சினிமாவின் பெரும்பான்மை ரசிகர்கள் தயாராக இல்லை.
உண்மையில் வெங்கட் பிரபு, அவர் திரைப்படத்தில் கூறிய ஹாலிவுட் திரைப்படங்களிலிருந்து எதையும் காப்பி அடிக்கவில்லை. ஆனால், நெட்ப்ளிக்ஸிலுள்ள ‘டூ டிஸ்டண்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’ என்ற 32 நிமிட குறும்படத்தைப் பார்க்கும்போது, ‘மாநாடு’ திரைப்படத்தின் மையக்கருவுடன் நம்மால் ஒப்பிட்டு, ஒற்றுமையைச் சிறிது உணரமுடியும்.
நிறவெறி கொண்ட காவல் அதிகாரியால் கொல்லப்படும் சிறுபான்மை கறுப்பின இளைஞன், டைம் லூப்பில் மாட்டிக்கொள்ளும் அந்த கதையின் மையக் கருவும் ‘மாநாடு’ திரைப்படத்தின் மையப்புள்ளியும் ஒரு சிறு புள்ளியில் இணைவதை நம்மால் உணரமுடியும். ஒருவேளை, வெங்கட் பிரபு இந்தக் குறும்படத்தின் தாக்கத்தில்தான் ‘மாநாடு’ இயக்கினார் என்றால், அது சரியா? என்ற கேள்விக்கான பதிலை இக்கட்டுரையின் இறுதியில் காண்போம்.
தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல
இணைய வசதி பல்கிப் பெருகிய பிறகே, ஹாலிவுட்டில் இருந்து காப்பி அடிக்கும் இந்தக் கலாச்சாரம் ஆரம்பித்தது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கருப்பு வெள்ளை காலத்திலிருந்தே இந்த விஷயம் இருந்திருக்கிறது. உதாரணத்துக்கு, அறிஞர் அண்ணா தமிழ் சினிமாவில் கதாசிரியராக அறிமுகமான ‘நல்லதம்பி’ (1949) திரைப்படம், 1936-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ‘மிஸ்டர் டீட்ஸ் கோஸ் டு டவுன்’ என்ற திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. இணைய வசதி பரவலாக்கப்பட்டபின், உலக சினிமாக்களைத் தழுவி இங்கே படம் எடுப்பது அதிகமானது என்பதே உண்மை. ஆனால், அது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதே கேள்வி.
காப்பி / தாக்கம்
பொதுவாக திரைத் துறையில் காப்பி - தாக்கம் (Inspiration) என்று இரண்டு வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. காப்பி என்பது தவறான ஒன்றாகவும், தாக்கம் என்பது மேம்பட்ட ஒரு அணுகுமுறையாகவும் இங்கே கருதப்படுகிறது. ஆனால், உண்மையில் இரண்டுக்குமான வித்தியாசங்கள் இங்கே பாவிக்கப்படுவதில்லை.
தான் பார்க்கும் ஒரு திரைப்படத்திலிருக்கும் ஒரு அம்சத்தால் ஈர்க்கப்பட்டு, அந்த ஒரு அம்சத்தைக் கொண்டு அவருடைய திரைக்கதைக்கு ஏற்ப, அவர் தன் திரைப்படங்களைச் சந்தைப்படுத்தக் கூடிய மக்களுக்கு ஏற்ற வகையில் திரைக்கதையையும், காட்சிகளையும் ஒரு இயக்குநர் உருவாக்கினார் என்றால், அது தாக்கத்தால் எடுக்கப்பட்டதாகக் கருதப்படும். உதாரணத்துக்கு, சைக்கோ கொலைகாரன் ஒருவன் குழந்தைகளை வேட்டையாடிக் கொல்கிறான் என்பது கதையின் ஒரு அம்சம். இந்த ஒரு அம்சத்தைக் கொண்டு பல நூறு திரைப்படங்கள் வந்திருக்கின்றன.
உதாரணமாக, 1931-ம் ஆண்டு புகழ்பெற்ற ஜெர்மன் இயக்குநர் ஃப்ரிட்ஸ் லேங் இயக்கிய ‘எம்’ திரைப்படத்துக்கும், 2018-ம் ஆண்டு தமிழில் வந்த ‘ராட்சசன்’ திரைப்படத்துக்கும் மையப்புள்ளி ஒன்றுதான். ஆனால், 2 படங்களின் களமும் கதாபாத்திரங்களும் முற்றிலும் மாறுபட்டவை. 'ராட்சசன்' திரைப்படம் காப்பி என்று ஒருவராலும் சொல்ல முடியாது. ஆனால் பல ஆண்டுகளாகக் கொடுமை வாய்ந்த சைக்கோ கொலைகாரன் - ஒரு தவறும் அறியாத அப்பாவி குழந்தைகள் என்ற இருவேறு துருவங்களை இணைத்துப் பல திரைக்கதைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
மேலும், திரைக்கதையில் கதாபாத்திரங்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கவேண்டும். அதுதான் திரைக்கதையை நகர்த்திச் செல்ல உதவும். இதுவரை வந்த உலகளாவிய திரைப்படங்களில், மனிதன் சக மனிதர்களுடன், இயற்கையுடன், தான் வாழும் சூழலுடன், அமானுஷ்ய விஷயங்களுடன், கடவுளுடன், தொழில்நுட்பங்களுடன், தன் சுயத்துடன் என 7 வகையான பிரச்சினைகளைத்தான் எதிர்கொள்கிறான் என்று காட்டப்பட்டிருக்கிறது. இந்த 7 பிரச்சினைகளின் அடிப்படையிலேயே உலகில் லட்சக்கணக்கான திரைப்படங்கள் வருகின்றன. இப்படியான சூழலில் நாம் பார்க்கும் திரைப்படங்களில், கேட்கும் கதைகளில் ஏற்படும் தாக்கத்தின் காரணமாக அதைப்போலவே தன்னுடைய திரைப்படத்திலும் ஒரு இயக்குநர் காட்சியமைப்பது தவிர்க்க முடியாதது என்பது நிதர்சனம்.
ஆனால், ஒரு திரைப்படத்தைப் பார்த்து அதில் இருக்கும் கதை, காட்சியமைப்பு, கதாபாத்திரங்களின் வடிவமைப்பு என்று அனைத்தையும் அப்படியே அச்சில் வார்த்தது போல் எடுப்பது அப்பட்டமான காப்பி. இங்கே பலர் அப்பட்டமாகக் காப்பி அடித்து விட்டு, இந்த ஹாலிவுட் படத்தின் தாக்கத்தில் இதை எடுத்தேன் என்று பெருமையாக வெளியில் சொல்லிக் கொள்கிறார்கள்.
சரியான முறை
இந்தியத் திரைத் துறையில் பெரும் சிக்கலாக இருப்பது, காப்புரிமை சட்ட திட்டங்கள் தீவிரமாகப் பயன்படுத்தப்படாததே. காப்புரிமை சட்டம் 1957, பிரிவு 57-ல் ஒலி மற்றும் ஒளி, இலக்கிய படைப்பாளிகளின் காப்புரிமையைக் காப்பதற்கான சட்டங்கள் இருந்தாலும், அவை பெயரளவிலேயே இருக்கின்றன. ஒருவரின் உழைப்பையும், கற்பனையையும் திருடி, அவருக்கு ஒரு துளிகூட பங்குதராமல் லாபம் சம்பாதிப்பது பகல் கொள்ளையைவிட மோசமானது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடித்த, தமிழ் சினிமாவின் அடையாளம் என்று போற்றப்படக்கூடிய பல படங்கள் இப்படி அப்பட்டமாகக் காப்பி அடிக்கப்பட்டவைதான். ‘அருணாச்சலம்’, ‘தெனாலி’, ‘மகாநதி’ என்று பல திரைப்படங்களைச் சொல்லலாம்.
படங்களைக் காப்பியடிப்பது ஒருபுறமென்றால், நகைச்சுவை காட்சிகள், சண்டைக் காட்சிகள், காதல் காட்சிகள் என்று துண்டு துண்டு காட்சிகளாக வேறு மொழித் திரைப்படங்களிலிருந்து உருவுவதும் தமிழ் சினிமாவில் சகஜமாக நடந்துவருகிறது. முன்னணி நகைச்சுவை நடிகர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. உதாரணத்துக்கு, வடிவேலு ‘ஏய் டாமி...எந்திரி’ என்று இறந்த நாய்க்கு மின்சாரத்தைப் பாய்ச்சி எழுப்புவார் அல்லவா..? அந்த காட்சி ‘தெர்'ஸ் சம்திங் அபவுட் மேரி’ திரைப்படத்திலிருந்து அப்படமாகக் காப்பியடிக்கப்பட்ட காட்சி.
ஒரு படத்தின் கருவையோ, காட்சியையோ அல்லது மொத்த கதையையோ ஒரு இயக்குநர் தன் படத்தில் பயன்படுத்த விரும்பினால், மூல திரைப்படத்தைத் தயாரித்த நிறுவனத்தின் ஒப்புதலைப் பெறுவதே சரியான அணுகுமுறை. ஒரு சிறு அம்சத்தைத்தான் என் படத்தில் உபயோகப்படுத்தியுள்ளேன் என்று அந்த இயக்குநர் கருதினால், படத்தின் டைட்டில் கார்டில் இத்திரைப்படம் உண்டாவதற்கான தாக்கத்தை ஏற்படுத்தியது என்று மூல திரைப்படத்தின் பெயரை சேர்ப்பதே நியாயமாகும். இதைச் செய்யும் வெகுசில இயக்குநர்களில் வெற்றிமாறன் ஒருவர். ஒரு திரைப்படத்தை இயக்க தனக்கு தூண்டுகோலாக இருந்த மற்ற படங்கள், நாவல்களைக் குறிப்பிடுவதை வெற்றிமாறன் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அவர் அப்படிச் செய்வதால், அவருடைய மதிப்பு தமிழ் சினிமாவில் மங்கிப்போய்விடவில்லை என்பதை சக இயக்குநர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.