2021-ல் கவனம் ஈர்த்த வில்லன் ஹீரோக்கள்!


மாநாடு படத்தில்...

ஒரு திரைப்படத்தில் நாயகனுக்கான மாஸ் இமேஜை எதிர்நாயகனே நிர்ணயிக்கிறான். ஆம், ஹீரோவின் வெற்றியென்பது, படத்தில் நடிக்கும் வில்லன் கதாபாத்திரத்தின் வெயிட்டேஜ்ஜை பொறுத்தது. ஹீரோவுக்கு இணையானதாக வில்லன் கதாபாத்திரங்கள் இருந்தால், அப்படம் நிச்சயம் ஹிட் தான்.

மார்க் ஆண்டனி இல்லையென்றால் ‘பாட்ஷா’வை மறந்திருப்போம். முத்துப்பாண்டியால் மட்டுமே, ‘கில்லி’ விஜய் ஹீரோ அந்தஸ்தைப் பெறுகிறார். சித்தார் அபிமன்யூ இல்லையென்றால் ஜெயம்ரவி ‘தனி ஒருவன்’ ஆகவே சுற்றித் திரிய வேண்டியது தான். ‘இரும்புத் திரை’யில் ஒயிட் டெவில் அர்ஜூன், ‘என்னை அறிந்தால்’ விக்டராக அருண்விஜய் என தனித்துவமான வில்லன்களைக் கொண்டது இந்த தமிழ் சினிமா. அந்த வகையில் 2021-ல் 3 வில்லன்கள் நம் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள்.

மாஸ்டரை ஆட்டிப்படைத்த பவானி !

எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித் வரிசையில் வரத்துடிக்கும் நடிகர்கள் பொதுவாக வில்லன் வேஷம்கட்ட விரும்பமாட்டார்கள். வில்லன்களை போட்டுப் புரட்டி எடுக்கும் நல்லுள்ளம் கொண்ட நாயகர்களாகவே விரும்புவார்கள். ஆனால், விஜய் சேதுபதி இதில் கொஞ்சம் வித்தியாசமானவர். பிடித்த கதையில் நடிக்க வேண்டுமென்று நினைப்பவர். ஒரு சீனில் வருவதாக இருந்தாலும் கூட, மனதுக்குப் பிடித்தால் ஓகே சொல்லிவிடுவார். அப்படித்தான் வில்லன் ரோல்களிலும் நடித்து அசத்துகிறார்.

விஜய் சேதுபதி

ரஜினிக்கு ‘பேட்ட’ படத்தில் வில்லத்தனம் காட்டியவர், விஜய்க்கு வில்லனாக ‘மாஸ்டர்’ படத்தில் நடிக்கிறார் என்றதுமே எதிர்பார்ப்பு எகிறியது. பொதுவாக, மாஸ் ஹீரோ படங்களில் வில்லன் ரோல்கள் வெளியே தெரியாது. மாஸ்டர் வழக்கமான சினிமாவாக இல்லை. மாஸ்டரை தாண்டும் கிராண்ட் மாஸ்டராக படத்தில் தெரிந்தார் சேதுபதி. ஜே.டி. கேரக்டரை விட பவானி கேரக்டர் ரசிகர்களின் ரசிப்புக்குரியதானது. அதற்கு, சேதுபதியின் அசால்ட் நடிப்பே காரணம்.

ரகளையான ரவுடி பவானி, ‘நீ யாரா இருந்தா என்ன’ எனும் நக்கலான பார்வையும், நையாண்டிப் பேச்சுமாக மிரட்டியிருப்பார். அரசினர் கூர்நோக்கு இல்லத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரவுடிக்கும், பாடம் சொல்லிக்கொடுக்கும் வாத்தியாருக்கும் இடையிலான மோதலாக படமும் மெர்சலாக இருக்கும். இடைவேளை காட்சியில் விஜய் எமோஷனலாகி, “உன்னைக் குத்திக் கொல்வேன்” என உயிரைக் கொடுத்து வசனம் பேசிக் கொண்டிருக்க, அசால்டாக “சரி வா...” என சிங்கிள் வசனத்தில் ஸ்கோர் செய்துவிட்டுச் செல்வார் சேதுபதி. அதனால் தான் வாரா வாரம் திரைக்கு வரும் ஹீரோ சேதுபதியை விட, வருடத்துக்கு ஒன்றென்றாலும் வில்லன் சேதுபதியை ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

மாஸ்டர் படத்தில்...

டாக்டருக்கே ஆபரேஷன் செய்த ‘டெர்ரி’

ஒரு சினிமா புரட்சிகர வசனம் பேசவேண்டும். ஒரு சினிமா மக்கள் நலனைப் பேசவேண்டும். ஒரு சினிமா சமூக மாற்றத்தைத் தருவதாக இருக்க வேண்டும் என்ற நோக்குடன் பல படங்கள் வரும். ஆனால், சினிமா எனும் மொழி சரியானபடிக்கு இல்லாமல் போய்விடுவதால் அந்த மாதிரியான படங்கள் வேகம் எடுக்காது. சொல்ல வந்த கருத்தும் சரியாகப் போய்ச்சேராது. இந்த வாழ்க்கை எப்படியானது தெரியுமா என உருட்டாமல், ஒரு சினிமா மக்களை சிரிக்க வைத்தால் மட்டும் போதும் என்ற பார்முலாவுடன் வந்த படம் ‘டாக்டர்’.

ப்ளாக் ஹ்யூமர் எனப்படும் காமெடியை கையில் எடுத்து, சிரிப்பு வெடியை சிதற விட்டிருப்பார்கள். நெல்சன் இயக்கத்தில் நாயகன் சிவகார்த்திகேயனுக்கு புது முயற்சி. அதோடு, படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு கேரக்டருமே தனித்தனியாக ஸ்கோர் செய்திருப்பார்கள். குறிப்பாக, படத்தில் வில்லனாக ‘டெர்ரி’ கேரக்டரில் சைலன்ட் வில்லத்தனம் காட்டியிருப்பார் வினய். குழந்தை ரூபத்தில் ஒரு கொடூரன் என்று சொல்வார்களே அது, வினய்க்கு சரியாகப் பொருந்தும். “யார்ரா இவன் வெனப் புடிச்சவன்...” எனச் சொல்ல வைக்கிறார்.

வினய்

ஜாலியான ரொமான்டிக் ஹீரோவாக மட்டுமே வினய் நடித்துப் பார்த்திருப்போம். அப்படியே, நேரெதிராக டாக்டரில் அச்சமூட்டும் வில்லன். நீட் ஷேவ், ஷார்ப் ஹேர் ஸ்டைல், செம ஸ்டைல் என கோட் சூட் வில்லனாக இருப்பார். ஹீரோவுக்கான மெட்டீரியலாக இருந்தவரை, வில்லனாக்கி ரசிகர்களையும் ஏற்றுக்கொள்ள வைத்தது இயக்குநரின் மேஜிக். இந்த வருடத்தின் வித்தியாசமான ஒரு வில்லன் டெர்ரி எனும் வினய்.

வந்தான்... நடிச்சான்... ரிப்பீட்டு !

வில்லன்கள் என்றாலே முரட்டு மீசை வைத்திருக்க வேண்டும், பெண்களை மதிக்கக் கூடாது , ஹீரோவுடன் சண்டை வந்தால் மிஸ்ஸாகாமல் அடியை வாங்கிக் கொள்ள வேண்டும். ஹீரோ பேசும் பஞ்ச் வசனங்களைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும் என்ற வழக்கமான க்ளிஷேக்கள் மலையேறிப் போய்விட்டன. தமிழ் ரசிகர்கள் வில்லன்களில் வெரைட்டியை விரும்புகிறார்கள் .

ஹீரோக்களை விட, வில்லன்களின் காட்சி அமைப்புக்கு இயக்குநர்களும் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்கள். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா செய்திருப்பது வேற லெவல் அட்டகாசம். “தலைவரே... தலைவரே...” என ஒற்றை வசனத்தை பல வெரைட்டிகளில் பேசியிருப்பார். மாநாடு படத்தில் ஹீரோவுக்கு கூட மாஸான அறிமுகக் காட்சி இருக்காது. ஆனால், எஸ்.ஜே.சூர்யாவுக்கான அறிமுகக் காட்சி படு மாஸாக இருக்கும்.

வினய் - சிவகார்த்திகேயன்

“என்னடா ப்ளான்” என ஒய்.ஜி.மகேந்திரா கேட்கும்போது, “நீங்க சி.எம். ஆகுறதுதான் ப்ளானு” என்பது, “யார்ரா நீ...” என கேட்கும் இடம், வாழைப்பழ காமெடியை நினைவுபடுத்தும், “உன்ட நான் என்ன சொன்னேன்” வசனம் என காட்சிக்குக் காட்சி தெறிக்க விட்டிருப்பார் எஸ்.ஜே.சூர்யா.

தமிழ் சினிமாவுக்கு டைம் லூப் கான்செப்ட் புதுசு தான் என்றாலும், எஸ்.ஜே.சூர்யா இல்லையென்றால் படத்தின் தன்மை வேறு ஒன்றாக இருந்திருக்கும். இந்த அளவுக்கு ரீச் பெற்றிருக்குமா என்பது சந்தேகமே. இறைவி, ஸ்பைடர், மெர்சல் படங்களையெல்லாம் மிஞ்சும் நடிப்பை டைம் லூப்பில் தருகிறார். மான்ஸ்டரில் வந்த சாது, மாநாட்டில் மிரட்டியிருக்கிறது. பொதுவாக, எஸ்.ஜே.சூர்யா நடிப்பை ஓவர் ஆக்டிங் என்று சொல்வார்கள். ஆனால், அதே ஓவர் ஆக்டிங் தான் மாநாட்டை கலகலப்பாக்கி இருக்கிறது.

எஸ்.ஜே.சூர்யா

ஆக... டிக்கிலோனா படத்தில் வரும் “என்ன இன்னும் பைத்தியக்காரன்னு நினைச்சிட்டு இருக்கல்ல” என ஒற்றை வசனத்துக்காக லொல்லு சபா மாறனையும், டாக்டர் படத்தில் வரும், ‘ஆம்பள’ காமெடிக்காக ரெடினையும், “தலைவரே...” வசனத்துக்காக எஸ்.ஜே.சூர்யாவையும் என புதுமையை விரும்புகிறது தமிழ் சினிமா. ரசிகர்கள், கதைகளைவிட கதாபாத்திரங்களை அதிகமாக ரசிக்கத் தொடங்கிவிட்டார்கள். எந்த ரோல் என்றாலும் யாராக இருந்தாலும் வெரைட்டி காட்டினால், ரசிகர்களின் அப்ளாஸை அள்ளுவது உறுதி.

x