விடைபெறும் மணி ஹெய்ஸ்ட் வலைத்தொடர்


நெட்ப்ளிக்ஸ் தளத்தின் பிரபலமான வலைத்தொடர்களில் ஒன்று 'மணி ஹெய்ஸ்ட்'. இதன் நிறைவு அத்தியாயங்கள் அடங்கிய, 5-வது சீசனின் 2-ம் பாகம் இன்று(டிச.3) வெளியாகியுள்ளது.

5 அத்தியாயங்கள் அடங்கிய 5-வது சீசனின் முதல் பாகம் செப்டம்பரில் வெளியானது. எஞ்சிய 5 அத்தியாயங்கள் அடங்கிய 2-வது பாகம் இன்று வெளியாகி உள்ளது.

ஸ்பானிஷ் தொடர்பான 'லா கசா டி பேபல்', ஆங்கில மொழியாக்கத்தில் 'மணி ஹெய்ஸ்ட்' ஆக வெளியாகி உலகமெங்கும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இந்தியாவிலும் இந்தத் தொடருக்கு ஆதரவு அதிகரித்ததும் இந்தி, தமிழ் என பல்வேறு பிராந்திய மொழிகளிலும் மணி ஹெய்ஸ்ட் வெளியானது.

நிறைவு பாகம் வெளியாவதை ஒட்டி, மணி ஹெய்ஸ்டின் இதுவரையிலான கதையோட்டத்தைச் சுருக்கமாக விவரிக்கும் ரீகேப் வீடியோவை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. மணி ஹெய்ஸ்ட் தொடருக்கு இணையாக, அந்த வீடியோவும் மக்களை கவர்ந்து வருகிறது. 2017-ல் தொடங்கி வருடம் ஒரு சீசனாக வெளியானதில், தீவிர ரசிகர்களுக்குக் கூட முன்கதையோட்டம் மறந்து போயிருக்கக்கூடும். இது தற்போதைய அத்தியாயங்களை முழுமையாக ரசிப்பதில் இடையூறாக அமையக்கூடும். இந்த சங்கடங்களைப் போக்க, மணி ஹெய்ஸ்ட் ரீகேப் வீடியோ தமிழிலும் வெளியாகி உள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி தொகுத்து வழங்கிய இந்த வீடியோவில், முந்தைய அத்தியாயங்களின் சுவாரசியமான காட்சிகள் மற்றும் திருப்பங்கள் விவரிக்கப்படுகின்றன. உறுத்தாத தொனியில் தனது கலகலப்பான பாணியில், வீடியோவை தொகுத்து வழங்கியிருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.

மணி ஹெய்ஸ்ட் தொடர் நிறைவடைவதை முன்னிட்டு முன்னதாக, இதன் ஸ்பின் ஆப் தொடர்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டன. முதல் ஸ்பின் ஆப் தொடர், பெர்லின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு வெளியாக உள்ளது.

x