‘ஜகமே தந்திரம்’, ‘நவரசா’ திரைப்படங்களுக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘மகான்’. நடிகர் விக்ரமும் அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்திருக்கும் இத்திரைப்படம், கோலிவுட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. 2019-ம் ஆண்டுக்குப் பிறகு, விக்ரமின் எந்தத் திரைப்படமும் வராமலிருக்கும் நிலையில், 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அவரது ‘மகான்’ திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தற்போது ‘மகான்’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளை விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இன்று முடித்துள்ளனர். விக்ரம் தொழில்முறையாகவே ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட். ‘அமராவதி’, ‘பாசமலர்கள்’ போன்ற திரைப்படங்களில் அஜீத்குமாருக்குக் குரல் கொடுத்தது விக்ரம்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டப்பிங் பணிகள் முடிந்த நிலையில், இத்திரைப்படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.