‘கடைசி விவசாயி’ திரைப்படத்துக்கு எதிராக இளையராஜா புகார்


'காக்கா முட்டை’ திரைப்படத்தை இயக்கிய மணிகண்டன் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் ‘கடைசி விவசாயி’. விஜய் சேதுபதி நடித்துள்ள இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இத்திரைப்படத்தின் கதையில் ஈர்க்கப்பட்ட விஜய் சேதுபதி, அதன் தயாரிப்பிலும் இணைந்தார்.

ஆரம்பத்தில் இசைஞானி இளையராஜா ‘கடைசி விவசாயி’ படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னணி இசையை முடித்த நிலையில், அதில் மணிகண்டன் திருப்தியடையாததால், இசைஞானியிடம் சில மாறுதல்களைக் கேட்க, அவர் அதற்கு மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் பின்னணி இசையை சந்தோஷ் நாராயணனை அமைக்கச் செய்த மணிகண்டன், ட்ரெய்லரையும் வெளியிட்டார். இதையடுத்து தனக்குத் தெரியப்படுத்தாமல், அனுமதியில்லாமல் இந்த மாற்றம் செய்யப்பட்டதாக இசையமைப்பாளர் சங்கத்தில் ‘கடைசி விவசாயி’ திரைப்படக்குழு மீது இளையராஜா புகார் அளித்துள்ளார். இதனால், இந்த ஆண்டு டிசம்பரில் திரைக்கு வரத் திட்டமிடப்பட்ட இத்திரைப்படம் தள்ளிப் போகலாம் என்று கூறப்படுகிறது.

x