தமிழ் சினிமாவில், அடுத்தடுத்து வெளியீட்டுக்கு தயாராக அதிகமான திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர் ஜி.வி.பிரகாஷ். ‘பேச்சுலர்’, ‘செல்ஃபி’, ‘ஐங்கரன்’, ‘ஆயிரம் ஜென்மங்கள்’, ‘அடங்காதே’, ‘ஜெயில்’, ‘4ஜி’, ‘காதலிக்க யாருமில்லை’, ‘காதலைத் தேடி நித்யா நந்தா’, ‘இடி முழக்கம்’ போன்ற பல திரைப்படங்கள் அவருடைய நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இதில் ‘பேச்சுலர்’ நாளையும் (டிச.3), ‘ஜெயில்’ டிச.10-ம் தேதியும் வெளியாகவுள்ளன.
இந்நிலையில், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், புதுமுக இயக்குநரான நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ரெபெல்’ திரைப்படத்தின் பூஜை இன்று சென்னையில் தொடங்கியது. நிகேஷ், இதற்கு முன் இயக்குநர் சத்தியசிவாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்.
இத்திரைப்படத்தின் முதல் காட்சியை இயக்குநர் பா.ரஞ்சித் கிளாப் அடித்து ஆரம்பித்துவைத்தார். அரசியல், சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.