சந்தோஷ் நாராயணன் இசையில் பாட ஆசை!


ராஜலெட்சுமி

15 வருடங்களுக்கு முன்பு கிராமிய இசைக் கச்சேரிகளில் சாதாரண நாட்டுப்புற இசைக்கலைஞராக ராஜலட்சுமி செந்திலைச் சந்தித்திருக்கிறேன். ‘சூப்பர் சிங்கர்’, திரையிசை வாய்ப்பு என இன்றைக்குப் பெரிய உயரங்களுக்குச் சென்றுவிட்ட பிறகும், அன்பும் பண்பும் மாறாமல் அப்படியே இருக்கிறார். அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா’ எனும் தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் வெர்ஷனுக்காக, தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் அவர் பாடிய, 'நீ அம்மு, அம்மு சொல்லயில' என்கிற பாடல் பட்டி தொட்டியெங்கும் அல்லு தெறிக்கவிடுகிறது. அவருடன் ‘காமதேனு’வுக்காக ஒரு பேட்டி:

எப்படிக் கிடைத்தது இந்த வாய்ப்பு?

“உச்சஸ்தாயியில் ஒலிக்கும் ஒரு குத்துப் பாடலுக்குப் பொருத்தமான குரல் தேடிக் கொண்டிருக்கிறோம். நீங்களும் வந்து பாடுங்கள்... நன்றாக இருந்தால் பார்க்கலாம்” என்று சொல்லித்தான் என்னை வரச் சொன்னார்கள். போய்ப் பாடினேன். குரலைக் கேட்டதுமே, “அருமையாக இருக்கிறது, நீங்களே பாடிவிடுங்கள்” என்று தேவி ஸ்ரீ பிரசாத் சொன்னார்.

பாடல் பாடிய அந்த அனுபவத்தைச் சொல்லுங்களேன்...

பாடலின் மெட்டைக் கேட்டதும் எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. முடிந்தவரை நன்றாகப் பாட வேண்டும் என மனதுக்குள் தீர்மானித்துக்கொண்டேன். தேவி ஸ்ரீ பிரசாத் சார் முழுமையான சுதந்திரம் கொடுத்தார். பதற்றப்பட வேண்டாம். முடிந்தவரை பாடுங்கள், தேவையானபோது ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என்று என் இஷ்டத்திற்குப் பாட வைத்தார்கள். திரும்பத் திரும்ப மெருகேற்றி 6 மணி நேரம் வரை பாடினேன். பிறகு என் குரலில் பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை ஓ.கே தான். இன்னும் கொஞ்சம் கொஞ்சம்தான் திருத்தங்கள் செய்ய வேண்டும். இரண்டு நாளில் கூப்பிடுகிறோம் என்று சொன்னார்கள்.

ஆனால் ஒரு வாரம் கடந்தும்கூட அழைக்கவில்லை. சரி, நம்முடைய குரலில் ஏதோ திருப்தி இல்லை போலும் என நினைத்துக்கொண்டிருந்தேன். திடீரென, ஒருநாள் மாலை, “ பாட வருகிறீர்களா” என்று அழைத்தார்கள். மேக்கிங் வீடியோவும் எடுக்க வேண்டும் என்றார்கள். அந்தத் தருணம் காற்றில் பறந்த மாதிரியான உணர்வு.

ராஜலட்சுமி என்றாலே இப்படித்தான் பாடுவார் என்பதை மாற்றி வித்தியாசமான பாடலைப் பாடவைத்திருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத் சார். அதனால் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்!

ராஜலெட்சுமி செந்தில்

பாடலில் ‘சாமி’ எனும் வார்த்தையைப் படு உற்சாகமாக உச்சரித்திருக்கிறீர்கள். அது இசையமைப்பாளர் சொல்லிக்கொடுத்ததா அல்லது நீங்களாகப் பாடியதா?

பாடலில் சாமி என்கிற வார்த்தை சாமியைக் குறிக்கவில்லை. தன்னுடைய காதலனை ரொமான்டிக்காக அல்லது கிண்டல் செய்யும் விதமாகப் பாடப்படுகிறது. அது எப்படிப் பாடினால் நன்றாக இருக்கும் என்று நானே அந்த நேரத்தில் முடிவு செய்து ‘சாமீய்...’ என்று பாடினேன். அது அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

இந்தப் பாடலை இப்போது கேட்கும்போது எப்படி உணர்கிறீர்கள்?

பொதுவாகவே ஒரு பாடலைப் பாடி முடித்துவிட்டு வந்தபிறகு ஒரு பாடகியாக, இசைக்கோவைக்குப் பிறகு என் குரல், என் குரலாகவே தெரிய வேண்டும் என்று ஆசைப்படுவேன். அந்த ஆசை இந்தப் பாடலில் நிறைவேறி இருக்கிறது. தெலுங்கின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் நடிக்கும் பிரம்மாண்டப் படத்தில், ஒரு மிகப்பெரிய இசையமைப்பாளரிடம் முழுப் பாடலைப் பாட வாய்ப்பு கிடைப்பது மிக அரிதான, மகிழ்ச்சியான விஷயம்.

மேடைக் கச்சேரிகளில் பாடுவதற்கும், திரையில் பின்னணி பாடுவதற்கும் என்ன வேறுபாடு?

மேடைகளில் வெறும் பாட்டு மட்டும் பாடி பார்வையாளர்களைத் திருப்தி செய்துவிட முடியாது. பாடகியாக மட்டுமில்லாமல், கலைஞராகவும் இருக்க வேண்டும். பார்வையாளர்களின் உணர்வுகளுக்கு ஏற்ப, ஆடிப்பாடி, முகபாவம் காட்ட வேண்டும். ஆனால், திரையிசையில் அப்படியில்லை. ஒட்டுமொத்த ஈடுபாட்டையும் கவனத்தையும் ஒருங்கிணைத்துப் பாடியாக வேண்டும்.

மேடையில் சுருதி கொஞ்சம் விலகினாலும், தாளம் தவறினாலும், பாடல் வரிகள் மாறினாலும்கூட கவலைப்பட வேண்டியதில்லை. தவறைக் கண்டுகொள்ள மாட்டார்கள். திரையிசையில் அப்படியில்லை. சிறு தவறுகூட செய்ய முடியாது. இசையோடு சேர்ந்து பயணிக்க வேண்டும். அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. இசையமைப்பாளர்கள் அதைப் புரியவைத்து, அவர்கள் எதிர்பார்ப்பதை எங்களிடமிருந்து பெற்றுக்கொள்கிறார்கள். அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

திரையிசையில் பாடிய பின்னர் உங்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

மிகப்பெரிய மாற்றம், அதுவும் நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எல்லா இடங்களிலும் எங்களைக் கொண்டு சேர்க்கிறது. நிறைய வாய்ப்புகளும் கிடைக்கின்றன. எங்களைப் போன்ற நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நம்பிக்கை தர முடிகிறது. திறமை இருந்தால் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். வாழ்வில் உயர முடியும் என்ற நம்பிக்கையைப் பலரிடம் விதைத்திருக்கிறது.

அதேநேரத்தில் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது போன்ற பலவற்றை இழந்திருக்கிறோம். குழந்தைகள் எனது பெற்றோருடன் திண்டுக்கல்லில் இருக்கிறார்கள். எப்போதாவது நேரம் கிடைக்கும்போதுதான் அவர்களைப்போய் பார்க்க முடிகிறது. அப்படியே புதுக்கோட்டை களபம் சென்று மாமனார், மாமியாரையும் பார்த்துவிட்டு வருகிறோம்.

‘சூப்பர் சிங்க’ரில் உங்களுக்குக் கிடைத்த 5 லட்ச ரூபாயை நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளின் கல்வி செலவுக்காகத் தருவதாகச் சொன்னீர்களே?

அதில் வரிப் பிடித்தம் போகக் கிடைத்தவற்றை, ஒரு சிறிய விழாவாக நடத்தி, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் கல்விக்காக மொத்தமாகவே கொடுத்துவிட்டேன்.

கரோனா காலப் பொதுமுடக்கத்தால் பாதிப்பைச் சந்தித்தீர்களா?

பாதிப்பு இல்லாமல் இருக்குமா? நிறைய பாதிப்புகள் ஏற்பட்டன. கச்சேரிகள் ரத்தானதால், நாங்கள் 10 லட்ச ரூபாய் வரைக்கும் அட்வான்ஸ் திருப்பிக் கொடுத்திருக்கிறோம். அதெல்லாம் கடன் வாங்கித்தான் கொடுத்தோம். அந்தக் காலகட்டத்தில் நாங்கள் கிராமத்தில் இருந்தோம். அதனால் எளிமையான வாழ்க்கையை வாழ முடிந்தது. அதிகம் செலவில்லாமல் சமாளித்தோம். ஒருசில கச்சேரி வாய்ப்புகள் கிடைத்தன. அதை வைத்துச் சமாளித்தோம்.

கரோனா வரவில்லை என்றால் வாழ்க்கை நிலையாகியிருக்கும். முன்பு சிறிய கடன்காரர்களாக இருந்தோம். இப்போது இன்னும் கொஞ்சம் வசதியான கடன்காரர்களாக இருக்கிறோம் அவ்வளவுதான்.

ஆனாலும், எல்லா சூழ்நிலையிலும் வாழப் பழகிக்கொண்டிருக்கிறோம். நீண்ட உடல் ஆரோக்கியத்தைத் தந்தால் போதும் என்றுதான் எப்போதும் கடவுளை வேண்டிக்கொண்டிருக்கிறோம். ஆரோக்கியம் இருந்தால் எல்லாவற்றையும் சம்பாதித்துக்கொள்ளலாம்.

உங்கள் இணையர் செந்தில் கணேஷ் எப்படி இருக்கிறார்?

அருமையாக இருக்கிறார். ‘காப்பான்’, ‘சூரரைப் போற்று’ எனப் பல படங்களில் பாடியிருக்கிறார். வரப்போகும் ஒரு சில படங்களில் ‘ஓபனிங் சாங்’ பாடியிருக்கிறார். அதுவும் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் என்று நம்புகிறோம். என்னுடைய வளர்ச்சியில் அவரும், அவருடைய வளர்ச்சிக்கு நானும் உறுதுணையாக இருக்கிறோம். திருமணத்திற்கு முன்பு நான் எந்த அளவிற்குச் சுதந்திரமாக இருந்தேனோ, அதே சுதந்திரத்தை எனக்கு இன்னும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

உங்களின் எதிர்காலத் திட்டம் என்ன?

யூடியூபின் வளர்ச்சி விஸ்வரூபம் ஆகிக்கொண்டிருக்கிறது. அதை மையமாக வைத்துச் செயல்பட வேண்டும் என்பது திட்டமாக இருக்கிறது. இப்போதும் ஒரு சேனல் நடத்திக்கொண்டிருக் கிறோம். அதை இன்னும் நவீனமயமாக்கி பல பாடகர்களையும் பாடவைத்து அதை விரிவுபடுத்த வேண்டும். அதில் நாம் நினைத்ததைச் செய்ய முடியும். பலருக்கும் வாய்ப்பு தர முடியும்.

யாருடைய இசையில் பாட வேண்டும் என்பது உங்களுடைய கனவாக இருக்கிறது?

சந்தோஷ் நாராயணன் சார் இசையில் பாட வேண்டும் என்பது எனக்கு மிகப்பெரிய கனவு. அவருடைய இசை எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடிக்கும். அது விரைவில் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கிறேன்!

x